Home கட்டுரைகள் கதையல்ல நிஜம் அவளுக்கும்தான் புரியவில்லை...
அவளுக்கும்தான் புரியவில்லை... PDF Print E-mail
Tuesday, 27 March 2018 07:36
Share

அவளுக்கும்தான் புரியவில்லை...

       முஹம்மது ஃபெரோஸ்கான்       

அழைப்பு மணியோசைக் கேட்டதும், ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள் ஜமீலா. டியூசனிலிருந்து திரும்பி வந்திருந்த மகளை அன்போடு அனைத்துக் கொண்டாள்.

'இன்றைக்கு என்ன ஸ்பெஷல் மம்மி?' கேட்டுவிட்டு, புத்தகப்பையைக் கொண்டு போய் மேசையில் வைத்தால் மகள் ஆயிஷா. அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. மின்விசிறியைச் சுழலவிட்டு, சோபாவில் போய்ச் சாய்ந்தால் ஆயிஷா.

'கண்ண மூடிக் கொள்ளுங்கோ' தாயின் கட்டளைப்படி கண்ணை மூடிக் கொண்டாலும், வாயை மூடிக் கொள்ளவில்லை.

தாய் ஏதோ தரப்போகிறாள் எனத் தெரிந்ததும் சந்தோஷத்தில் சிரித்தாள் ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்த சாக்லேட்டைக் கொண்டு வந்து கையில் திணித்தாள் ஜமிலா.

'தேங்யூ மம்மி' கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சாக்லேட்டை சாப்பிடத் தொடங்கினாள். அதைச் சுவைத்துக் கொண்டே 'டிவியைப் போடுங்களேன் மம்மி' என்றாள்.

'ஆ.... மறந்துட்டேன். வீடியோகேஸட் ஒன்று இருக்கிறது. பார்ப்போமா?' மகளிடம் கேட்டுவிட்டு உற்சாகமாக எழுந்து டிவியை ஆன் செய்தாள் ஜமிலா.

'மம்மி அங்க பாருங்க! அப்பா, உம்மும்மா அங்கிள்.... இது யாரோட வெட்டிங் மம்மி?' இது யாரோட வெட்டிங்குனு தெரியலையா? என ஆயிஷாவைப்பார்த்து சிரித்தாள் ஜமிலா.'மம்மி... இது உங்களோட வெட்டிங்கா? சா!... மம்மி நீங்க ப்ரின்ஸஸ் மாதிரி' தாயைக் கட்டிக் கொண்டு, கண்ணத்தில் முத்தமிட்டாள். மகளின் பாராட்டில் பூரித்துப் போனாள் அவள்.

இவ்வளவு நாளும் நான் பார்க்கவில்லையே. இந்த கேஸட் எங்கே இருந்தது?

டேடியோட ஃப்ரென்ட்ஸ் கொண்டு போனாங்க. கைமாறிப் போனது. இத்தனை வருஷத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் வந்து சேர்ந்தது. விளக்கமளித்துக் கொண்டே அவளும் ரசிக்கத் தொடங்கினாள்.

மணக்கோலத்திலிருந்த தன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது ஜமிலாவுக்கு. அப்படியொரு அழகு. சாதாரணமான அவளை அழகான உடையும், மேக்கப்பும், சிகை அலங்காரமும் அழகு ராணியாகக் காட்டியது. நேரிலும், வீடியோவிலும் எத்தனை நூறு பேர் அவளைப் பார்த்து ரசித்திருப்பார்கள்? கூசுவதற்குப் பதிலாக அவள் மனம் குதூகலித்தது.

அந்த வெட்டிங் கேக்கப் பார்த்தீங்களா? மகள். அது மம்மி செஞ்சதுதான். மகளுக்கு விளக்கினாள் ஜமிலா. நேரம் போவது தெரியாமல் தாயும் மகளும் அதில் மூழ்கிப் போனார்கள். மறு நாள்

மறு நாள் சமையல் மும்முரமாக இருந்தால் ஜமிலா. தேங்காயைத் துருவி மூடி வைத்துவிட்டு, வெட்டி வைத்திருந்த மரக்கறிகளை எடுத்து, சமைக்கத் தயாரானபோது எங்கிருந்தோ ஒரு புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்தால் ஆயிஷா.

'இதுல ஒரு ஹதீஸ் வந்திருக்கு மம்மி' என்று கூறிவிட்டு, வாசிக்கத் தொடங்கினாள்.

'எவனொருவன் வேறொரு சமூகத்தைப் பின் பற்றுகின்றானோ அவன் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவனாவான்' திக்கித் திணறி வாசித்து முடித்துவிட்டுக் கேட்டாள். 'அப்படின்னா என்ன மீனிங் மம்மி?'

ஜமிலா தன்பாட்டில் வேலையைக் கவனித்தாள். சிறிது நேரம் நின்று கொண்டிருந்த ஆயிஷா 'மம்மி...' என்று நீட்டி முழக்கவும், சிறிது யோசித்துவிட்டு சொன்னாள். 'முஸ்லிம் அல்லாதவங்களைப் பார்த்து நடக்கிற முஸ்லிம்ஸும் அவங்களைப் போலதானாம்'. - அக்கறையின்றி சொல்லிவிட்டுத் தன்வேலையில் மூழ்கிப்போனாள்.

சாப்பிட்டு முடித்தபின் டிவியை ஆன் செய்தாள். காலையிலிருந்தே பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த ஆங்கிலப்படம் ஏற்கெனவே ஆரம்பமாகியிருந்தது. டிவிச் சத்தம் கேட்ட ஆயிஷாவும் ஓடி வந்து தாயின் அருகில் உட்கார்ந்தாள். படத்தில் சிறுவனொருவனின் பர்த்டே பார்ட்டி- அவர்களோடு ஆயிஷாவும் ஹேப்பி பர்த்டே பாடினாள்.

'மம்மி! இந்த முறை என்பர்த்டேக்கும் இதே மாதிரி கேக் செஞ்சி தரணும்' தாயின் கைகளைப்பிடித்து வேண்டினாள். சரியெனத் தலையாட்டினாள் ஜமிலா.

அதே மாதிரி வீட்டை அலங்கரிக்க வேண்டுமெனவும், அதில் வந்த சிறுவன் உடுத்திருந்தது பொன்ற டைட் ஸ்கர்ட்டும் டீசர்ட்டும் தனக்கும் வேண்டுமெனவும் அவள் கெஞ்சிய போது, அதற்கெல்லம் உடன்பட்டாள் ஜமிலா.

தனக்குள்ள ஒரேயொரு பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்காமல் வேறு யாருக்குத் தான் செய்வது? விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்த குடும்பப் பாங்கான அந்தக் கதை ஜமிலாவை வெகுவாகக் கவர்ந்தது.

'மம்மி உங்களைப் போலவே ஒயிட் மெக்ஸி போட்டு, அதே மாதிரி ஹேர்ஸ்டைல்ஸ ம்ஸ அதே மாதிரி வேல்ஸ. பாருங்க மம்மி' அந்த மணப்பெண்ணைப் பார்க்க ஆயிஷாவுக்கு குதூகலமாக இருந்தது. திடீரென்று மனதுக்குள் ஒரு கேள்வி.தாயிடம் கேட்டாள்.

'மம்மி இவங்களும் முஸ்லிமா?' 'இல்லையே! அவங்க முஸ்லிமல்ல, நான்முஸ்லிம்ஸ் (Non-Muslims)' சொல்லிவிட்டு சிரித்தாள் ஜமிலா.

படத்தைப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்தாள் ஆயிஷா. மீண்டும் மனதுக்குள் ஒரு கேள்வி.

ஓ அப்ப, உங்களுடைய வெட்டிங் நேரத்தில நீங்க முஸ்லிமில்லையா?' அமைதியாக கேட்டாள் ஆயிஷா.

'ஸுப்ஹானல்லாஹ்'! இதென்ன கேள்வி! நாங்கள் எப்பொழுது நான்முஸ்லிமாயிருந்தோம். நாங்க பொறக்கற நேரமே முஸ்லிம்ஸ். எங்களுடைய வாப்பா, உம்மா முஸ்லிம்ஸ். நாங்களும் முஸ்லிம்.' மகள் தெரியாத்தனமாகக் கேட்டுவிட்டதாக நினைத்தாள் ஜமிலா.

'இல்ல மம்மி. உங்களுடைய வெட்டிங்கும் இதே மாதிரி மெக்ஸி, ஹேர்ஸ்டைல், வேல், ஃப்ளவர் கேர்ள்ஸ், வெட்டிங் கேக்ஸ. எல்லாம் இதே மாதிரிதானே!'

'வெட்டிங்னா அப்படித்தான்' 'பர்த்டே, வெட்டிங் எல்லாம் நாமும் அவங்களும் ஒரே மாதிரி செய்தால் அவங்க முஸ்லிமில்லை என்றால் நாம் மட்டும் எப்படி முஸ்லிம்' தாயிடம் கேட்டாள்.

பதிலில்லை.

'அவங்க நான்முஸ்லிம்... சுவர்க்கம் போகமாட்டாங்க என்றால் அவங்களப்போல எல்லாம் செய்யிற நாம் மட்டும் சுவர்க்கம் போறதென்றால் அது எப்படி சொல்லுங்க மம்மி.... எனக்கு ஒன்றுமே விளங்கலை மம்மி'

என்ன பதில் சொல்வது? சிரித்தாள் ஜமிலா.

அவளுக்கும்தான் புரியவில்லை...