Home கட்டுரைகள் சமூக அக்கரை இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு பார்வை!
இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு பார்வை! PDF Print E-mail
Friday, 16 February 2018 07:57
Share

இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு பார்வை!

ஒரு இஸ்லாமிய இயக்கம் என்பது ஒரு சமூக சேவை அல்லது சமூக நலன்புரி அமைப்பு அல்ல! அதாவது இருக்கின்ற சூழ்நிலையை ஜீரணித்து அந்த சூழலோடு ஒத்துப்போய் உம்மத் ஏதோ ஒருவகையில் குறித்த பகுதியில் வாழ்ந்துபோக உதவி புரியும் அமைப்பு அல்ல!

மாறாக இஸ்லாத்தின் மூலமும் அதன் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல் மூலமும் ஆதிக்க எதிர்சூழலோடு எவ்வித சமரசமும் செய்யாமல் தெளிவாகவும் உறுதியாகவும் ஆக்கிரோசமான மோதுகையை மோற்கொள்ள வேண்டிய அமைப்பு.

பித்னா முற்றிலும் இல்லாமல் ஆகி தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே என ஆகிவிடும் வரை அவர்களோடு போரிடுங்கள் என்ற வஹியுடைய வசனம் இஸ்லாம் அல்லாத அதிகார வடிவங்கள் அனைத்தையும் (பித்னா) குழப்பம் என்பதாக வரையறுக்கிறது.

எனவே இத்தகு குழப்பத்தில் இருந்து நன்மையை எதிர்பார்ப்பதே அடிப்படை அறிவீனம்.தாக்கூத்தின் நியாயம், சலுகைகள் எனும் கால்களில் ஹிக்மத்தாக விழுந்து உம்மத்துக்கு நன்மை செய்தல் என்பது தெளிவான சரணடைவு அரசியல்!

இந்த சரணடைவு அரசியலை சாமா்த்திய அணுகுமுறையாக பிரச்சாரம் செய்வதில் இவா்கள் பெருமிதம் கொள்கின்றனா்.

1. இஜ்திஹாதை தம் இலக்கு நோக்கி மிகச் சரியாக வரையறுக்காமை,

2. குறித்த சில தலைவர்களில் தங்கியிருந்து இயக்கம் இலக்கு நோக்கி பயணித்தமை,

3. சூழ்நிலையின் சிக்கல்களுக்கும் மாற்றங்களுக்கும் தம் மனோ இச்சைப் பிரகாரம் முடிவுகளை எடுத்தமை என்பன இஸ்லாமிய இயக்கங்கள் இவ்வாறு குப்ரிய அஜண்டாவுக்குள் முடங்கிப்போக பிரதான காரணங்களாக அமைந்து விட்டன.

190 கோடி ஆள்வளத்தையும் தனக்கென ஒரு பிரத்தியேகமான சித்தாந்த அடையாளத்தையும் கொண்ட ஒரு சமூகம் அந்த இஸ்லாம் எனும் சித்தாந்த அதிகார ஒழுங்கான ஒரே தலமையிலான கிலாபா அரசை நபி வழியில் ஸ்தாபிக்க முடியாத சிந்தனை வீழ்ச்சி என்பது அப்பட்டமான இராஜதந்திர தோல்வி!

இத்தகு அவல நிலையை உம்மத்திற்கு புரியப் படுத்தி இந்த சத்திய சித்தாந்த அரசியல் அலகில் முஸ்லீம் உம்மாவை ஓரணியில் அழைத்துச் செல்ல உருவாக்கப் பட்டவையே அனேகமான இஸ்லாமிய இயக்கங்கள் ஆகும்.

1924ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் திகதி உதுமானிய கிலாபத் வீழ்த்தப் பட்ட பின் தனது சகலவிதமான பாதுகாப்பு நிலைகளையும் வாழ்வியல் ஒழுங்கையும் முஸ்லீம் உம்மத் குப்பார்களிடம் பறி கொடுத்தது! அதன் பின்னரே இஸ்லாமிய இயக்கங்களின் பொற்காலம் ஆரம்பித்தது.

முதலாளித்துவ காலனித்துவ சக்திகள் தமது சதித்துவ சுரண்டல் உலகை உருவாக்க பிரதான தடையாக கிலாபா அரசு இருப்பதை உணர்ந்தே அதனை வீழ்த்தினர்! அத்துடன் மீண்டும் இத்தகு இஸ்லாத்தின் அதிகார அரசியல் எழுந்து வராமல் இருக்க தமது கலாச்சார யுத்தத்தை தொடர்ச்சியாக தொடுத்தனர்.

இத்தகு பாதிப்புகளிலிருந்து முஸ்லீம் உம்மத்தை மீட்டு அதன் இயற்கை வழியான இஸ்லாமிய கலாச்சாரத்தை பயிற்றுவிப்பது தொடர்பில் இஸ்லாமிய இயக்கத்தின் செயற்பாடு அவசியம் என அக்கால அறிஞர்கள் சிலர் சிந்தித்ததின் விளைவாகவும் சில இஸ்லாமிய இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

அதாவது காலனியாதிக்க பாதிப்பில் இருந்து முஸ்லீம் உம்மத்தை மீட்பது என்ற பொது நிலைப் பாட்டினுள் எல்லா இயக்கங்களும் இருந்தன. பின் எவ்வாறு இவா்கள் அந்தர் பல்டி அடித்தன!? அது ஒரு தனிக்கதை!

இஸ்லாத்தை பின்பற்றி வாழ முடியாத அவல நிலையில் முஸ்லீம் உம்மத் தொடா்ந்து வாழும் அநியாயத்தை பொறுக்க முடியாத இஸ்லாமிய சிந்தனாவாதிகளும் இமாம்களும் இஸ்லாமிய மேலாதிக்கத்தை வேண்டிய போராட்டத்தையும் உம்மத்தை அதற்காக சீர்திருத்தி நெறிப்படுத்தும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அத்தகு எண்ணக்கருக்களின் செயல் வடிவங்களாகவே இஸ்லாமிய இயக்கங்கள் தோற்றம் பெற்றன. அது

1. கிலாபத்தை மீள் நிறுவுதல்

2. ஆன்மீக கலாச்சார ரீதியாக உம்மத்தை பயிற்றுவித்தல்,சீர்திருத்துதல்,பாதுகாத்தல்

3. குப்பார்களின் காழ்ப்புணர்வுமிக்க வன்முறை அரசியலுக்கு தக்க பதில் கொடுத்தல்

இப்படி குறிப்பான காரணிகளை மையப்படுத்தி இஸ்லாமிய இயக்கங்கள் தம்மை வரையறுத்தன. இவை தமக்குள் செயற்கட்ட ரீதியாக கருத்து முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் இஸ்லாம்தான் முஸ்லிமை ஆழ வேண்டும் என்பதிலும் இஸ்லாத்தின் சட்டங்களாளேயே முஸ்லீம் உம்மத் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்பதிலும் எவ்வித மாற்றுக்கருத்தையும் ஆரம்பத்தில் இவர்கள் கொண்டிருக்கவில்லை.

இஸ்லாமிய இயக்கங்களின் அபரிமிதமான வளர்ச்சியும் அதன் தொண்டர்களின் அர்ப்பணிப்புகளும் சமூக மட்டத்தை சென்றடைந்த போது அது பாரிய சவால்களை குப்பார்களுக்கு ஏற்படுத்தியது. எனவே காலனித்துவ குப்பார்கள் முஸ்லீம்கள் விவகாரத்தில் சற்று பிரத்தியேகமாக சிந்தித்தனா்.

கருத்துச் சுதந்திரம் மதச் சார்பின்மை சிறுபான்மை உரிமை போன்ற ஜனநாயக அடிப்படை விதிகளோடு முஸ்லீம் மெஜோரிட்டி தேசங்களில் இஸ்லாத்திற்கு முன்னுரிமை என்ற கோசத்தையும் மைனோரிட்டி நிலங்களில் முஸ்லீம் தனியார் சட்டம் போன்ற சில மேற்பூச்சு வடிவங்களை சந்தைப் படுத்தினா்!

அதன் உடனடி விளைவாக சில இஸ்லாமிய இயக்கங்கள் குப்ரின் ஆதிக்க சதித்தனத்தை நம்பி தம்மை வெறும் சமூக நிறுவனங்களாகவும் உம்மத்திற்காக குப்ரிய வாழ்வெழுங்கில் இருந்து உரிமைகளும் சலுகைகளும் கேட்டுப் பெறும் சமூக நிறுவனங்களாகவும் தம்மை குறுக்கிக் கொண்டன!

தனது அடையாளம் பாதுகாக்கப்படுகிறது சில அடிப்படை இபாதாக்களை செய்ய பூரண சுதந்திரமும் கிடைக்கின்றது என்ற அடிப்படையில் குப்ர் சரி காணப்பட்டது! அந்தவகையில் அரசியல் ஆதிக்க அகீதா இஸ்லாமிய இயக்கங்கங்களின் வாய்களின் மூலமே ஹலாலாக பேசவைக்கப்பட்டதுடன் அவர்கள் ஆரம்பத்தில் பேசிய ஹாக்கிமியத் அல்லாஹ்வுக்கே என்ற வாதம் எக்ஸ்பயார்ட் ஆக்கப்பட்டது! இதை ஆதிக்க குப்பாரின் மிகப்பாரிய சிந்தனா யுத்த வெற்றி என்று கூறலாம்.

இகாமதுத்தீன் பேசிய இஸ்லாமிய இயக்கங்கள் இலவு காத்த கதை

மேற்போக்கான குப்ரிய அதிகார சலுகைகளையும் உரிமைகளையும் நம்பிய அநேகமான இஸ்லாமிய இயக்கங்கள் குப்ரியத்தையும் அதன் அதிகார கட்டமைப்பையும் பற்றி எவ்வித எதிர் கருத்துகளையும் சொல்லாமல் குப்ர் தந்த மத சுதந்திரத்தின் எல்லைக்குள் இஸ்லாத்தை பயன்படுத்துவது பற்றி ஒரு பக்கம் சிந்தித்ததோடு குப்ரின் விழுமியங்களை இஸ்லாமியமாக விளக்கம் கொடுக்கும் கைங்கரியத்திலும் இறங்கினர்!

இன்னும் சூழ்நிலையின் விபரீதம் புரிந்து குப்ரின் போலித்தனத்தை எதிர்த்தவர்களை ஏதோ அதிகார வெறி மிக்கவர்கள் போலவும் வழிகேடர்களாகவும் உம்மத்தின் மத்தியில் இவர்கள் இனம்காட்டினர்.

இவ்வாறான அவலநிலைக்குள் சில இஸ்லாமிய இயக்கங்கள் குப்ருக்குள் குடித்தனம் நடத்த துவங்க இகாமதுத்தீன் பேசிய இன்னும் சில இயக்கங்கள் இன்னொரு நூதன வழியை பிரயோகிக்க தொடங்கின. அது குப்ரை மிகைக்க குப்ரை பயன்படுத்தும் சிஸ்டமாகும்! அதன்படி குப்ரிய சிந்தாந்த ஒழுங்கு என்பது ஒரு கருவியாக சிந்திக்கப்படும்.

அதிகாரத்தை பிடிக்க முதலில் குப்ர் ஹிக்மத் அடிப்படையில் அதன் சரத்துகளோடு ஏற்கப்படும் பின் படிமுறை ரீதியில் இஸ்லாம் அமுலாக்கப்படும் என முஸ்லீம் பெரும்பான்மை நிலங்களில் சிந்திக்கப்பட இத்தகு இயக்கங்களின் சிறுபான்மை கிளைகள் முஸ்லீம் சிறுபான்மை சட்டம் என்ற சரணடைவு பிக்ஹை பயன்படுத்த வியூகம் வகுத்தன. அதாவது ஒட்டு மொத்தமாக முதற்கட்டம் குப்ரை உள்வாங்கிய அரசியல் கட்சிகளாக தம்மை உருமாற்றின.

இந்த வகையில் ஹாக்கீமியத் குறித்த அதிகம் கதைத்த இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களும், அரசியல் இயக்கங்களும் ஜனநாயகம், தேசிய அரசியலில் முஸ்லீம் உரிமை, மதச்சார்பின்மையின் கீழான முஸ்லீம் அரசியல், சுதந்திரம் என்ற கருத்தியலின் மூலம் குப்ரிய மேலாதிக்க அரசியலோடு சமரசமாகினர்.

ஆனால் இத்தகு பிற்போக்குத் தனத்தை அத்தகு இயக்க உலமாக்கள் இஸ்லாமாகவும் இபாதத் ஆகவும் பிரச்சாரப் படுத்தினர். இத்தகு விட்டுக்கொடுப்பின் அவலமாக குப்ர் தனது அடுத்தகட்ட பணியை தொடங்கி விட்டது, அது எவ்வாரெனின் அது மத சுதந்திரம் என விட்டுக்கொடுத்த எல்லைகளை தாண்டி அகீதா முதல் இபாதா வரை முஸ்லீம் உம்மத்திடம் தளர்வை வேண்டுகிறது!

இப்போது சத்தியத்தின் சான்றுபகர துணிவோடு இறங்கிய பல இஸ்லாமிய இயக்கங்களும் அதன் உலமாக்களும் குப்ரிய சர்க்காருக்கு சாட்சி சொல்பவா்களாக மாறி நிற்க உம்மத்தின் நிலையோ அந்தோ பரிதாபம்!!

இந்நிலையுணா்ந்து இறைத்தூதின் தூய வழிகாட்டல்களிலிருந்து சமரசமற்ற அரசியல் போராட்டத்தையும், எழுச்சிமிக்க அழைப்புப் பணியையும் மேற்கொள்ள அல்லாஹ்(சுபு) எமக்கு துணை நிற்பானாக!

- Abdur Raheem

source: https://islamicwayoflifestyle.blogspot.in/2018/02/blog-post_86.html