Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ முகநூலில் மார்க்க விஷயங்களை எடுத்து வைப்பது சரியா?
முகநூலில் மார்க்க விஷயங்களை எடுத்து வைப்பது சரியா? PDF Print E-mail
Friday, 09 February 2018 11:36
Share

முகநூலில் மார்க்க விஷயங்களை எடுத்து வைப்பது சரியா?

[ திருக்குர்ஆன் மனிதகுலம் முழுமைக்குமான இறைவேதம். பிரபஞ்சம் முழுக்க அதன் களமே! பொதுக்களமான முகநூலும் அதில் அடக்கம்.

இஸ்லாமை முஸ்லிமல்லாதவர்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த களமாக முகநூல் இருக்கிறது.

வெறுமனே வேடிக்கை விளையாடுக்களை, சந்தோஷத்தை, துக்கத்தை பகிர்ந்து கொள்வதோடு  நின்றுவிடாதீர்கள்.    மக்களை சுவனத்தின்பால் அழைக்கும் பணியையும் செய்யுங்கள்!]

ஒரு சகோதரரின் குற்றச்சாட்டு...

பள்ளிவாசல்ல பயான் பேசுர மாதிரியே பேஸ்புக்ல பேசுனா எவன் கேட்பான்?

இதென்ன முஸ்லீம்கள் மட்டும் இருக்கும் இடமா?

பொதுதளத்தில் பேசத்தெரியாதவர்களை நட்பில் வைத்திருப்பது அமைதிக்கி பங்கம் விளைவித்து நட்பில் நஞ்சு வந்துவிடும்.

நான் முஸ்லீம் தான் எனது மதவழிபாட்டுதளத்திலும் என் இல்லத்திலும்.... அதே நேரம் வேலை பப்ளிக் யாவிலுமே மனிதத்தைவிரும்பும் சராசரி மனிதனே....காரணம் சுமார் 18 வருடங்கள் பலதரப்பட்ட மத மொழி நிறத்தாரோடு வாழ்பவன் அவர்கள் என்னை முஸ்லிமாக பார்ப்பதில்லை பொறுப்பான மனிதனாகவே பார்க்கிறார்கள்.

நபிகள் சொல்கிறார்கள்.... குல்லுகும் ராயின் வர்ராயி மஸ்ஊலுன் அன் ரஃயதிஹி ... யென்று அதாவது யாரெல்லாம் பொறுப்பாளியாக அமர்த்தப்பட்டீர்களோ அவர்கள் தங்கள் பொறுப்பிற்கான பதிலை இறைவனிடம் சொல்லியே தீரவேண்டுமென்று.

ஆகவே நான் அனைவருக்கும் பொறுப்பாளியாக வேலை செய்பவன்... என் மதம் தொழுகை நேரத்தில் தானே வந்துவிடும் அது போதும் மற்றநேரம் நான் பொறுப்பாளியான சக மனிதனே

இது முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல மததுவேஷத்தை தூண்டும் அனைவரும் புரியவேண்டி....

சிலரை அன்பிரண்ட் செய்த பிறகு ..இந்த பதிவு.
பின்குறிப்பு ....

தயவு செய்து இந்த மாதிரி நோக்கமுள்ள புரியாத ஆட்களுக்கெல்லாம் எதுக்கு பொதுதளம் ..அருமயான இந்த தளத்த யூஸ் பண்ணத்தெரியனும் யாவரும் பயன்படும்படி.

- Iskandar Barak அவர்களின் பகிர்வு

முகநூலில் மார்க்க விஷயங்களை எடுத்து வைப்பது சரியா?

//பள்ளிவாசல்ல பயான் பேசுற மாதிரியே பேஸ்புக்ல பேசுனா எவன் கேட்பான்? இதென்ன முஸ்லீம்கள் மட்டும் இருக்கும் இடமா?// ஒரு முஸ்லிம் சகோதரரின் குற்றச்சாட்டு! அவர் சொன்னது சரிதானா என்பதை சிறிது அலசுவோம்.

முகநூல் அனைவருக்கும் சொந்தமான பொதுக் களம் தான். அதன் காரணமாகவே மனித குலத்தின் மீது உண்மையான அக்கரை கொண்ட முஸ்லிம் சகோதரர்கள் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நன்னோக்கில் அனைத்து மக்களும் சுவனத்தை நோக்கிச் செல்லவேண்டும் எனும் நன்னோக்கில் இஸ்லாத்தைப்பற்றி எடுத்து வைக்கின்றனர். தான் மட்டும் சுவனம் சென்றால் போதும் எனும் சுயநலப் பேர்வழிகளல்ல அவர்கள்.

ஈமான் கொள்ளாதவர்களை ஈமானின் பக்கம் அழைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அதற்கு இந்த உலகமே களம்

முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்துவிட்டதால் முஸ்லிம்களாக வளர்ந்து விட்ட நமக்கு இஸ்லாத்தின் முக்கியத்துவமும் அருமையும் புரிந்திருப்பதைவிட, சிந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர்களின் ஈமான் உறுதியாகவும், தெளிவாகவும் இருப்பதை அனைவருமே அறிவோம்.

புதிதாக இஸ்லாமைத் தழுவிய அச்சகோதரர்களில் பெரும்பாலானோர் நம்மிடம் வைக்கும் கேள்வி என்னவாக இருக்கிறதென்றால், "நீங்களெல்லாம் முஸ்லிமாகப் பிறந்து விட்டதால் முஸ்லிமாக இருக்கிறீர்கள்... அதனால் உங்களுக்கு அதன் அருமை பெருமை முக்கியத்துவம் புரியவில்லை. இதற்கு முன் எங்களுக்கு நூற்றுக்கணக்கான முஸ்லிம் நண்பர்கள் இருந்தும், பல ஆண்டுகள் பழகியும் அவர்கள் இஸ்லாத்தைப்பற்றி எங்களுக்கு எடுத்துச் சொல்லவில்லையே...! உங்களின் அலட்சியப்போக்கினால் எங்கள் பெற்றோர்கள் குஃப்ரில் வீழ்ந்து நரகத்தை தேர்ந்தெடுக்கும்படி ஆகிவிட்டதே, அல்லாஹ் உங்களியெல்லாம் சும்மா விடுவானா?'' என்று கண்ணீர் விட்டு அழாத குறையாக எச்சரிப்பது தான்!

தங்களது உண்மையான பொறுப்பு என்னவென்பதை புரியாதவர்களாகவே முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இருக்கின்றனர் என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

//பள்ளிவாசல்ல பயான் பேசுற மாதிரியே பேஸ்புக்ல பேசுனா எவன் கேட்பான்? இதென்ன முஸ்லீம்கள் மட்டும் இருக்கும் இடமா?// என்று ஒரு சகோதரர் கேட்கிறார். பள்ளிவாசல் பயான்களை ஒழுங்காகக்கேட்டு மனதுக்குள் உள் வாங்கியிருந்தால் இதுபோன்ற வார்த்தையெல்லாம் சகோதரர் கொட்டியிருக்க மாட்டார் என்பது நமது கருத்து.

அடுத்து அச்சகோதரர் சொல்வதைக் கேளுங்கள்..

//"குல்லுகும் ராயின் வர்ராயி மஸ்ஊலுன் அன் ரஃயதிஹி" (யாரெல்லாம் பொறுப்பாளியாக அமர்த்தப்பட்டீர்களோ அவர்கள் தங்கள் பொறுப்பிற்கான பதிலை இறைவனிடம் சொல்லியே தீரவேண்டுமென்று)//

இந்த நபிமொழியில் கூறப்பட்டுள்ள பொறுப்பு என்னவென்பதை சகோதரர் சரியாக விளங்கவில்லை என்றே தோன்றுகிறது.

"முகநூலை ஏதோ அவர்களது பரம்பறை சொத்து போல கருதிக்கொண்டு "முகநூலிலெல்லாம் இஸ்லாம் பற்றி சொல்லக்கூடாது... எனும் பாணியில் அர்த்தமற்ற புலம்பல் வேறு!

மேலும் அச்சகோதரர் சொல்வதைக் கேளுங்கள்..

//நான் முஸ்லீம் தான் எனது மதவழிபாட்டுதளத்திலும் என் இல்லத்திலும்....... அதே நேரம் வேலை பப்ளிக் யாவிலுமே... மனிதத்தைவிரும்பும் சராசரி மனிதனே......... காரணம் சுமார் 18 வருடங்கள் பலதரப்பட்ட மத மொழி நிறத்தாரோடு வாழ்பவன் அவர்கள் என்னை முஸ்லிமாக பார்ப்பதில்லை பொறுப்பான மனிதனாகவே பார்க்கிறார்கள்//

சகோதரரே, ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிஷமும்... ஏன் வாழ்நாள் முழுக்க அத்தனை மணித்துளியிலும் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து பாருங்கள் அப்பொழுது தெரியும் உங்களின் உண்மையான பொறுப்பு எது என்பதை!

பொதுவெளியில் உங்களை முஸ்லிமாக காட்டிக்கொண்டு வாழ்ந்தால் பொறுப்பான மனிதனாக மற்றவர்கள் கருத மாட்டார்கள் என்பது உங்களது தவறான கணிப்பு. உண்மையில் மூஸ்லிமாக வாழும்போதுதான் பொதுவெளியில் நமக்கு உண்மையான மதிப்பு. (ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தில் ஏமாந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்காதீர்கள்.)

ஒரு முஸ்லிம் முஸ்லிமாக வாழும்போது உலகம் அவனை எவ்வாறு மதிக்கிறது என்பதனை என்னுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்தே என்னால் சொல்ல முடியும். (தயவுசெய்து இதை என்னைப்பற்றிய சுயவிமர்சனம் என்று எவரும் துளிக்கூட எண்ண வேண்டாம். இந்த இடத்தில் இதைச்சொல்ல வேண்டிய அவசியமிருப்பதால் சொல்கிறேனேயொழிய வேறொன்றுமில்லை.)

நான் பழகும் மாற்றுமத சகோதரர்களுடன் பழகும்போதும் சரி எனது பேச்சில் இறைவசனமோ, நபிமொழியோ இடம்பெறாமல் இருக்காது. அதற்காக அவர்களில் ஒருவர் கூட முக சுளித்ததில்லை என்பது மட்டுமல்ல, நான் சொல்லச்சொல்ல அவர்கள் வயது வித்தியாசமின்றி ஆவலுடன் கேட்பதையும் அனைத்து முறையும் கண்டிருக்கிறேன்.

வயதில் மூத்த சில பிராமணர்களிடம் பேசும்போது அவர்கள் சொர்க்கம் நரகம் பற்றி ஆவலோடு கேட்டு அதிசயிப்பார்கள். கேட்டபிறகு அவர்கள் முகத்தில் ஒருவித இறையச்சம் தென்பட்டு மறைவதை கண்டிருக்கிறேன். பல சந்தேகங்களை மிக ஆவலோடு அவர்கள் கேட்பார்கள். சொன்னால் நம்பவே மாட்டீர்கள், ஒருமுறை சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நான் சிகைச்சை எடுத்துக்கொண்ட போது என்னைவிட 15 வயது மூத்த ஆச்சார பிராமண நண்பர் ஒருவர் என்னுடனேயே தங்கி நட்பின் அடிப்படையில் எனக்கு பணிவிடை செய்தார் (எனது காலைக்கடனை சுத்தம் செய்யக்கூட அவர் தயங்கவில்லை). மனித நேயத்துடன் அவருடன் நான் பழகியிருக்காவிட்டால் இதுபோன்று சம்பவம் நடந்திருக்குமா?

பெரும் கோயில்களில் சில வரிகளை செலுத்துவதற்காக தலைமை அதிகாரிகாரிகளைச் சந்திக்க தொப்பி அணிந்தே நான் செல்லும்போது கூட அவர்கள் எனக்கு அளித்த மரியாதையைக்கண்டு நானே ஆச்சரியப்படுப் போயிருக்கிறேன். முஸ்லிம் முஸ்லிமாக வாழ்ந்து பாருங்கள் அதன் மதிப்பு என்னவென்பதை அல்லாஹ் காண்பிப்பான்.

ஒரு முஸ்லிம் முஸ்லிமாக வாழும்போது அவனைவிட மனிதநேய மிக்க மனிதனாக எவரையுமே ஒப்பிடமுடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட, ஸஹாபாக்களை விட, மார்க்கத்தை உண்மையாக பேணி நடக்கக்கூடியவர்களைவிட உயர்வான, உண்மையான மனிதநேயமிக்கவர்களை உலகெங்கிலும் தேடினாலும் நீங்கள் காண முடியாது. காரணம் உண்மையான முஸ்லிம்களின் மனித நேயம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்காக வேண்டி மட்டுமே! எனவே அதில் தன்னலம், சுயநலம் இருக்காது. பொது நலம் (அதாவது ஒட்டுமொத்த உலகமாந்தர் அனைவருக்கும்) மட்டுமே இருக்கும். உங்களுடைய முஸ்லிம் என்னும் அந்தஸ்தையும், அதன் பொறுப்பையும் சரியாக விளங்கிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இன்னொரு விஷயத்தையும் முக்கியமாக சொல்லியே ஆகவேண்டும். முகநூலில் மார்க்க விஷயங்களை எடுத்துவைப்பதில் கிடைக்கும் நன்மைகளில்... நிச்சயமாக நமது முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்குத் தெரியாத பல மார்க்க விஷயங்களை எளிதாகத் தெரிந்து கொள்கின்றனர் என்பதை எவர்தான் மறுக்க முடியும்?

அல்லாஹ் உங்களுக்கு ஒரு நிஃமத் வழங்கினால் அதை நீங்கள் வெளிப்படுத்துவதை விரும்புகிறான். முஸ்லிம் என்னும் நிஃமத்தைவிட பெரிய நிஃமத் என்ன இருக்கப்போகிறது? அதை வெளிப்படுத்துவதில் அப்படி என்ன தயக்கம் சகோதரருக்கு...?!

பொதுக்களம் எனும்போது அதில் இஸ்லாமுக்கு இடமில்லை என்று நீங்களாக முடிவு செய்வது சரியா?

திருக்குர்ஆன் மனிதகுலம் முழுமைக்குமான இறைவேதம். பிரபஞ்சம் முழுக்க அதன் களமே! பொதுக்களமான முகநூலும் அதில் அடக்கம்.

இஸ்லாமை முஸ்லிமல்லாதவர்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த களமாக முகநூல் இருக்கிறது. வெறுமனே வேடிக்கை விளையாடுக்களை, சந்தோஷத்தை, துக்கத்தை பகிர்ந்து கொள்வதோடு  நின்றுவிடாதீர்கள்.    மக்களை சுவனத்தின்பால் அழைக்கும் பணியையும் செய்யுங்கள்! ஈருலகிலும் மிகச்சிறந்த நன்மையைப் பெறுவீர்கள் இன் ஷா அல்லாஹ்.

அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.

-எம்.ஏ.முஹம்மது அலீ