Home இஸ்லாம் கட்டுரைகள் பாவம் பலவீனப்படுத்தும்!
பாவம் பலவீனப்படுத்தும்! PDF Print E-mail
Tuesday, 26 September 2017 08:05
Share

Image result for worry symbol

பாவம் பலவீனப்படுத்தும்!

    முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.    

மனித இனத்தைப் படைத்த இறைவன் அவன் இப்பரந்த நிலத்தில் வாழ்வதற்கெனச் சட்டதிட்டங்களை வகுத்தான்; கடமைகளையும் உரிமைகளையும் கட்டமைத்தான்; எல்லைகளை நிர்ணயித்தான்; குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டக்கூடாதெனக் கட்டளையிட்டான். இத்தனையும் ஏன் செய்தான்? அவன் இந்நிலத்தில் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

பிறர் மத்தியில் செல்கின்றபோது அவனுடைய மானத்திற்கும் மரியாதைக்கும் இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே சட்டவரையறைகளை நிர்ணயித்தான். அவனுடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவன் செய்துவருகின்ற சின்னச் சின்னப் பாவங்களையும் தவறுகளையும் மறைத்துவிடுகின்றான்.

இறைவன் மனிதனுக்கு விதித்த எல்லைகளை மீறாத வரை அவன் தலைநிமிர்ந்து கம்பீரமாக நடைபோடுகிறான். இறைவன் விதித்த எல்லைகளை அவன் மீறத் தொடங்கிவிட்டால் மனதளவில் தளர்வடைந்துவிடுகிறான். மனத்தில் தளர்வு ஏற்பட்டுவிட்டால் நடையில் கம்பீரம் காணாமல் போய்விடும்.

மனிதன் பாவம் செய்யத் தொடங்கிவிட்டால் அவன் தனது மனத்துணிவை இழந்துவிடுவான்.

எப்போதும் பயமும் அச்சமும் அவனைக் கவ்விக் கொள்ளும்.

எதையும் தீர்மானமாகப் பேசவோ செய்யவோ துணிவு ஏற்படாது.

பிறர்மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவான்; யாரையும் எளிதில் நம்பமாட்டான்.

காரணம் தன்னைப் போலவேதான் பிறரும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

எனவேதான் படைத்தோன் இறைவன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ளுமாறு பகர்கின்றான். மனித உள்ளத்தில் நன்மையைச் செய்யத் தூண்டும் ஓர் உந்துதல் உள்ளதைப் போலவே தீமை செய்யத் தூண்டுவதற்கான ஓர் உந்துதலும் உள்ளது. அது அவனைத் தீமை செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கும். அதை அடக்கித் தன் கட்டுப்பாட்டில் வைத்தால்தான் நன்மையைச் செய்ய முடியும்; அதன்மூலம் தன் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்.

இக் கருப்பொருளைப் பொதிந்துள்ள திருவசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

''நன்மை தீமைகளை அந்த ஆன்மாவுக்கு அறிவித்தவன்மீது சத்தியமாக! யார் (பாவங்களிலிருந்து தன் ஆன்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டான்''. (அல்குர்ஆன் 91: 8-9)

நன்மை எது, தீமை எதுவெனப் படைத்தோன் இறைவன் தெளிவுபடத் திருக்குர்ஆனில் கூறி, சீரான வழியைக் காட்டிவிட்டான். அதன்பின்னர் சீரான பாதையில் நடைபோடுவது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.

"ஷைத்தான் மனிதனின் பகிரங்க எதிரி'' என்று படைத்தோன் இறைவன் திருக்குர்ஆனில் தெளிவாக எடுத்துரைத்துள்ளான். ஆகவே அவன் மனிதனை வீழ்த்துவதற்கான எல்லாச் சூழ்ச்சிகளையும் முயற்சிகளையும் செவ்வனே செய்துகொண்டே இருப்பான். அவனுடைய மிகப்பெரும் வேலை மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுவதுதான்.

மனிதன் பலவீனனாகவே படைக்கப்பட்டுள்ளான். அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி மிக எளிதில் ஷைத்தான் தன் வலையில் அவனைச் சிக்க வைத்து மேன்மேலும் அவனைப் பலவீனனாக ஆக்கிவிடுகின்றான். தவறு செய்த மனிதன் அது வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே இருந்துகொண்டிருக்கிறான். அதன் காரணமாக அவனால் துணிச்சலாக எதையும் செயலாற்ற முடியாது; கம்பீரமாக நடைபோட முடியாது.

அதே உத்தியை இன்றைய யூதர்கள் கையாளுகின்றார்கள். உலகம் முழுவதும் தம்முடைய ஆட்சியே ஓங்கி இருக்க வேண்டுமென்ற நப்பாசையில் அவர்கள் இருந்துகொண்டிருப்பதால் ஆங்காங்கே தவறு செய்யக்கூடியவர்களைக் கண்காணித்து வருகின்றார்கள்.

அரசுப் பதவியில் உள்ளோர் செய்கின்ற பஞ்சமாபாதகச் செயல்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, தக்க தருணம் வரும்போது அவர்கள் செய்த மாபாதகத் தவறுகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுவதாகக் கூறி மிரட்டி அவர்களைத் தமக்கு அடிமையாக்கிக் கொள்கின்றார்கள். பின்னர் தம்முடைய திட்டங்களையெல்லாம் அவர்களை வைத்தே நிறைவேற்றிக்கொள்கின்றார்கள்.

அந்தக் கண்ணோட்டத்தோடு இன்றைய தமிழகத்தை ஒரு கணம் திரும்பிப் பார்த்தால் உண்மை புலப்படும். ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒரே திசையில்தான் பயணிக்கின்றார்கள். ஆளும் கட்சியினர் மத்திய அரசை எதிர்த்து எதுவும் செய்யத் திராணியற்றவர்களாக உள்ளனர்.

தமிழக ஆளும் கட்சியினர் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்துப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகளுக்குத் துணிவில்லை. ஏனென்றால் எதிர்ப்போர் அனைவரும் கடந்த காலங்களில் மாபாதகச் செயல்களைச் செய்தவர்கள்தாம். ஆளும் கட்சியின் கொள்கை முடிவுகளைத் துணிவோடு எதிர்க்கத் தயாராகிவிட்டால் சிறைக்கூடம் தயாராக இருக்கிறது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால்தான் வீரியமாக யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மக்களின் மனத்தைச் சமாதானப்படுத்தும் விதமாக மேலோட்டமான எதிர்ப்பு வார்த்தைகளை மட்டும் அவ்வப்போது உதட்டளவில் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று இந்த உத்தியை உலக அளவில் யூதர்கள் பரவலாகக் கையாண்டு வருகின்றார்கள். ஒரு நாட்டில் அவர்கள் தம் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் போன்றோர் செய்கின்ற தவறுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள்மூலம் அந்நாட்டிற்குள் நுழைந்துவிடுகின்றார்கள். அல்லது அந்நாட்டின் முக்கியப்புள்ளிகளை விலைகொடுத்து வாங்கிவிடுகின்றார்கள்.

பின்னர் அவர்கள் தம் விருப்பம்போல் அதில் செயல்படுகின்றார்கள். ஆக, ஆள்வதோ அந்தந்த நாட்டின் குடிப்பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் தம் விருப்பப்படி ஆட்சி செய்ய முடியாது; குடிமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாலும் முடியாது. அவர்களின் ஆட்சியும் காட்சியும் யூதர்களின் கட்டளைப்படியே இருக்கும்.

நேர்மையான அலுவலர்களும் அதிகாரிகளும் எதிரிகளின் திட்டங்களுக்குத் தடையாக இருப்பார்கள். அவர்களை எப்படியாவது தவறு செய்யவைத்து, அதைப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு மிரட்டத் தொடங்குவார்கள். பின்னர் அவர்களின் தடை உடைபட்டு புதிய மடை திறந்துவிடும். அதன்பின்னர் அவர்கள் தம் விருப்பம்போல் திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். இதுவே இன்றைய நடைமுறை.

இறைவன் விதித்த கட்டளைகளையோ அரசு விதித்துள்ள சட்டங்களையோ மீறும்போது மனது படபடக்கிறது; துடிதுடிக்கிறது; துணிவை இழக்கிறது. இதனால்தான் அல்லாஹ் ஷைத்தான் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறான்.

அவனுடைய வலையில் மாட்டிக்கொள்ளாமல் இறைவன் விதித்த கட்டளைகளை நிறைவேற்றி, தடுத்தவற்றை அறவே செய்யாமல் முற்றிலும் தவிர்ந்துகொண்டு வாழ்வதே மன உறுதியையும் மன நிம்மதியையும் பெற்றுத் தரும்.

ஆகவே ஷைத்தானுடைய மாய வலையில் விழாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள கடுமுயற்சி செய்வதைப்போலவே அரசு விதித்துள்ள சட்டங்களை மீறாமல் நடைபோட்டால் நம்முடைய நன்மையான செயலுக்கு யாரும் தடைபோட முடியாது. அத்தகைய முயற்சியிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வெற்றிவாகை சூட வல்லோன் அல்லாஹ் நல்வாய்ப்பை நல்குவானாக.

source: https://hadi-baquavi.blogspot.in/