Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (3)
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (3) PDF Print E-mail
Friday, 07 July 2017 11:24
Share

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (3)

        Chapter 07      

சக்திச்சொட்டுப் பின்னல் (Quantum Entanglement):

குவாண்ட்டம் பொறிமுறையின் இன்னொரு புரட்சிகரமான கோட்பாடு தான் “சக்திச்சொட்டுப் பின்னல்” கோட்பாடு (Quantum Entanglement Theory). இந்தக் கோட்பாட்டின் சாராம்சம் என்னவென்றால்...

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ஜோடி ஜோடியாகத் தான் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு ஜோடி துகள்களை எடுத்து, அதில் ஒரு துகளை நாம் அளப்பதன் மூலமோ, அல்லது வேறேதும் செயல் மூலமோ ஏதும் ஒரு மாற்றத்தை ஏற்பட்டால், அந்த மாற்றங்களால் குழம்பிய சமநிலையைச் சீர்செய்யும் விதமாக, இந்த மாற்றங்களுக்கு நிகரான எதிர் மாற்றங்கள் அதே கணத்தில் அந்த ஜோடியின் மற்ற துகளில் ஏற்படும். இந்த எதிர் மாற்றம் நிகழ்வதற்கு அந்த ஜோடியின் இரண்டு துகள்களும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

உதாரணத்துக்கு, ஒரு ஜோடி துகள்களை எடுத்து, அதில் ஒரு துகளை இங்கிருக்கும் ஒரு ஆய்வு கூடத்தில் வைத்து விட்டு, மற்றத் துகளைப் பிரித்துக் கொண்டு போய் செவ்வாய்க் கிரகத்தில் வைத்து விட்டு வந்து, இங்கிருக்கும் துகளில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட, அதே நொடிப்பொழுதில் பல கோடி மைல்களுக்கு அப்பால் எந்தத் தொடர்பும் இல்லாமல் செவ்வாய்க் கிரகத்தில் தனித்திருக்கும் அதன் மற்ற ஜோடியில் துல்லியமான எதிர் மாற்றம் ஏற்படும். செவ்வாய்க் கிரகத்தையும் தாண்டி, ஒளியாண்டுகள் தூரத்துக்கு அப்பால் அதை வைத்து விட்டு வந்தாலும், அதே மாற்றம் நிகழும்.

இதைப் புரிந்து கொள்வதற்கு இலகுவாக ஒரு நடைமுறை உதாரணத்தோடு எளிய நடையில் சொல்வதென்றால், ஒரு தங்க மோதிரத்தையும், தங்கக் காசையும் இணை பிரியாத ஜோடிகளாகக் கற்பனை செய்து கொள்வோம். தங்க மோதிரத்தை நம் வீட்டில் வைத்து விட்டு, அதன் ஜோடியான தங்கக் காசை மட்டும் பிரித்துத் தனியே கொண்டு சென்று, ஆயிரம் ஒளியாண்டுகள் தூரத்துக்கு அப்பால் இருக்கும் ஒரு வேற்றுக் கிரகத்தில் வீசி விட்டு வந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது வீட்டிலிருக்கும் தங்க மோதிரத்தை நாம் உருக்கி, அதை ஒரு தங்கக் காசாக மாற்றினால், அங்கு மற்றக் கிரகத்தில் வீசப்பட்ட தங்கக் காசு அதே நொடியில் தங்க மோதிரமாக மாறி விடும்.

என்ன தான் எந்தத் தொடர்பும் இன்றிப் பிரித்து வைத்தாலும், அறிவுக்கு எட்டாத ஏதோ ஒரு பந்தம் ஒவ்வொரு ஜோடி துகள்களுக்கும் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கின்றது என்ற இந்த உண்மையை குவாண்ட்டம் பொறியியல் தான் கண்டுபிடித்தது. மேலும், இந்த உண்மையைப் பல பரிசோதனைகள் மூலம் உலகுக்கு நிரூபித்தும் காட்டியது.

இது எப்படி சாத்தியம்? என்று பலரும் மூக்கின் மேல் விரலை வைக்கத் தொடங்கி விட்டனர். கேள்விக் கணைகள் நாலாபக்கமும் இருந்து குவாண்ட்டம் கோட்பட்டு விஞ்ஞானிகளை நோக்கித் தொடுக்கப்பட்டன. இதற்கும் அவர்கள் சொன்ன பதில்: “ஏன் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இப்படித் தான் உலகம் இயங்குகிறது. வாயை மூடிக்கொண்டு கணித்துக் கூற மட்டும் தான் எம்மால் முடியும்” என்பது தான்.

துகள் ஜோடிகளுக்கு இடயில் நடக்கும் இந்த விசித்திரத் தொடர்பானது, விடை காண முடியாத ஒரு சிக்கலான பந்தமாக இருப்பதால், இதற்கு “சக்திச்சொட்டுப் பின்னல் / சிக்கல்” (Quantum Entanglement) என்ற பெயர் வழங்கப் பட்டது.

இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னெவென்றால், பல ஒளியாண்டுகளைத் தாண்டிய தூரமாக இருந்தாலும், ஒரே கணத்தில் துகள் ஜோடிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றம் நிகழ்வது இங்கு உறுதி செய்யப் படுகிறது. இதை எளிய நடையில் சொல்வதென்றால், ஒளியின் வேகத்தை விடப் பல மடங்கு அதிக வேகத்தில் துகள்களுக்கு இடையில் இந்தத் தகவல்கள் அலைகள் மாறி மாறிப் பயணிக்கின்றன என்பது தான். இதன் மூலமும் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடும், ஒளியைப் பற்றிய ஐன்ஸ்டைனின் நிலைபாடுகளும் முற்றிலும் பொய்யென்பது நிரூபனமாகிறது.

எதற்கெடுத்தாலும் குவாண்ட்டம் கோட்பாட்டை நையாண்டி செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்த அல்பர்ட் ஐன்ஸ்டைன், இந்த “சக்திச்சொட்டுப் பின்னல்” கோட்பாட்டை எப்படியாவது பொய்ப்பித்தே ஆக வேண்டுமென்று எவ்வளவோ முயற்சித்தார். ஆனால், கடைசி வரை அவரால் முடியவில்லை. அவர்களது எந்த விஞ்ஞானத்தாலும் துகள் ஜோடிகளுக்கு இடையில் நடக்கும் இந்த அமானுஷ்ய தொடர்பாடலை பொய்யென்று நிரூபித்துக் காட்டவே முடியவில்லை.

கடைசியில் வேறு வழியின்றி இந்தக் கோட்பாட்டை ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் ஐன்ஸ்டைன் கூட தள்ளப்பட்டார். இருந்தாலும் வழமை போல் இந்த உண்மையையும் நையாண்டி செய்வதை அவர் நிறுத்தவில்லை “தொலைதூரத்தில் அமானுஷ்ய நடவடிக்கை” (Spooky Action at a Distance) என்று முனுமுனுத்தார்.

ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குவாண்ட்டம் கோட்பாடுகளும், ஐன்ஸ்டைன் சார்ந்த கோட்பாடுகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டே இருந்தன. ஏனெனில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான கொள்கைகளாக இருந்தன.

ஒரு பக்கம் ஐன்ஸ்டைன் தனது “சார்பியல் கோட்பாடு” தான் சரியென்று வாதிட்டுக் கொண்டிருந்தார். குவாண்ட்டம் கோட்பாட்டின் “நிச்சயமற்ற சாத்தியக்கூற்றுக் கோட்பாடு” பிழையென்றும், எல்லாமே நிச்சயமானவை தாம் என்றும் ஐன்ஸ்டைன் வாதிட்டுக் கொண்டிருந்தார். “சாத்தியக்கூறுகள் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. ஒவ்வொன்றும் அந்தந்த இடத்தில் நிச்சயமாக இருக்க வேண்டும். நான் பார்க்கும் பொழுது மட்டுமல்ல; பார்க்காத போதும் சந்திரன் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும்.” என்று இறுமாப்போடு கூறினார்.

இன்னொரு பக்கம் குவாண்ட்டம் கோட்பாடு தான் சரியான விஞ்ஞானம் என்று டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியலாளர் “நீல்ஸ் போர்” (Niels Bohr) வாதிட்டுக் கொண்டிருந்தார். எதுவுமே நிச்சயமில்லை; எல்லாமே சாத்தியக்கூறுகள் தாம். இவற்றைத் தீர்மானிப்பது நாமோ, அல்லது அந்தந்தப் பொருட்களோ அல்ல; இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஓர் அமானுஷ்ய சக்தி தான் என்ற தொனிப்பொருளில் இவரது வாதங்கள் இருந்தன.

இருவரும் நேருக்கு நேர் விவாதித்து இதில் யார் சரியென்று பார்ப்போம் என்று ஐன்ஸ்டைன் சவால் விட்டார். நீல்ஸ் போர் சவாலை ஏற்றுக் கொண்டார். விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது.

1927ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் “சோல்வரி” மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் தலசிறந்த 29 விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் முத்தாய்ப்பாக அமைந்தது இந்த விவாதம் தான். விவாதம் காரசாரமாக நடந்து கொண்டிருக்கும் போது குவாண்ட்டம் கோட்பாட்டின் நிச்சயமற்ற சாத்தியக்கூறுகளை ஏளனம் செய்யும் விதமாக ஐன்ஸ்டைன் “பகடைக் காய்களை உருட்டி, சாத்தியக்கூறு பார்த்து விளையாடுவதைத் தவிர கடவுளுக்கு வேறு வேலை இல்லை போலும்” என்று நையாண்டியாகப் பேசினார். இதற்கு நீல்ஸ் போர் சொன்ன பதில்: “ஐன்ஸ்டைன், கடவுள் என்ன செய்ய வேண்டுமென்று கடவுளுக்குத் தெரியும். கடவுளுக்கு நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொடுத்தது போதும்” என்பது தான்.

விவாதத்தின் ஆரம்ப கட்டத்தில் ஐன்ஸ்டைன் சற்று மேலோங்கியிருந்தது போல தோற்றமளித்தலும், இறுதிக் கட்டத்தில் பல வாதங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் ஐன்ஸ்டைன் திண்டாடினார். கடைசியில் வேறு வழியின்றி ஐன்ஸ்டைன் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மேலும், நீல்ஸ் போர் முன்வைத்த பல வாதங்கள் தாம் சரியானவை என்பதும், ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளில் பல பிழைகள் இருப்பதும் பல பரிசோதனைகளின் மூலம் பிற்காலத்தில் நிரூபனமானது.

ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளுக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியை ஷைத்தானியர்களால் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், சாதாரண மனிதனாக இருந்த ஐன்ஸ்டைனை விஞ்ஞான உலகின் சரித்திர நாயகனாக அவர்கள் தான் மீடியாக்கள் மூலமாக மாற்றினார்கள். அதற்காக எண்ணற்ற முயற்சிகளும், சதித்திட்டங்களும் செய்தார்கள். அவ்வாறு கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட ஐன்ஸ்டைன் குறுகிய காலத்துக்குள் குவாண்ட்டம் கோட்பாடுகள் முன்னால் தோற்றுத் தலைகுணிந்தால், அது அவர்களுக்குப் பலத்த நஷ்டம். எனவே, இந்த அறிவியல் யுத்தத்தை வெற்றி தோல்வியற்ற இழுபறி நிலையில் முடிப்பதற்கு ஷைத்தானியர்கள் தீர்மானித்தார்கள்.

முதல் கட்ட நடவடிக்கையாக, ஐன்ஸ்டைன் மூலம் “சர்வக் கோட்பாடு” (Theory of Everything) என்ற ஒரு புது சித்தாந்தத்தை வெளியிட்டார்கள். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், “ஐன்ஸ்டைன் சொல்வதும் சரி; குவாண்ட்டம் கோட்பாடு சொல்வதும் சரி. இரண்டும் வெவ்வேறு கோணங்களில் அனுகியிருக்கின்றன. அவ்வளவு தான் வித்தியாசம்” என்பது போல் ஒரு மழுப்பலான சித்தாந்தத்தை முன்வைத்தார்கள். இதன் மூலம் ஐன்ஸ்டைனின் கௌரவம் காற்றில் பறந்து விடாமல் ஓரளவு காப்பாற்றிக் கொண்டார்கள்.

அடுத்த கட்டமாக குவாண்ட்டம் பொறியியலுக்குள் ஊடுறுவி, அதையும் மாசு படுத்தும் நோக்கில் பல கைப்பாவை விஞ்ஞானிகளை உள்ளே நுழைத்தார்கள். கடைசியில் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு விஞ்ஞானக் கோட்பாடுகளையும் பித்தலாட்டங்கள் மூலம் கலந்து, குழப்பியடித்து, ஒரு புதுக் கதம்பத்தை உருவாக்கினார்கள். இந்தப் புதிய கோட்பாட்டுக்கு, “ஒருங்கிணைக்கப்பட்ட புலக் கோட்பாடு” (Unified Field Theory) என்று பெயரிட்டு, அதை ஒரு நவீன மைய நீரோட்ட விஞ்ஞானக் கோட்பாடாக இன்றைய விஞ்ஞான உலகில் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் புதிய இயற்பியல் கோட்பாடுகளைப் படிக்கப் போகிறவர் யாராக இருந்தாலும், படிக்குமுன் இருந்ததை விட இன்னும் அதிக குழப்பத்தோடு தான் படித்து முடித்த பின் வீடு திரும்புவார்கள். ஏனெனில் உள்ளிருக்கும் ஷைத்தானிய குழப்பம் புரியவே கூடாது என்பதற்காக, உண்மைகளோடு பொய்களையும் கலந்து, குழப்பத்துக்குள் குழப்பமாக மொத்தத்தையும் குழப்பி வைத்திருக்கிறார்கள்.

இன்றைய இயற்பியல் விஞ்ஞானத்தின் ஒரு பாதியை குவாண்ட்டம் கோட்பாடுகள் வழிநடத்த, இன்னொரு பகுதியை ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகளே இன்று வரை ஆண்டு கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கொன்று முரணான இந்த இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையில் இன்று இன்னும் பல நவீன கோட்பாடுகள் முளைத்திருக்கின்றன. “துகள் இயற்பியல்” (Particle Physics), “இழைக் கோட்பாடு” (String Theory) போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவ்வாறு ஒன்றுக்குள் ஒன்று குழப்பியடிக்கப்பட்ட கதம்பமாக இன்றைய மையநீரோட்ட விஞ்ஞானம் கற்பிக்கப்பட்ட போதும், குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கென்று இன்று வரை இருக்கும் தனித்துவமான மதிப்பு குறையவில்லை.

இயற்பியல் (Physics) துறையில் மட்டும் ஆரம்பத்தில் பரிணமித்த குவாண்ட்டம் கோட்பாடுகள் இன்று உயிரியல் துறையிலும் தனது பங்களிப்பைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கு அமைய இன்று பல விஞ்ஞானிகள் உயிரினங்கள் பற்றி ஆரம்பித்திருக்கும் பல புதிய ஆய்வுகளின் விளைவாக விஞ்ஞான உலகில் இன்று “சக்திச்சொட்டு உயிரியல்” (Quantum Biology) எனும் புதிய ஒரு துறையே முளைத்திருக்கிறது.

விஞ்ஞான உலகின் இந்த வரலாற்றையெல்லாம் சொன்னதன் நோக்கம் ஒன்றேயொன்று தான்:

இறைவனை மறுக்கும் விதமான எந்த விஞ்ஞானமும் உண்மையான விஞ்ஞானம் அல்ல. அது பித்தலாட்டம் மட்டுமே. படைத்த இறைவனையும், அவனது ஆற்றல்களையும் தெளிவான நடையில் விளக்கும் விதமாக எந்தக் கல்வி இருக்கிறதோ, அது தான் உண்மையான விஞ்ஞானம்.

குவாண்ட்டம் கோட்பாடுகள் படைத்த இறைவனின் அபார சக்திகளைப் பறைசாற்றும் விதமாகவே அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இது தான் உண்மையான விஞ்ஞானம். அல்லாஹ் ஆதி மனிதனுக்குக் கற்றுக்கொடுத்த சரியான ஞானத்தின் ஒரு பகுதியாக இது தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், இந்த உண்மையான ஞானத்தையும் கூடிய சீக்கிரத்தில் ஷைத்தானியர்கள் வழமை போல் மாசுபடுத்தத் தான் போகிறார்கள். அப்படி மாசுபடுத்தப்பட்டு, இந்த விஞ்ஞானமும் உருக்குலைந்து போகும் முன், இது சொல்லும் ஒரு முக்கிய செய்தியை உங்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டுவதற்காகவே இந்த நீண்ட பீடிகை சொல்லப்பட்டது.

குவாண்ட்டம் கோட்பாட்டின் வெளிச்சத்தில் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது பின்வரும் நிலைபாட்டைத் தான் நாம் அடைவோம்:

எமக்குள்ளேயும், எம்மைச் சுற்றியும், எம் கண்ணெதிரிலும் எமது கண்களுக்கும், கருவிகளுக்கும் புலப்படாத இன்னொரு உலகம் வியாபித்திருக்கிறது. இந்த உலகத்தையும், இதில் வசிக்கும் ஜீவராசிகளையும் பார்க்கும் சக்தி நம் கருவிகளுக்கு இல்லை. ஏனெனில் இவற்றின் வேகம் ஒளியின் வேகத்தையும் தாண்டியது.

இந்த மறைவான உலகம் நம் கண்களுக்கும், கருவிகளுக்கும் புலப்படவில்லை என்பதற்காக அப்படியோர் உலகம் இல்லையென்று சொன்னால், அதைவிட முட்டாள்தனம் எதுவும் கிடையாது. இந்த மறைவான உலகத்திலிருக்கும் ஜீவராசிகள் நம்மை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. அவற்றின் தொழினுட்பங்கள் நமது தொழினுட்பங்களை விட அபாரமானவை. ஏனெனில் அங்கு உபயோகத்திலிருக்கும் சக்தி நமது முப்பரிமாண உலகின் சக்தியை விட வேகத்தாலும், ஆற்றலாலும் பல மடங்கு அதிகம்.

மேலும், குவாண்ட்டம் கோட்பாடுகள் முன்வைக்கும் பல கருத்துக்களை மெய்ப்பிக்கும் விதமாகவே இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆன், மற்றும் ஹதீஸ் பதிவுகள் கூட அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒருசிலதை இப்போது பார்க்கலாம்:

உண்மை 1 (காலம் / நேரம் பற்றிய சரியான நிலைபாடு):

ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் பிரகாரம், காலம் / நேரம் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பரிமானம் மட்டுமே. இதை நமது பாஷையில் கூறுவதென்றால், காலம் என்பது ஒரு படைப்பு மட்டுமே. உண்மையில் இந்தக் கோட்பாடு மார்க்கத்துக்கு முரணானது. இஸ்லாத்தின் பார்வையில் காலம் / நேரம் என்பது ஒரு படைப்பு அல்ல; மாறாக, படைப்புகளையே நிர்வகிக்கக் கூடிய, அல்லாஹ்வைச் சார்ந்த ஓர் அம்சம் தான் காலம் என்பது. காலத்தை மனித அறிவின் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

மார்க்கம் முன்வைக்கும் இந்தக் கருத்தை ஆதரிக்கும் விதமாகவே சக்திச்சொட்டுக் கோட்பாட்டின் வாதங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே, இது தான் மார்க்கத்துக்கு நெருக்கமான சரியான விஞ்ஞானம். பின்வரும் மார்க்க ஆதாரங்களை உன்னிப்பாக அவதானிக்கும் போது இந்த உண்மை புலப்படும்:

ஆதாரம் 1:

“அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் காலத்தை ஏசுகிறான். காலம் என்பது நான் தான். எனது கையிலேயே இரவு பகல் ஆகியன உள்ளது.” (நூல்: புகாரி 6181)

ஆதாரம் 2:

அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் ஆவேன். என் கரத்திலேயே அதிகாரம் அனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்'' (நூல்: புகாரி 7491)

இந்த இரண்டு ஹதீஸ்களையும் உற்று நோக்கும் போது, ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. காலம் என்பது அல்லாஹ் படைத்த ஏனைய படைப்புகளைப் போன்ற ஒரு படைப்பு அல்ல; மாறாக அது அல்லாஹ்வோடு இரண்டறக் கலந்திருக்கும் ஓர் அம்சம்; அவனுக்கே மட்டும் உரித்தான அவன் சார்ந்த ஓர் அம்சம் என்பது இந்த ஹதீஸ்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் கருத்தைத் தான் அல்லாஹ் “காலம் என்பது நான் தான்” என்று சுற்றிவளைக்காமல், நேரடியான பதப்பிரயோகத்தில் இங்கு சொல்லியிருக்கிறான். “நானே காலத்தைப் படைத்தவன்” என்ற தொனியில் இந்த ஹதீஸ்களில் எதுவுமே சொல்லப்படவில்லை. ஹதீஸ்களை உன்னிப்பாக நோக்கினால், இது தெளிவாக விளங்கும்.

மேலும், “நானே காலம்” என்று சொன்னதோடு மட்டும் அல்லாஹ் நிறுத்திக் கொள்ளவில்லை; அதைத் தொடர்ந்து இன்னும் சில செய்திகளை மேலதிகமாகக் கூறுகிறான். “இரவையும், பகலையும் நானே நிர்வகிக்கிறேன்” என்றும் சேர்த்துக் கூறுகிறான். இதைப் பின்வரும் விதத்தில் நாம் விளங்கலாம்:

“இரவு, பகல் மாறிமாறி வருவதென்பது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது” என்று யாராவது சொன்னால், அது தான் உண்மையென்று நாம் அனைவரும் ஒத்துக் கொள்வோம்; இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதே நேரம் “இரவு பகல் மாறிமாரி வருவது என்பது காலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று இன்னொருவர் சொன்னால், அதுவும் உண்மை என்று தான் நாம் சொல்வோம்.

ஒரே நேரத்தில் இரண்டு கூற்றுக்கள் உண்மையாக இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த இடத்தில் மட்டும் இரண்டு கூற்றுக்களுமே உண்மையாக இருக்கின்றன. அது ஏன்? இதற்கான பதில், இந்த இரண்டு உண்மைகளையும் இணைத்து ஒரே உண்மையாக விளங்க முயற்சிப்பதில் தான் இருக்கிறது.

அதாவது, இந்த இரண்டு உண்மையையும் இணைத்து விளங்கும் போது, காலம் என்பது அல்லாஹ் படைத்த ஒரு படைப்பு அல்ல; மாறாக, காலம் என்பது படைப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று; அல்லாஹ்விடமிருந்து பிரித்து நோக்க முடியாத, அல்லாஹ்வின் நிர்வாகம் சார்ந்த ஓர் அம்சமே காலம் என்ற பேருண்மை புரியும்.

இந்த உண்மையைத் தான் அல்லாஹ் “நான் வேறு, காலம் வேறு அல்ல” என்ற கருத்தில் “காலம் என்பது நான் தான்” என்று கூறுகிறான். இதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக இதே ஹதீஸின் இன்னொரு பகுதி அமைந்திருப்பதைப் பார்க்கலாம்:

“ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான்; அவன் காலத்தை ஏசுகிறான்” எனும் இந்த வசனம், கருத்துமுரண்பாட்டுக்கே இடமில்லாமல் நமது கருத்தை நிரூபிக்கிறது. அதாவது, என்னை ஒருத்தர் புண்படுத்த வேண்டுமென்றால், அவர் என் தேகத்தைப் புண்படுத்த வேண்டும்; அல்லது என் மனதைப் புண்படுத்தும் விதமாக என்னோடு ஒட்டியிருக்கும் எனது இரத்த உறவுகள் போன்ற எதையாவது புண்படுத்த வேண்டும். இது தான் யதார்த்தம்.

அல்லாஹ்வோ தனித்துவமானவன்; அவனுக்கு இணை, துணை எதுவும் கிடையாது. ஆகவே, உறவுகள் என்பதை இங்கு தட்டிக்கழித்து விட வேண்டும். தனித்த இறைவனாக இருக்கும் அல்லாஹ்வைப் புண்படுத்துவதென்றால், அவனோடு ஒட்டியிருக்கும் ஏதோ ஓர் அம்சத்தைப் புண்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியம்.

காலம் என்பது அல்லாஹ்விடமிருந்து பிரித்து நோக்க முடியாத ஓர் அம்சம் என்பதை இது இன்னும் ஊர்ஜிதம் செய்கிறது. இதனால் தான், காலத்தை மனிதன் திட்டும் போது, அது தன்னையே நேரடியாகத் திட்டுவதைப் போல் அல்லாஹ் உணர்கிறான் என்பதையே இங்கு அல்லாஹ், “என்னைப் புண்படுத்துகிறான் / என்னை நோவினை செய்கிறான்” என்ற கருத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

ஆதாரம் 3:

உமது இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (அல்குர்ஆன் 7:54)

இந்தக் குர்ஆன் வசனத்திலிருந்தும் மேலும் சில உண்மைகள் புலப்படுகின்றன:

1. மொத்தப் பிரபஞ்சத்தையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக இங்கு கூறுகிறான். இதிலிருந்தே காலம் (நாட்கள், இரவு / பகல்) என்பது, இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே அல்லாஹ்வோடு இருக்கக் கூடிய அம்சம் என்பது இந்த வசனத்தின் மூலம் துல்லியமாகத் தெரிகிறது.

2. காலத்தின் இன்னொரு வடிவமாக இருக்கும் இரவு / பகல் எனும் அம்சங்கள் கூட நாம் நினைப்பது போல் இந்தப் பூமி தன்னைத் தானே சுழல்வதிலும், சூரியனைச் சுற்றி வருவதிலும் மட்டுமே தங்கியிருக்கும் அம்சங்கள் அல்ல; மாறாக, பூமி, சூரியன் போன்றவற்றை உள்ளடக்கிய உடுத் தொகுதிகளைப் படைப்பதற்கு முற்பட்ட, ஆதி நிலையிலேயே இரவு / பகல் எனும் காலத்தின் வடிவங்கள் கூட அல்லாஹ்வின் பால் இருந்த அம்சங்கள் என்பதுவும் இங்கு புலப்படுகிறது.

இந்த உண்மைகள் கூட, காலம் என்பது அல்லாஹ்வின் ஒரு படைப்பு அல்ல; மாறாக, நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட, அல்லாஹ்வைச் சார்ந்த ஓர் அம்சம் எனும் கருத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றன.

      Chapter 08      

உண்மை 2 (ஒளியின் வேகம்):

ஒளியின் வேகத்தை மிஞ்சிய எந்தவொன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் கிடையாது என்பது தான் ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது வாதம். இந்த வாதம் கூட முற்றிலும் மார்க்கத்துக்கு முரணானது. ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகம் கொண்ட பல அம்சங்கள் இந்தப் பேரண்டத்தில் இருக்கத் தான் செய்கின்றன என்பது தான் இஸ்லாம் கூறும் உண்மை.

ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன என்ற இந்த உண்மையைக் கூட மெய்ப்பிக்கும் விதமாகவே சக்திச்சொட்டுக் கோட்பாட்டின் கருத்துக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆகவே, இங்கும் மார்க்கத்துக்கு நெருக்கமான சரியான விஞ்ஞானமாக சக்திச்சொட்டுக் கோட்பாடுகள் தான் திகழ்கின்றன. பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் இதை விளங்கிக் கொள்ளலாம்:

ஆதாரம்:

பின்னர் இருமுறை (உன்) பார்வையை மீட்டி(வானத்தை)ப் பார்;
(உன்) பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடமே திரும்பும்.
(அல் குர்ஆன் – 67:4)

நாம் வாழும் இந்தப் பூமி சூரிய குடும்பத்தின் ஓர் அங்கம் என்பது நாம் அறிந்த விடயம். பூமியை விடப் பல்லாயிரம் மடங்கு விசாலமானது இந்த சூரிய குடும்பம். இது போன்ற இன்னும் பத்தாயிரம் கோடி சூரிய குடும்பங்களை உள்ளடக்கியது தான் “பால்வீதி” எனும் நமது காலெக்ஸி (Milky way Galaxy).

“பால்வீதி” எனும் நமது காலெக்ஸியைப் போல் இன்னும் இருபதாயிரம் கோடி கலெக்ஸிகள் இந்தப் பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்பது தான் சமகால விஞ்ஞானத்தின் அனுமானம். இதை வைத்து மட்டும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எத்தனை கோடானுகோடி ஒளியாண்டுகள் தூரத்துக்கு இந்தப் பிரபஞ்சம் வியாபித்திருக்கின்றது என்பதை நீங்களே உணரலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சம் மொத்தமும் முதலாவது வானத்துக்கு (அடிவானத்துக்கு) கீழே தான் இருக்கிறது என்று இஸ்லாம் கூறுகிறது. மேலும், இதையும் தாண்டி இன்னும் ஆறு வானங்கள் நமது கற்பனைக்கே எட்டாத தூரத்தில் இருப்பதாக வேறு இஸ்லாம் கூறுகிறது.

அதாவது பல்லாயிரம் கோடி ஒளியாண்டுகள் தூரம் பயணித்துப் பிரபஞ்சத்தின் எல்லையை அடைந்தாலும், அது முதலாவது வானத்தைத் தொட்டதாகக் கூட இருக்காது. அல்லாஹ்வின் சாம்ராஜ்ஜியத்தின் விசாலம் எத்தகையதென்பதை ஒரு முஃமின் புரிந்து கொள்வதற்கு இந்த ஓர் உண்மையே போதுமானதாக இருக்கும்.

ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் இதை இன்னும் கொஞ்சம் இலகுவாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். உதாரணத்துக்கு இன்று நாம் ஓர் அதிவேக வின்கலத்தில் ஏறிப் பிரபஞ்சத்தின் எல்லையை நோக்கி ஒளியின் வேகத்தில் (நொடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில்) பயணிக்க ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். பயணிக்கத் தொடங்கியது முதல், எந்த இடத்திலும் நிறுத்தாமல் நாம் பயனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நமது ஆயுட்காலம் மொத்தமும் அந்த வின்கலத்துக்குள்ளேயே கழியும் வரை பயனித்தாலும், நம் ஆயுட்காலத்துக்குள் பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியாது.

ஒரு வாதத்துக்கு, நாம் தனியாகப் பயணிக்காமல், குடும்பத்தோடு பயணிப்பதாக நினைத்துக் கொள்வோம். பயணம் செய்து கொண்டே நாம் அந்த வின்கலத்துக்கு உள்ளேயே உண்டு, உறங்கி, இனப்பெருக்கமும் செய்து கொண்டே இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கொஞ்ச தூரம் போவதற்குள் நமது ஆயுள் முடிந்து நாம் இறந்து விடுவோம்.

நம்மைத் தொடர்ந்து நமது சந்ததிகள் தலைமுறை தலைமுறையாக இந்தப் பயணத்தை விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால்... ஒரு தலைமுறையல்ல; இரு தலைமுறைகளல்ல; பல கோடி தலைமுறைகளைத் தாண்டிய நமது சந்ததிகள் தாம் இறுதியில் பிரபஞ்சத்தின் எல்லையைச் சென்று அடைவார்கள்.

அப்படியே அவர்கள் எல்லையை அடைந்தாலும், அது முதலாவது வானத்தைத் தொட்டதாகக் கூட ஆகாது. பிறகு அங்கிருந்து முதலாம் வானத்தை நோக்கி இன்னும் எத்தனை கோடி தலைமுறைகளின் தூரம் பயணிக்க வேண்டுமென்பது யாருக்குமே தெரியாது. மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆற்றலின் எல்லையென்பது எவ்வளவு அற்பமானது என்பதை இதன் மூலம் சிந்திப்போர் புரிந்து கொள்வர்.

சுருங்கக் கூறினால், எந்தவொரு மனிதனாலும், என்ன தான் தலையைக் குத்தி நின்றாலும் முதல் வானத்தைப் பார்க்கக் கூட முடியாது. முதல் வானத்தைச் சென்றடையும் அளவுக்கு நமது பார்வைக்குப் போதிய சக்தியோ, வேகமோ கிடையாது. ஏனெனில், நமது பார்வை, மற்றும் கருவிகள் போன்ற அனைத்தின் ஆற்றலுமே ஒளியின் வேகத்துக்கு உட்பட்டவை தாம்; அதைத் தாண்டியவை அல்ல.

நமது ஆயுட்காலத்துக்குள் முதல் வானத்தைப் பார்க்கவோ / அடையவோ வேண்டுமென்றால், அதற்கு ஒளியின் வேகத்தையும், சக்தியையும் விடப் பல மடங்கு அதிக வேகமும், ஆற்றலும் தேவை. இதனால் தான், இந்த அதிநவீன விஞ்ஞான யுகத்தில் கூட, இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தாண்டிய எதையுமே பார்க்கக் கூட முடியாத அளவுக்கு மனிதன் அற்பமானவனாகவே இருக்கிறான்.

ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றமான ஒரு சூழ்நிலை தான் வானவர்கள், மற்றும் ஜின்கள் போன்ற மறைவான படைப்பினங்களின் பரிமாணத்தில் நிலவுகின்றது. ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகத்தில் பயணம் செய்யும் வல்லமை வானவர்கள், ஜின்கள் போன்ற படைப்பினங்களுக்கு இருக்கின்றது. இதனால் தான், எங்களைப் போலல்லாது இவர்களால் வானத்தின் எல்லையை அடைய முடிகிறது.

இந்தப் பேருண்மையைத் தான் அல்லாஹ் மேற்கண்ட குர்ஆன் வசனத்தில், “உன் பார்வை சிறுமையடைந்து உன்னிடமே திரும்பும்” என்று மனிதனைப் பார்த்துக் கூறிக் காட்டுகிறான்.

இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளும் மறைமுகமான பேருண்மை என்ன?

ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகமும், ஆற்றலும் கொண்ட பல மறைவான அம்சங்கள் இந்த உலகில் இருக்கின்றன என்பது தான் அந்தப் பேருண்மை. குவாண்ட்டம் கோட்பாடு மறைமுகமாக உணர்த்தும் இதே உண்மையைத் தான் இஸ்லாம் கூட உணர்த்துகிறது என்பது கூட இங்கு புரிகிறது. இதன் மூலம், இந்த விஞ்ஞானம் தான் மார்க்கத்துக்கு நெருக்கமான சரியான விஞ்ஞானம் என்பதுவும் மீண்டும் ஒருமுறை இங்கு நிரூபனமாகிறது.

மேலும், ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது சார்பியல் கோட்பாடு போன்ற போலியான நாத்திக விஞ்ஞானத்துக்கும் இதன் மூலம் அல்லாஹ் சாவு மணியடிக்கிறான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மை 3 (ஜோடிக் கட்டமைப்பு):

துகள்களின் ஜோடிக் கட்டமைப்பை விளக்கும் “சக்திச் சொட்டுப் பின்னல்” (Quantum Entanglement) எனும் கோட்பாட்டுக்கு நெருக்கமாகவே இஸ்லாத்தின் நிலைபாடுகள் கூட இருப்பதைப் பார்க்க முடிகிறது. பின்வரும் குர்ஆன் வசனம் இதை உறுதிப்படுத்துகிறது:

ஆதாரம்:
“நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.” – (51:49)

இங்கு அல்லாஹ் “நீங்கள் சிந்திப்பதற்காக” என்று கூறுகிறான். அதாவது சிந்திப்பவர்களுக்குத் தான் இந்த ஜோடிக் கட்டமைப்பு எவ்வளவு ஆழத்துக்கு அவன் படைப்புகளில் ஊடுறுவியிருக்கிறதென்பது விளங்கும். உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடுகிறேன்:

தேன் சேகரிக்கச் செல்லும் சில தேனீக்கள், பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டிய தொலைதூரங்களுக்குச் சென்று தேனைச் சேகரித்துக் கொண்டு, கொஞ்சம் கூட வழி தவறாமல் திரும்பவும் தமது கூட்டுக்கு வந்து சேர்கின்றன.

மேலும், கண்டம் விட்டுக் கண்டம் நோக்கிப் பறந்து செல்லும் பல பறவையினங்கள், ஆண்டுதோறும் தவறாமல் ஓரிடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னோர் இடத்துக்கு அச்சுப் பிசகாமல், கொஞ்சம் கூட வழி தவறாமல் வந்து சேரும். அதே போல் திரும்பவும் பழைய இடத்துக்கு வழிதவறாமல் திரும்பிச் செல்லும்.

இவ்வாறான ஜீவராசிகள் இவ்வளவு நுணுக்கமாக எப்படி வழிகளை அறிந்து கொள்கிறது என்பதை சென்ற நூற்றாண்டுகளில் ஆய்வு செய்த பல விஞ்ஞானிகள், இறுதியில் ஓரளவுக்கு உண்மையைக் கண்டுபிடித்தார்கள். அதாவது இந்தப் பூமியின் மின்காந்தப் புலனை (Electromagnetic field) அடிப்படையாகக் கொண்டு தான் இவ்வாறான ஜீவராசிகள் தமது பயணப் பாதைகளைத் துல்லியமாக வகுத்துக் கொள்கின்றன என்ற உண்மை தான் அது.

இருந்தாலும், இவ்வளவையும் கண்டறிந்த அன்றைய விஞ்ஞானத்தால், அது எப்படி? என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டறிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், சமகாலத்தில் வாழக்கூடிய சில விஞ்ஞானிகள், குவாண்ட்டம் கோட்பாடுகளின் அடிப்படையில் சில பறவையினங்களை ஆய்வு செய்த போது தான் உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து வியந்து போனார்கள். இவ்வாறான ஜீவராசிகளின் புலன்கள் இயங்குவது “சக்திச்சொட்டுப் பின்னல்” எனும் ஜோடிக் கட்டமைப்புத் தத்துவத்தின் அடிப்படையில் தான் என்ற உண்மை தான் அது.

அதாவது, பறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அவற்றின் பார்வைப் புலனுக்கும் பூமியின் மின்காந்தப் புலத்துக்கும் இடையில் தொடர்ச்சியான சக்திச்சொட்டுப் பின்னல் தொடர்பு நிலவிக் கொண்டேயிருக்கின்றது. இந்தச் சக்திச்சொட்டுப் பின்னல் உறவு மூலமே ஒவ்வொரு கணப் பொழுதிலும் தான் பயணிக்கும் பாதை சரியானதா? தவறானதா என்பதை அவற்றால் துல்லியமாகக் கண்டறிந்து கொள்ள முடிகிறது.

இதன் விளைவாக எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கூட்டை விட்டுச் சென்றாலும், சரியான பயணப் பாதையைத் துல்லியமாகக் கண்டறிந்து, வழி தவறாமல் இவ்வாறான பறவைகள் வீடு வந்து சேர்கின்றன என்பது தான் இதுவரை மனிதன் புரிந்து கொள்ளத் தவறிய உண்மை.

இதே போல், திருடனின் சட்டையை ஒரு தரம் முகர்ந்து பார்த்து விட்டு, அவன் எவ்வளவு தூரத்தில் ஒளிந்திருந்தாலும், அவனைச் சரியாக மோப்பம் பிடித்து, போலீஸ் நாய்கள் அடையாளம் கண்டு கொள்வது போன்ற செயற்பாடுகள் கூட இவ்வாறான சக்திச்சொட்டுப் பின்னல் பொறிமுறை மூலம் தான் நடைபெறுகிறது.

இந்த உண்மையைக் கூட சக்திச்சொட்டுக் கோட்பாடுகள் தாம் சரியாக அடையாளம் கண்டுகொண்டன. மேற்குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் உடன்பட்ட அமைப்பில் தான் குவாண்ட்டம் பொறியியலின் இந்தக் கோட்பாடு கூட இருக்கிறது என்பது இங்கு நமக்குப் புலப்படுகிறது.

உண்மை 4 (உயிருள்ள பிரபஞ்சம்):

குவாண்ட்டம் கோட்பாடுகளின் பிரகாரம் உணர்த்தப்படும் இன்னொரு மறைமுகமான உண்மை தான், இந்தப் பிரபஞ்சம் என்பது உயிரற்ற, உணர்வற்ற வெறும் சடப்பொருட்களின் கூட்டுச் சேர்க்கையால் ஆன ஓர் அம்சம் அல்லவென்பது.

அதாவது இப்பிரபஞ்சத்திலிருக்கும் ஒவ்வொரு துகளுக்குள்ளும் உயிரோட்டமான ஏதோவொரு சக்தி வியாபித்திருக்கிறது. நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் போன்றோருடைய கருத்துக்கள் கூறுவது போல், இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்ற “சடப்பொருட்கள்” என்று எதுவுமே இல்லை.

ஒவ்வொரு துகளுக்கும் அதன் மட்டத்திற்கு ஏற்ப ஏதோவொரு சிந்திக்கும் திறன் இருக்கின்றது. இதனால் தான் “சக்திச்சொட்டுப் பின்னல்” எனும் நிகழ்வே சாத்தியப்படுகிறது. அதாவது, ஒரு ஜோடித் துகள்களில், ஒரு துகளுக்கு ஒரு மாற்றம் நிகழும் போது அதன் ஜோடித் துகள் அதைப் பிரதிபலிக்கும் விதமாக அதுவாகவே எதிர்மாற்றத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கிறது. உயிரோட்டமுள்ள ஏதோவொரு சிந்திக்கும் திறன் இல்லாமல் இவ்வாறான நிகழ்வுகளெல்லாம் ஒருபோதும் சாத்தியப்படாது.

மேலும், குவாண்டம் பொறியியலின் “நிச்சயமற்ற தன்மை” எனும் சித்தாந்தம் கூட இந்த உண்மையைத் தான் காட்டுகிறது. அதாவது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு சக்திச்சொட்டும், அதை நிர்வகிக்கும் ஒரு பரம்பொருளிடம் அனுமதி கேட்டுவிட்டு, அனுமதி கிடைத்த பிறகே அது அடைய வேண்டிய நிலையை அடைகிறது எனும் உள்ளார்ந்த அர்த்தமே இதில் கூட மேலோங்கி நிற்கிறது.

குவாண்ட்டம் கோட்பாடுகளின் இந்த நிலைபாடுகளை சரிகாணும் அடிப்படையில் தான் மார்க்க மூலாதாரங்கள் கூட அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பின்வரும் குர்ஆன் வசனம் இதை அழகாக உறுதிப்படுத்துகிறது:

ஆதாரம்:

“வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன.
அவன் அரசன்; தூயவன்; மிகைத்தவன்; ஞானமிக்கவன்.” - (62:1)

இந்த வசனம் மட்டுமல்ல; இன்னும் ஏராளமான குர்ஆன், மற்றும் ஹதீஸ் வசனங்கள் இந்த உண்மையை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன. பொதுவாக இஸ்லாம் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் உயிருள்ளதாகவே குறிப்பிடுகின்றது. உயிரற்ற “சடப்பொருட்களாக” எதையுமே இஸ்லாம் குறிப்பிடவில்லை.

வானங்கள், மற்றும் பூமி ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுவதாகவும், ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் இந்தப் பூமியானது, ஒரு கெட்ட மனிதனுடைய சடலத்தை உள்வாங்க மறுத்ததாகவும், ஒரு சமயம் திடீரென்று அதிரத் தொடங்கிய உஹது மலை கூட, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உன் மேல் ஒரு நபி இருக்கிறேன்; அசையாதே” என்று கட்டளை பிறப்பித்த உடனேயே, தான் அதிர்வதை நிறுத்திக் கொண்டதாகவும், கல் மண் உட்பட அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு செவிசாய்ப்பதாகவும் ஏராளமான சான்றுகள் குர்ஆன், மற்றும் ஹதீஸ் பதிவுகளில் காணக்கிடைக்கின்றன.

இவை அனைத்தும் உணர்த்தும் உண்மை என்ன?

நியூட்டன், மற்றும் ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது சித்தாந்தகள் கூறுவது போல், இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்ற சடப்பொருள் (சடம் + பொருள்) என்று எதுவுமே இல்லை. மாறாக, உயிரோட்டமான ஒரு பிரபஞ்சமாகவே அல்லாஹ் இந்த அகிலத்தைப் படைத்திருக்கிறான். இந்தப் பேருண்மையைத் தான் மேற்கூறப்பட்ட மார்க்க ஆதாரங்கள் மறுக்க முடியாதவாறு பறைசாற்றுகின்றன.

      Chapter 09      

உண்மை 5 (சக்தியாலான பிரபஞ்சம்):

இந்தப் பேரண்டம் உருவானதும், இயங்கிக் கொண்டிருப்பதும் வெறும் சக்தியால் மட்டுமே; சடப்பொருட்களால் அல்ல என்பது தான் குவாண்ட்டம் கோட்பாட்டின் நிலைப்பாடு. இந்தக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் விதமாகவே மார்க்கத்தின் நிலைபாடுகள்கூட இருக்கின்றன. பின்வரும் ஆதாரங்கள் மூலம் இதை விளங்க முயற்சிப்போம்:

ஆதாரம் 1:

“(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும்போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.” – (அல்குர்ஆன் 2:117)

இந்த வசனத்தை ஊன்றிக் கவனித்தால், இந்த மொத்தப் பிரபஞ்சமும் அல்லாஹ்விடமிருந்து வெளிப்பட்ட ஒரு சக்தியின் எதிரொளி மட்டுமே என்பது விளங்கும்.

அதாவது ஒலி (சத்தம்) என்பதுவும் சக்தியின் ஒரு வடிவம் தான். அல்லாஹ்வின் வாயிலிருந்து வெளிப்பட்ட “குன்” என்ற ஒரு வார்த்தையின் சக்தி தான் அவனது கட்டளைகளுக்கு ஏற்ப விரிவடைந்து, பல சக்திச் சொட்டுக்களாகப் பாகுபடுத்தப்பட்டு, இந்தப் பிரபஞ்சமாக உருவெடுத்திருக்கிறது.

பெருவெடிப்பு (The Big Bang) எனும் நிகழ்வின் விளைவாகவே இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பது தான் என்பதே இன்றைய விஞ்ஞானம் முன்வைக்கும் கருத்து. ஒருசில தப்பான புரிதல்கள் இந்தப் பெருவெடிப்புக் கோட்பாட்டில் இருந்தாலும், இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் மூலம் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பெருவெடிப்புக் கோட்பாட்டை மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் வெளிச்சத்தில், அல்லாஹ்வின் “குன்” என்ற வார்த்தையின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள முயற்சித்தால், இதைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

உண்மையில் பெருவெடிப்பு நிகழ்வு என்பது மைய நீரோட்ட விஞ்ஞானிகள் கூறுவது போல் ஓர் அணுகுண்டு வெடிப்பது போல் நாலா பக்கமும் சிதறி வெடித்த ஒரு வெடிப்பு அல்ல. அந்த அடிப்படையில் பெருவெடிப்பை விளங்கப் போனால் தான், சடப்பொருள் எங்கிருந்து வந்தது என்ற குழப்பம் ஏற்படும். ஆனால், இதே பெருவெடிப்புக் கொள்கையை ஒருசில திருத்தங்களோடும், குர்ஆன் கூறும் அடிப்படையோடும் பின்வரும் அடிப்படையில் விளங்க முயற்சித்தால், எந்தவிதமான குழப்பமும் இருக்காது என்பதே எனது கருத்து:

இந்தப் பிரபஞ்சத்தை அல்லாஹ் சடப்பொருட்களால் படைக்கவில்லை; சக்தியால் மட்டுமே படைத்தான். உண்மையில் பெருவெடிப்புக்கு முன் எந்தப் பொருளும் இருக்கவில்லை; வெடித்த பின்பும் எந்தப் பொருளும் உருவாகவில்லை. சடப்பொருள் என்று எதுவுமே சுத்தமாக இல்லை.

அல்லாஹ் “குன்” என்ற வார்த்தையைத் தனது வாயிலிருந்து உச்சரித்த அந்த நிகழ்வு தான் பெருவெடிப்பு எனும் நிகழ்வாக இருக்க வேண்டும். இதுவே மார்க்கத்துக்கு உகந்த சரியான புரிதலும், விளக்கமும் ஆகும்.

“குன்” எனும் இந்த வார்த்தையானது, வல்லமை மிக்க அல்லாஹ்வின் வாயிலிருந்து வெளிப்பட்ட சத்தம் எனும் சக்தியின் ஒரு துளி மட்டுமே. இந்த சக்தி கற்பனைக்கு எட்டாத அளவு அபாரமான ஒரு சக்தியாக இருந்திருக்க வேண்டும். தூசு படிந்திருக்கும் ஒரு மேற்பரப்பில் நாம் “ப்பூ...” என்று ஊதும் போது அந்தத் தூசு துணிக்கைகள் எல்லாம் எப்படி ஒரு புள்ளியிலிருந்து சிதறி ஊதப்பட்ட காற்றின் திசையில் வேகமாக விசிறப்படுமோ, அது போன்ற ஏதோ ஓர் அமைப்பிலேயே இந்த நிகழ்வும் இருந்திருக்க வேண்டும். அதாவது, அல்லாஹ்வின் வாயிலிருந்து ஊதி விடப்பட்டது போல் வெளியான “குன்” என்ற இந்த வார்த்தையின் சக்தியானது, அதன் வேகத்தை மிஞ்சி எந்த ஒரு வேகமும் இல்லை என்று சொல்லும் அளவுக்குக் கடும் வேகத்தில் விசிறப்பட்டு, தூசி துணிக்கைகள் சிதறியது போல் மிக நுண்ணிய “சக்திச் சொட்டுக்களாக” வின்வெளியில் சிதறியிருக்க வேண்டும்.

பிறகு இந்த சக்திச் சொட்டுக்களே அல்லாஹ்வின் கட்டளைகளுக்கேற்ப ஆறு கட்டங்களாக ஒருங்கிணைந்து, அணுக்களாக, மூலகங்களாக, கல்லாக, மண்ணாக, சூரியனாக, சந்திரனாக, உருவெடுத்திருக்க வேண்டும். இதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்:

ஆதாரம் 2:

எதையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; "குன்" (ஆகிவிடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் 36:82)

ஆதாரம் 3:

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான். (அல்குர்ஆன் 7:54)

இந்த இரண்டு வசனங்களையும் இணைத்து விளங்கும் போது, ஆரம்பத்தில் “குன்” என்ற ஒரு வார்த்தையின் மூலம் இல்லாமையில் இருந்து புதிதாக இந்தப் பிரபஞ்சத்தை அல்லாஹ் தனது சக்தியைக் கொண்டு மட்டுமே உருவாக்கினான் என்பதும், இவ்வாறு உருவாக்கப்பட்ட சக்திச்சொட்டுக்களைப் பின்னர், தான் விரும்பியவாறு ஆறு கட்டங்களாக (ஆறு நாட்கள்) வடிவமைத்துச் செப்பனிட்டு, இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பை நிறைவு செய்திருக்கிறான் என்பதும் புரிகிறது.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் உண்மை ஒன்று தான். இந்த மொத்தப் பிரபஞ்சமுமே அல்லாஹ்வின் ஒரு வார்த்தையின் பிரதிபலிப்பு மட்டுமே. அந்த வார்த்தை அவனது வாயிலிருந்து வெளிப்பட்ட அந்த வேகம் இன்னும் குறையவே இல்லை. அதனால் தான் இன்னும் இந்தப் பிரபஞ்சம் ஓயாமல் விரிவடைந்துகொண்டே செல்கிறது. இந்த விளக்கத்தைப் பின்வரும் குர்ஆன் வசனம் மேலும் ஊர்ஜிதப்படுத்துகின்றது:

ஆதாரம் 4:

“(நமது) சக்தியைக் கொண்டு வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.” - (அல்குர்ஆன் 51:47)

இந்த வசனத்தில் இரண்டு தகவல்களை அல்லாஹ் ஒன்றாகச் சேர்த்துக் கூறுகிறான்.

முதலாவது தகவல்:

சக்தியைக் கொண்டு தான் பிரபஞ்சத்தைப் படைத்ததாக இங்கும் அல்லாஹ் ஊர்ஜிதப் படுத்துகிறான்.

இரண்டாவது தகவல்:

படைக்கப்பட்ட பிரபஞ்சத்தைத் தொடர்ந்தும் விரிவடையச் செய்து கொண்டே இருப்பதாகவும் கூறிக் காட்டுகிறான்.

இதில் முதலாவது தகவலை இரண்டு அர்த்தங்களில் நாம் புரிந்து கொள்ளலாம். ஆழமான அறிவியலோடு நோக்காமல், சாதாரண மனித சிந்தனையோடு இந்த வசனத்தை அனுகினால், “அனைத்தையும் படைக்கும் தனது ஆற்றல் மூலம் இந்தப் பிரபஞ்சத்தை அல்லாஹ் படைத்தான்” என்ற மேலோட்டமான பொருள் இதிலிருந்து வெளிப்படும். அதே நேரம் இதே வசனத்தை சக்திச்சொட்டுக் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் விஞ்ஞானபூர்வமாக நோக்கும் போது, “எந்தவிதமான சடப்பொருட்களும் இல்லாமல், நூற்றுக்கு நூறு வீதம் சக்திச் சொட்டுக்களைக் (Quanta) கொண்டு மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தை அல்லாஹ் உருவாக்கியிருக்கிறான்” என்ற அறிவியல் அர்த்தம் கூட இதிலிருந்து வெளிப்படுகிறது.

இந்த வசனத்தில் மட்டுமல்ல; படைத்தல் பற்றி அல்லாஹ் கூறும் எந்த வசனத்திலுமே இந்தப் பிரபஞ்சத்தை அவன் சடப்பொருளால் படைத்ததாகவோ, அல்லது அது சார்ந்த கருத்திலோ கூறியதில்லை. மாறாக, சக்தியால் படைத்ததாகவே குறிப்பிடுகிறான்.

மேலும், “அதை நாம் விரிவு படுத்துவோராவோம்” என்ற வசனத்தின் மூலம், இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்தும் விரிவடைந்து கொண்டே செல்கிறது; நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது எனும் அறிவியல் உண்மையையும் இங்கு அல்லாஹ் பதிய வைக்கிறான்.

ஆகவே, இந்தக் குர்ஆன் வசனத்தின் கருத்துக்கள் மூலம், இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சடப்பொருட்கள் அனைத்தும், உண்மையில் சடப்பொருட்களல்ல; சக்தியின் பிரதிபலிப்புக்கள் மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப் படுகிறது.

இதே போல் யுகமுடிவு நாளின் போது இந்தப் பிரபஞ்சம் அழிக்கப்படுவது கூட “ஸூர்” ஊதப்படுவதால் ஏற்படும் சத்தம் எனும் சக்தியின் மூலம் தான் நிகழும் என்று தான் மார்க்கம் எமக்குச் சொல்லியிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்தப் பிரபஞ்சம் ஆக்கப்பட்டதும் சத்தம் எனும் சக்தியைக் கொண்டு தான்; இறுதியில் இது அழிக்கப்படுவது கூட சத்தம் எனும் சக்தியைக் கொண்டு தான். அதே போல், ஆரம்பம், முடிவு எனும் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இன்று நம்மைச் சுற்றி இருப்பவை கூட சக்தியின் பிரதிபலிப்புக்கள் தாம். இது தான் மார்க்கம் நமக்கு உணர்த்தும் பேருண்மை.

அதாவது, எல்லாம் வல்ல அல்லாஹ்விடமிருந்து வெளிப்பட்ட சக்தியிலிருந்து தோற்றம் பெற்றிருப்பது தான் இந்தப் பிரபஞ்சம். யுக முடிவு நாளின் போது இந்த மொத்த சக்தியும் மீண்டும் அவனிடமே திரும்பி விடும்.

உண்மை 6 (ஓடிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம்):

பெருவெடிப்பு நிகழ்வு தொடக்கம் இன்று வரை இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டு செல்வது ஒரே வேகத்தில் அல்ல; மாறாக அதிகரித்துச் செல்லும் வேகத்தில் அது விரிந்து செல்கிறது என்பது தான் அண்மைய கண்டுபிடிப்பு. ஒவ்வொரு நட்சத்திரமும், கிரகமும் ஏதோ ஓர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருப்பதைப் போல் ஏதோ ஒரு திசையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன என்பது தான் இதன் பொருள்.

இதையும் குர்ஆன், பின்வரும் வசனம் மூலம் உறுதிப்படுத்துகிறது:

“சூரியனால் சந்திரனை அடைய (துரத்திப் பிடிக்க) முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் ஓடுகின்றன.” – (அல்குர்ஆன் 36:40)

இந்த இடத்தில் நாம் ஓர் அம்சத்தைக் கவனிக்க வேண்டும்:

நியூட்டன், ஐன்ஸ்டைன் மற்றும் அவர்கள் சார்ந்த அனேகமான மையநீரோட்ட விஞ்ஞானிகளது கருத்துக்களின் பிரகாரம், நாம் வாழும் பூமி உட்பட இந்த சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அனைத்துமே சூரியனைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன என்ற சித்தாந்தம் தான் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைபாடாக இருந்து வருகிறது.

அதாவது, இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், நமது சூரியகுடும்பத்தில், சூரியன் எனும் நட்சத்திரம் தான் புனித கஃபாவைப் போல் மத்தியில் இருப்பதாகவும், அதைச் சுற்றி, ஹஜ் செய்யும் மக்கள் தவாபு செய்வதைப் போல் எல்லாக் கோள்களும் ஆண்டுதோறும் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் தான் இந்தக் கோட்பாட்டின் அர்த்தம்.

ஞாயிற்றுத் தொகுதியில் இருக்கும் எல்லாக் கோள்களையும் விட சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் ஒரு கோட்பாடு தான் இது. இந்தக் கோட்பாட்டைத் தான் கல்விக் கூடங்களில் கூட இன்று வரை கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் உண்மையென்று நம்பி மாணவர்கள் கூட கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உண்மை இதுவல்ல. இது ஒரு தவறான கோட்பாடு. அல்லாஹ்வின் வேத வசனங்களுக்கு இந்தக் கோட்பாடு கூட சற்று முரண்படுகிறது. சூரியன் உதிப்பதையும், அஸ்த்தமிப்பதையும் பற்றி சொல்லப்பட்டிருக்கும் குர்ஆன் வசனங்கள், மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அனைத்தையும் தொகுத்தெடுத்து வாசித்துப் பாருங்கள்; மார்க்க ஆதாரங்களுக்கு எந்த வகையிலும் ஒத்துவராத ஒரு கோட்பாடாகவே இந்தக் கோட்பாடும் இருப்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

உண்மை இதற்கு மாற்றமானது. எந்தக் கோளும் எதையும் சுற்றி வலம் வந்து கொண்டிருப்பதில்லை. சூரியனுக்கென்று தனிச்சிறப்பு எதுவுமே இல்லை. ஒவ்வொரு கோளுக்கென்றும் தனித்துவமான ஒரு பாதை அல்லாஹ்வால் வகுக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பாதை நேர்கோட்டுப் பாதையோ, அல்லது வட்ட வடிவிலான பாதையோ அல்ல. மாறாக, திருகு சுழல் (Helix / Spring) வடிவில் தான் இந்தப் பாதைகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. தத்தமக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் இந்தத் திருகுசுழல் பாதை வழியே ஏதோ ஒரு திசையை நோக்கி ஒவ்வொரு கோள்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதே போல், சூரியனுக்கென்றும் ஒரு தனித்துவமான திருகுசுழல் பாதை வகுக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பாதையூடாகத் தான் சூரியன் கூட பயணித்துக் கொண்டிருக்கிறது.

இதை இலகுவாகப் புரிந்து கொள்ள ஒரு நடைமுறை உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். துப்பாக்கியிலிருந்து சுடப்படும் ஒரு குண்டு நேர்கோட்டில் பயணிப்பது போல தான் வெறும் கண்களால் பார்க்கும் போது நமக்குத் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. துப்பாக்கியிலிருந்து புறப்படும் அந்தக் குண்டின் பயணம், நேர் எதிரான திசையை நோக்கி நேராகப் பயணித்தாலும், அதன் பாதையானது ஒரு திருகுசுழல் (Spring) வடிவத்தில் தான் அமைந்திருக்கும். மேலும், அந்த குண்டு எந்த அசைவும் இல்லாமல் பயணிப்பதில்லை. மாறாக, துப்பாக்கி ஏற்படுத்தும் விசையின் விளைவாக அதிவேகத்தில் அந்தக் குண்டு சுழன்று கொண்டு தான் பயணிக்கும்.

சுருக்கமாகக் கூறுவதென்றால், துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் குண்டு படு வேகமாகத் தன்னைத் தானே சுழன்று கொண்டும், தனது திருகு சுழல் பாதை வழியாக திருகித் திருகிப் பயணித்துக் கொண்டுமே, நேராக இருக்கும் தனது இலக்கை அடைகிறது.

இதே அடிப்படையில் தான் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும் தத்தம் திருகு சுழல் பாதையில் சுழன்று கொண்டே பயணிக்கின்றன. எல்லாக் கோள்களது திருகுசுழல் பாதையும் ஒரே விட்டத்தில் / பருமனில் அமைந்தவை அல்ல. சில கோள்களது பாதையின் விட்டம் பெரியதாக இருக்கும்; சில கோள்களின் திருகுசுழல் பாஅதை விட்டத்தில் ஒடுங்கியதாக இருக்கும்.

இந்த அடிப்படையில், நமது சூரிய குடும்பத்தில் சூரியனின் திருகுசுழல் பாதை தான் விட்டத்தில் மிகவும் ஒடுங்கிய பாதை. இதனால் தான் சூரியன் எல்லாக் கோள்களுக்கும் நடுவில் இருப்பதைப் போல் நமக்குத் தோன்றுகிறது. அதே போல், நெப்டியூன், ப்ளூட்டோ போன்ற கோள்களது திருகுசுழல் பாதைகள் தாம் விட்டத்தில் மிகவும் அகலமானவை. இதனால் தான் இவை சூரியனிலிருந்து மிகவும் தூரத்தில் சுழல்வதைப் போல் தோன்றுகிறது.

இதை இன்னும் எளிய நடையில் சொல்வதென்றால், எந்தக் கோளும், எதையும் சுற்றி வலம் வரவில்லை. கோள்கள், சூரியன், சந்திரன் ஆகிய அனைத்தும் ஏதோ ஒரு திசையை நோக்கித் தத்தம் அச்சில் சுழன்று கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றன; அவ்வளவு தான்.

ஆனால், குறுகிய நோக்கோடும், மேலோட்டமாகவும் பார்க்கும் போது, கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றி வலம் வருவது போல தான் தோற்றம் இருக்கும். இந்தத் தோற்றத்துக்குக் காரணம், ஒரே திசையை நோக்கி சூரியன் உட்பட அத்தனை கோள்களும் ஒரே கூட்டமாக ஒன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தோடு கூட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் சூரியன் மட்டும், கூட்டத்துக்கு நடுவில் ஓடிக் கொண்டிருப்பதால் தான் இந்தத் தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதைத் தான் மேற்கண்ட குர்ஆன் வசனம் அழகாக உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே குவாண்ட்டம் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் இன்றைய விஞ்ஞானம் சூரிய குடும்பத்தைப் பற்றி முன்வைக்கும் சில புதிய கோட்பாடுகள் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

குறிப்பாக “ஹெலிக்கல் மோஷன்” (Helical Motion) எனும் கோட்பாட்டைக் குறிப்பிடலாம். Youtube இற்குச் சென்று, “helical motion of solar system” என்று டைப் செய்து தேடிப் பாருங்கள்; இந்த விளக்கத்தையொட்டிய சில வீடியோக்கள் புரிந்து கொள்வதற்கு இலகுவான வடிவத்தில் காணக் கிடைக்கின்றன.

உண்மை 7 (அனைத்திலும் சுழற்சி):

குவாண்ட்டம் பொறிமுறையின் இன்னொரு நிலைப்பாடு தான், ஒவ்வொரு சக்திச்சொட்டும், அணுக்களும், அதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களும் சுழல் காற்றின் வடிவத்தில் தொடர்ச்சியாகச் சுழன்றுகொண்டேயிருக்கின்றன என்பது. இது கூட மார்க்கத்துக்கு உடன்பாடான ஒரு நிலைபாடு தான். பிரபஞ்சத்தின் மாபெரும் கட்டமைப்புக்களான கலெக்ஸிகள் தொடக்கம், நம் அன்றாட வாழ்வில் அவதானிக்கும் இயற்கை வடிவங்கள், மற்றும் DNA போன்ற நுண்கட்டமைப்புக்கள் வரை ஒவ்வொரு படைப்பும் தத்தம் பாணியில் ஒரு சுழல் காற்றின் வடிவத்தில் சுழன்று கொண்டு தான் இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்.

இதைத் தான் பின்வரும் குர்ஆன் வசனம் பறைசாற்றுகிறது:

“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வெட்டவெளியில் சுழல்கின்றன.” – (அல்குர்ஆன் 21:33)

இவ்வாறு படைப்பின் ஒவ்வோர் அம்சத்தையும் சரியான விஞ்ஞானத்தின் பார்வையில் உற்று நோக்குவதன் மூலம் மட்டுமே, அல்லாஹ்வின் வல்லமைகளையும், அவனது ஆட்சியின் மகத்துவத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளலாம் என்பது தான் இதுவரை முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மூலம் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டிய கருத்து. ஆய்வு செய்யும் விஞ்ஞானமே தவறானதாக இருந்தால், அதையொட்டி எடுக்கப்படும் விளக்கங்கள் கூட தவறானதாகவே இருக்கும்.

இந்த உண்மைகளை அடிமனதில் பதிய வைத்துக் கொண்டு, மார்க்க ஆதாரங்களை விளங்க முயற்சிக்கும் போது மட்டுமே, அவற்றின் சரியான விளக்கம் நமக்குக் கிடைக்கும்.

உதாரணத்துக்கு, ஒவ்வொரு நாளும் பின்னிரவில் அல்லாஹ் அடிவானத்துக்கு இறங்கி வருதல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட மிஹ்ராஜ் எனும் வின்னுலகப் பயணம், மற்றும் வானவர்கள், ஜின்கள் போன்ற படைப்புகளின் ஒளி வேகத்தையும் தாண்டிய அதி வேக ஆற்றல் போன்ற மார்க்கம் கூறும் பல அம்சங்களை சரியான விஞ்ஞானத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயற்சித்தால், பல கருத்துக் குழப்பங்களைத் தவிர்க்கலாம்; அழகான, அறிவுபூர்வமான விளக்கங்களை இலகுவாக எட்டலாம் என்பதே இந்தப் பீடிகை மூலம் நான் நிலைநாட்ட விழையும் கருத்து.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள "Next" ஐ அழுத்தவும்