Home இஸ்லாம் ஜகாத் கொடுத்தால் (குறையாது) கூடும்!
கொடுத்தால் (குறையாது) கூடும்! PDF Print E-mail
Saturday, 11 February 2017 09:25
Share

கொடுத்தால் (குறையாது) கூடும்!

நாம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்துவிடுகிறது என சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும். அல்லாஹ் தன் திருமறையில்,

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:261)

ஆக, ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது 1*7*100=700 மடங்கு நன்மைகளை அல்லாஹ்தஆலா நமக்கு அள்ளித் தருகிறான்.

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

''யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீத்தம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை; அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரை குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைப்போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்'' என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

மேலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்:

“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன் 2:265)

நம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டுமென்றால், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் நமக்கு அறிவுறுத்துகின்றன‌. இதை வலுப்படுத்தும் வகையில், அல்லாஹுத்தஆலா நம்முடைய செலவினங்களை தான் கவனித்துக்கொள்வதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும் இன்னொரு ஹதீஸ்:

ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)என்று அல்லாஹ் சொல்வதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

ஆக, நாம் ஸதகா செய்யும்போது இறைவனும் நமக்கு பொருளாதாரத்தை வழங்குவான். கொடுக்க கொடுக்க நம் செல்வத்தை நாம் அறியாத புறத்திலிருந்து இறைவன் வளர்த்துதான் கொடுப்பானே தவிர, நமது செல்வம் தான தர்மங்களால் குறைவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தான தர்மங்களை வாரிவழங்குதல்:

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அறிவித்தார்;
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ரமலான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ரமலானின் ஒவ்வொரு இரவும் – ரமலான் முடியும்வரை – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திப்பார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாரி வழங்குவார்கள்.” (நூல்: புகாரி)

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! நன்மைகள் பெருக்கிக் கொடுக்கப்படும் இந்த ரமலானிலும், வருஷத்தின் மற்ற நாட்களிலும் நாம் அல்லாஹ்வின் பாதையில் அதிகமதிகம் செலவு செய்து அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் நன்மைகளை அடைந்துக் கொள்ள முழுமையாக முயற்சி செய்வோமாக!

source: http://riyasdotcom.blogspot.in/