Home கட்டுரைகள் சட்டங்கள் நீதித்துறையும் முஸ்லிம்களும்...
நீதித்துறையும் முஸ்லிம்களும்... PDF Print E-mail
Tuesday, 26 January 2016 19:28
Share

நீதித்துறையும் முஸ்லிம்களும்...

இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள்.

முதல் சம்பவம் :

டெல்லியை தலைநகராகக் கொண்டு 651 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்தை ஐரோப்பாவில் இருந்து வியாபாரம் செய்ய வருவது போல கி.பி.1600 இல் கால் பதித்து அடுத்து வந்த 257 ஆண்டுகளில் அதாவது கி.பி.1857 இல் முழு இந்தியத் துணை கண்டத்தையும் முஸ்லிம்களிடம் இருந்து பிரிட்டிஸ் அரசின் கூலிப் படையாக செயல்பட்ட கிழக்கு இந்திய கம்பெனி அபகரித்துக் கொண்டது.

ஆட்சி அதிகாரம், நிலை நிறுத்தப்பட்டிருந்த ஷரீஅத் சட்டம், மொழி, முதல் நிலை குடிமக்கள் என்ற அந்தஸ்து ஆகிய அனைத்தும் பறிபோயின. அது முஸ்லிம் சமூகத்தை 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்னோக்கி கொண்டு சென்றது.

இரண்டாவது சம்பவம் :

90 ஆண்டுகள் கழித்து 1947 இல் பிரிட்டலிருந்து இந்தியா சுதந்திரம் பெறும் நேரத்தில் இன மற்றும் ஆதிக்க வெறியால் உந்தப்பட்ட சிலரால் பின் விளைவுகள் குறித்து சிந்திக்காமல் பாகிஸ்தான் என்ற ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது. ஒரே சமூகமாக இருந்த 25 விழுக்காடு முஸ்லிம்கள் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் 15 % இந்தியாவில் 17% என்று கூறு போடப்பட்டு இங்கே முஸ்லிம்கள் மிகச் சிறிய எண்ணிக்கைக்குத் தள்ளப்பட்டனர். BUREAUCRACY- JUDICIARY IN INDIA

இந்த இரண்டு பேரிடர்களுக்குப் பின்னால் நிறைந்திருந்த பலருடைய சதித்திட்டங்கள், அகங்காரம், குரோதங்கள் ஆகியவற்றால் பெருவாரியான இந்தியத் துணை கண்ட முஸ்லிம்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. பிரிவினையால் 20 இலட்சம் அப்பாவி மக்கள் மாண்டு போனார்கள். வெறுப்பு ஒன்றே நிலைத்து நின்றது.

1950 இல் இந்தியா குடியரசாகி 70 ஆண்டுகளை நெருங்கும் இன்றைய நிலையில் இந்தியாவில் வாழும் 17 விழுக்காடு முஸ்லிம்களின் கல்வி சமூக பொருளாதார அரசியல் பின்னடைவுகளுக்கும் அவர்கள் மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகளுக்கும் மூல காரணங்கள் இந்த இரண்டு சம்பவங்கள் தான்.

ஜனநாயக சமூக அமைப்பில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் சமூகம் அறிவிலும் அதிகாரத்திலும் வலிமையாக இருத்தல் அவசியம். இல்லையென்றால் இழப்புகளை அதிகம் சந்திக்கும்.

வரலாற்றின் ஓட்டத்தில் சமூகத் தலைமைப் பொறுப்பிற்கு வரக்கூடியவர்கள் சமூகத்தின் எதிர்கால ஆபத்துகளை கணக்கில் கொள்ளாமல் அவர்களது காலச் சூழலை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு சிலரின் நலனிற்காக எடுக்கப்படும் சுயநல முடிவுகளால் மிகப் பெரிய இன்னல்களை அடுத்தடுத்த காலங்களில் வரும் அப்பாவி மக்கள் சந்திக்கின்றனர். எல்லா சமூகத்திலும் இது நடந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் அதிகம் நடந்துள்ளது. அதில் பாகிஸ்தான் பிரிவினை முக்கியமானது.

வெறுப்பு, பிரிவினை, கலவரம் போன்ற அன்றைய கால நிகழ்வுகள் காரணமாகவே குடியரசு இந்தியாவின் நீதித்துறையில், நிர்வாகத் துறையில், தனியார் வேலை வாய்ப்புகளில் தொடக்கம் முதல் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனை வேர்விட்டு இஸ்லாமிய எதிரிகளால் வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது.

குடியரசு இந்தியாவின் அரசமைப்புச் சட்டம்தான் இந்த நாட்டின் உயரிய அதிகார பீடம். அதை முழுவதுமாக நிலை நிறுத்துவதும் அதன் அடிப்படை கொள்கை கோட்பாட்டிற்கு சேதாரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் இந்திய நீதித் துறையைச் சார்ந்தது.

நாட்டில் வாழும் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட, மலைவாழ் மக்கள் போன்ற வலிமை குன்றிய இனங்களின் அடிப்படை உரிமைகளை ஆட்சியாளர்கள் மற்றும் அரசு நிர்வாகத்தால் மட்டும் முழுமையாக பாதுகாத்திட இயலாது. ஆதிக்க சக்திகளின் அத்துமீறல் நடை பெறும் போது ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தைக் கண்டித்து வழிநடத்தும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கே இருக்கிறது. நீதி மன்றமே அதற்கு பொறுப்பு.

ஆனால் கடந்த 67 ஆண்டுகளாக சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் நடைபெற்ற அத்துமீறல்கள் எண்ணிலடங்காதவை. ஏராளமான விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் அதற்கு சாட்சி. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள குறைந்தபட்ச பாதுகாப்பினைக் கூட ஆட்சியாளர்களால் அரசு இயந்திரத்தால் வழங்கிட இயலவில்லை. இழப்புகளும் துன்பங்களும் துயரங்களும் ஏராளம். அவற்றைப் பட்டியலிட இயலாது. நினைவுக்கு ஒன்றிரண்டு மட்டும்.

ஆதரவற்ற விளிம்பு நிலை முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக இந்த நாட்டில் 651 ஆண்டுகள் முதல் தர குடிமக்களாக அதிகாரமிக்கவர்களாக வாழ்ந்த முஸ்லிம் வள்ளல்கள் மற்றும் அரசர்களால் வாரி வாரி வழங்கப்பட்ட சொத்துக்கள் தான் வக்ஃபு சொத்துக்கள். உலகத்தில் இந்திய முஸ்லிம்களுக்கு இருப்பதைப் போன்று வக்ஃபு சொத்துக்கள் வேறு யாருக்கும் இல்லை.

குடியரசு இந்தியாவில் சட்டத்தின் துணையோடு இந்தியா முழுவதும் இருக்கும் வக்ஃபு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட 6 இலட்சம் வக்ஃபு சொத்துக்களில் 80 விழுக்காடு விலை மதிப்பில்லா சொத்துக்களை மத்திய மாநில அரசுகள், பெரும் பணக்காரர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று சட்டத்தையும் தர்மத்தையும் பாதுகாக்க வேண்டியவர்களே ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் 67 ஆண்டுகளாக இன்றும் நிலுவையில் உள்ளன. வக்ஃபு நிர்வாகங்கள் ஊழலில் சீரழிந்து கிடக்கின்றன. 2006 இல் வெளியான நீதியரசர் ராஜீந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் “இந்திய முஸ்லிம்களின் இன்னல்களை களைவதற்கு அவர்களின் மேம்பாட்டிற்காகவே தானமாக வழங்கப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் மட்டும் போதுமானது” என்று குறிப்பிடுகிறார்.

சட்டம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் முஸ்லிம்கள் இடம் பெறாததால் ஏற்பட்ட விளைவுகள்2013 இல் வெளியான ஆய்வின்படி இந்திய சிறைக் கைதிகளில் 20 % முஸ்லிம்கள் 22% தலித்கள் 11 % பழங்குடி மக்கள் என்கிறது. இதில் விசாரணைக் கைதிகளாக 70 சதவீதம்பேர் வழக்கு நடத்திட வழியில்லாமல் பல ஆண்டுகளாக சிறைகளில் மெல்ல மெல்ல செத்து வருகின்றனர். தொடர்ச்சியான வெறுப்புப் பிரச்சாரமும் அதிகார வர்க்கத்தின் ஊக்குவிப்பும் உண்டாக்கிய பொது புத்தியினால் முஸ்லிம்களின் அடையாளம் குறித்த வழக்குகளில் நீதிமன்றங்களின் அணுகுமுறையிலேயே பாரபட்சம் காட்டப்படுகிறது. அதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சமீபகால கருத்துக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

AIPMT - அகில இந்திய நுழைவுத் தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் தலையை மறைக்கும் ஸ்கார்ஃப் அணிவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி H.L. தத்து : “This is nothing but ego. Faith is not in the scarf. Take your examination. Your faith won’t go.” இது அகங்காரமே தவிர வேறு இல்லை, நம்பிக்கை என்பது தலையை மறைப்பதில் இல்லை. பரீட்சை எழுதுங்கள், உங்கள் நம்பிக்கை எங்கும் போகாது என்கிறார்.

இது மட்டுமல்ல முஸ்லிம் மாணவர்கள் தாடி வைப்பதில் தொடங்கி முஸ்லிம்களின் அடையாளத்தின் மீதான வெறுப்பை அவ்வப்போது உமிழ்கின்றனர். இந்த எண்ணத்தை இந்திய பொதுச் சமூகத்தில் அதிகரிப்பதற்கென்றே பல இந்துத்துவா சிந்தனையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரினையின் போது ஏற்பட்ட கலவரத்தில் இருதரப்பிலும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம் வெறுப்பும் குரோதமும் வீறு கொண்டு நின்ற காலத்தில் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அரசியல் நிர்ணய சபையின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. உறுப்பினர்கள் அனைவரிடமும் முஸ்லிம் வெறுப்பு மிகைத்திருந்தது. முஸ்லிம் உறுப்பினர்களிடமோ அச்சம் மேலிட்டு இருந்தது.

முஸ்லிம் வெறுப்பின் பின்புலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் மதசார்பற்றது என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு மதத்தின் மேன்மைக்கு ஒருங்கிணைப்பிற்கு வழிகோலும் பிரிவுகளைக் கொண்டுள்ளதைக் காணலாம்.

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் போல ஒரே சமூகமாக இறைவழிபாடு ரீதியாக மைய இலக்கு இல்லாத, கலாசார வேறுபாடுகளைக் கொண்ட, பல்வேறு மொழி வழி தேசிய இனங்களை “இந்து” என்ற இல்லாத பெயரில் ஒரு மதமாக ஒருங்கிணைக்கும் முயற்சியை இந்திய அரசமைப்புச் சட்டம் முன்னிலைப்படுத்துவதை “இந்து” என்பதற்கான விளக்கப்பிரிவில் காணலாம். அதற்காகவே “இந்தியா முழுமைக்குமான பொதுவான உரிமையியல் சட்டம் (பொது சிவில் சட்டம்) உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்” என்ற அரசமைப்புச் சட்டத்தின் 44 ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது.

கலாச்சார தனித்தன்மை கொண்ட நூற்றுக் கணக்கான இனங்கள் வாழும் இந்தியாவில் ஆக்ரமிப்பாளர்களான பிரிட்டிஸார் கூட சொல்லத் துணியாத “பொது சிவில் சட்டம்” குறித்த கருத்தினை சுதந்திர இந்திய அரசமைப்புச் சட்டம் கொள்கையாக கொண்டிருக்கிறது.

ஆனால் அதே அரசமைப்புச் சட்டத்தின் 25 ஆவது விதி : Freedom of Conscience and Free Profession Practice and Propogation of Religion. “இந்திய குடிமகன் தான் விரும்பும் மதத்தைத் தழுவ, பின்பற்றிட, பிறருக்கு பரப்புரை செய்ய, முழுப் பாதுகாப்பு” என்று அவரவரின் கலாசார தனித்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. பிரிவு 44 மற்றும் 25 க்கு இடையே மிகப் பெரிய முரண்பாடு உள்ளது. பிரிவு 44 என்பது இந்துத்துவா சிந்தனையுடையவர்களின் கை வண்ணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்கள் தங்களுக்கான பாதுகாப்புக் கேடயமாக கருதும் அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து அதை அந்த மக்களுக்கு எதிராகத் திருப்பும் திட்டத்தை ஆட்சி மற்றும் சட்டத்தின் துணையோடு விரைவாக செய்து வருகின்றனர். நாம் நம்முடைய பாரம்பரியம் பண்பாடு கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்பதற்கும் சமூக ரீதியான அத்துமீறல்களிலிருந்து சமுதாயத்தினை பாதுகாத்திடவும் ஆதிக்க வல்லூறுகளின் பிடியில் சிக்கி நம்மைப் போல அல்லல்படும் ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களை பாதுகாத்திடவும் முஸ்லிம்கள் அதிகம் அதிகம் இன்றைய உலகின் அதிகாரமிக்க மிக வலிமையான ஆயுதமான சட்ட அறிவை மேம்படுத்தும் சட்டக் கல்வி பயிலுவதை இளைய தலைமுறைக்கு ஆர்வப்படுத்திட வேண்டும். அதிலும் ஹலாலான வழியில் பயில வேண்டும்.

இன்று சட்டம் படித்துள்ள பெருவாரியான முஸ்லிம் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை நிபுணர்களிடம் தாங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் கடமைகள் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாகவே இருக்கிறது. காரணம் சட்டக் கல்வியை கற்ற வடிவம் தவறு. ஒரு புதிய தலைமுறையை - இலக்கை சரியாகப் புரிந்திட்ட சட்டவியல் வல்லுனர்களை உருவாக்க வேண்டியது இன்றைய முஸ்லிம்களின் அவசியமான அவசரக் கடமையாக உள்ளது.

ஒரு முஸ்லிமாக இந்திய நாட்டில் அதன் வளர்ச்சியில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த தங்களின் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து சட்டத்தில் உலகளாவிய ஞானமும் ஆளுமையும் உடையவர்களாக விளங்க வேண்டும். வெறும் பட்டத்திற்காக சட்டப் படிப்பை படித்தும் படிக்காமலும் முடித்து மற்ற வழக்கறிஞர்கள் செய்யும் “அதே” வேலையையே முஸ்லிம்களும் செய்யும் நிலைக்கு முடிவு கட்ட வேண்டும்.

அகண்ட நிலப்பரப்பை, ஆயிரம் வேறுபாடுடைய சுய சார்பு மக்களை ஆட்சி செய்த அனுபவம் இல்லாதவர்களின் கையில் அகப்பட்டுக் கொண்ட இந்தியாவிற்கு சரியான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்தத் தேவை அதிகரிக்க இருக்கிறது. நீதி வழங்குதலில் பாரபட்சம். பணக்காரக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது அரிதிலும் அரிதாக இருக்கிறது. நீதி வேண்டி நீதிமன்றங்களில் ஏறி இறங்கி பிச்சைக்காரர்களாக மாறியவர்கள் ஏராளம்.

மதுவின் மூலம் இந்தியச் சமூகத்தை சீரழித்து வருகின்றனர். லஞ்சம் ஊழல் அரசு நிர்வாகத்தில் புரையோடிப் போய் விட்டது. மலைவாழ் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடித்து விட்டு இயற்கை வளங்கள் அனைத்தையும் அந்நிய நிறுவனங்கள் கொள்ளையடித்துக் கொழுக்கின்றன. அரசு அதற்கு சட்டப் பாதுகாப்பளிக்கிறது.

சாதிய வன்கொடுமைகளைத் தடுக்க இயலவில்லை. இலட்சக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கின்றன. நீதி வழங்க வேண்டிய நீதிபதியும் சாதிய சிந்தனையால் பீடிக்கப்பட்டு நிற்கும் அவலம்.

20 ஆண்டுகளில் 4 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது உலகில் எங்குமே நடக்காத அவலம், உலக சமூகம் காரி உமிழ்கின்றது. தற்கொலைக்கு மூல காரணம் கந்து வட்டி. கந்து வட்டியை பிறப்புத் தொழிலாகக் கொண்ட சமூகங்கள் செல்வத்தில் கொழித்துக் கொண்டிருக்கின்றன.

கல்வியை காவிமயமாக்கி பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைக் கலந்து இந்தியாவை இந்து நாடாக மாற்றிடத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் தீவிரமாக செயல்படுகின்றனர்.

மருத்துவம் என்ற பெயரில் மக்களின் உழைப்பு மற்றும் பரம்பரை சொத்துக்கள் அனைத்தும் விழுங்கப்பட்டு பகல் கொள்ளை நடக்கின்றது. வெறும் செல்போனுக்காக கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகி விட்டது.

இவையெல்லாம் வேறு எங்கோ நடை பெறவில்லை. நல்லதை ஏவுவதை தீயதை தடுப்பதை மனித குலத்தை அனைத்து விதமான அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை செய்வதை இறைச்சட்டமாக வாழ்வியல் கடமையாக கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் கண் முன்னால் நடக்கிறது. முஸ்லிம்களுக்கும் நடக்கிறது.

மார்க்கத் தெளிவோடு சட்டத்துறையில் ஆளுமை செலுத்துகின்றவர்களை உருவாக்கி எடுப்பதின் மூலம் ஓரளவிற்கு இவற்றை தடுத்து நிறுத்த இயலும். நாம் என்ன செய்யப் போகிறோம்..?

-CMN  சலீம்

source: http://www.samooganeethi.org/