Home இஸ்லாம் வரலாறு உலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி
உலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி PDF Print E-mail
Thursday, 10 September 2015 06:40
Share

உலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி

ஃபாத்திமா அல் ஃபிஹ்ரி எனும் இஸ்லாமியப்பெண்மணி வாழ்ந்தது 9ஆம் நூற்றாண்டில் என்றாலும் இன்றும் அவரது பெயர் இங்கு நிலைத்திருக்கிறது. அவர் செய்தது என்ன? இன்றளவும் இவரது பெருமை பேசப்படும் அளவிற்கு அப்படி என்ன செய்துவிட்டார்? என்ற கேள்விகள் எழலாம்.

இக்காலகட்டத்திலும் பலர் வியக்கக்கூடிய ஒரு காரியத்தையே ஃபாத்திமா அவர்கள் 9ம் நூற்றாண்டில் வெற்றிகரமாகச் செய்து முடித்தார் எனில் அது மிகையில்லை. உயர்கல்வியோடு சேர்ந்து பட்டங்களையும் வழங்கும் பல்கலைக்கழகங்களின் முன்னோடியாகத் திகழும் பல்கலைக்கழகமான அல் கராவியின் பல்கலைக்கழகத்தை (Al Qarawiyyin University) நிறுவியவர். UNESCO மற்றும் கின்னஸ் உலக சாதனைகள் தகவலின்படி இத்தகைய நடைமுறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த கல்வி நிறுவனம் இதுவே தான்.

ஃபாத்திமா அவர்களின் எளிமையான குடும்பம்

பாத்திமா அல் ஃபிஹ்ரி குடும்பத்தாருடன் 9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கய்ராவனிலிருந்து (தற்போதைய துனிசியா) மொரக்கோவில் உள்ள (Fez) (ஃபெஸ் ) நகரத்திற்கு குடிப்பெயர்ந்தனர். அச்சமயத்தில் சிறந்த இஸ்லாமிய ஆட்சியாளர் இத்ரிஸ் II கய்ராவனில் ஆட்சி புரிந்து வந்தார். ஃபெஸ் நகரம் கலாச்சாரங்களின் சிறந்த கலவையாகவும் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஓர் இஸ்லாமிய நகரமாகவும் திகழ்ந்தது. அந்த வருட இறுதியில் ஃபாத்திமாவிற்குத் திருமணமும் ஆனது.

வறுமையிலிருந்து வாழ்வு வரை:

ஃபெஸ் நகரத்திற்கு வந்த ஆரம்ப காலங்கள் கடுமையான உழைப்பு மற்றும் போராட்டங்கள் நிறைந்ததாகக் கழிந்தன. பின்னர் இறைவன் அருளால் ஃபாத்திமாவின் குடும்பம் மிகுந்த வளமிக்கதாக மாறியது. ஃபாத்திமாவின் தந்தை முஹம்மது பின் அப்துல்லாஹ் அல் ஃபிஹ்ரி அவர்களின் வியாபாரம் வெற்றிகரமாக அமைந்ததில் அவரது குடும்பம் செல்வச்செழிப்போடு வளமாக வாழத் துவங்கியது.

அடுத்து வந்த சில நாட்களில் மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் அடுத்தடுத்து பாத்திமாவின் கணவர், தந்தை மற்றும் சகோதரன் என மிகப்பெரிய இழப்புகள் நேர்ந்தன. அவர்களின் இறப்பிற்குப்பின் பாத்திமாவுடன் இருந்தவர் அவரது சகோதரி மரியம் மட்டுமே. நாமாக இருந்திருந்தால் இந்நிலையில் மிகவும் துவண்டு போய் மூலையில் முடங்கியிருப்போம். ஆனால் அந்த சகோதரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

தந்தையின் இறப்பிற்குப் பின்னர் பரம்பரைச் சொத்திலிருந்து கணிசமான செல்வம் அவர்கள் இருவருக்கும் கிடைத்தது. இது அவர்களின் நிதி நிலையில் அவர்களுக்குப் போதிய உதவி அளித்தது. இருவருமே நன்றாகக் கற்றவர்களாய் இருந்ததால் அவர்களுக்கு கிடைத்த செல்வம் முழுவதையும் சிறந்த திட்டங்கள் மூலம் தம் சமூகத்தாரின் நன்மைக்காக அர்ப்பணித்தனர்.

சகோதரிகள் சாதனை:

ஃபெஸ் நகரில் இருந்த உள்ளூர்ப் பள்ளிவாசல்கள் வளர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அதில் பலர் ஸ்பெயினிலிருந்து அகதிகளாக வந்தவர்களும் இருந்தனர். இந்நிலையில் மரியம் அவர்கள் அங்கு மிகப்பெரிய பள்ளிவாசலான ஆண்டலூசியன் பள்ளிவாசலை (Andalusion mosque) 859ம் ஆண்டு கட்டினார்.

பாத்திமா, அல் கராவியின் எனும் பல்கலைக்கழகத்தை நிறுவினார். அதிகமான வரலாற்று ஆசிரியர்களால் இது உலகின் மிகப்பழமையானது என்றும் 1200 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்குகின்ற , பட்டம் வழங்கும் முறையினை முதன் முதலில் அறிமுகம் செய்த பல்கலைக்கழகம் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலை உருவான விதம்:

வரலாற்றுக் குறிப்புகளில், தமக்குக் கட்டுமானப் பணிகளில் நிபுணத்துவம் இல்லையென்றாலும் கூட தானே தனது பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டு, வழிநடத்தி, சிறப்பான விவரங்களுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இப்பணியைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபாத்திமா முதலில் குறிப்பிட்ட இடத்தில் கட்டிடப்பணிகளைத் துவங்கியவர், பின் அதற்கு அருகில் அடுத்தடுத்து இருந்த இடங்களை வாங்கி பல்கலைக்கழகத்தின் அளவை விரிவுபடுத்தினார். தம் திட்டம் நல்ல முறையில் நிறைவேற விடாமுயற்சியுடன் தம் வாழ்வின் பெரும் பகுதியையும் பெரும் செல்வத்தையும் செலவிட்டார். கட்டுமானப்பணி 859ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் தொடங்கியதிலிருந்து நோன்பு நோற்பதாக சபதம் ஏற்றார், இஸ்லாத்தின் மேல் அளவு கடந்த பக்தி உடைய ஃபாத்திமா அவர்கள். இறைவனின் அருளாலும் தன் அயராத உழைப்பினாலும் இரண்டு வருடங்களுக்குப் பின் பள்ளிவாசலுடன் இணைந்த பல்கலைக்கழகத்தை ஆவலுடனும் அக்கறையுடனும் முழுமையாகக் கட்டி முடித்தார். உடனே அதே பள்ளியில் இறைவனுக்கு நன்றி தெரிவித்துத் தொழுதார்.

அல் கராவிய்யின்

மஸ்ஜித் அல் கராவியின் (Masjid Al Qarawiyyin) வட ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்று. மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேம்பட்ட சிறந்த கல்வியைக் கற்பிக்கும் மிக முக்கிய பல்கலைக்கழகமாக வளர்ந்தது.

அல் கராவியின் விதைத்த முத்துகள்:

அல் கராவியின், பல சிறந்த புகழ் பெற்ற இஸ்லாமியச் சிந்தனையாளர்களை வழங்கியுள்ளது. அப்பாஸ், சட்ட நிபுணரான முஹம்மத் அல் ஃபாஸி, லியோ ஆஃபரிகனஸ் போன்ற எழுத்தாளர்கள், மாலிக் சட்ட நிபுணர் அல் அரபி, வரலாற்று ஆசிரியர் கல்துன், வானிலையாளர் அல் பித்ருஜி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

முஸ்லிமல்லாத மக்களும் இதன் சிறப்பை அறிந்து கல்வி கற்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் போப் சில்வெஸ்டர் II, யூத மருத்துவரும் தத்துவவாதியுமான மைமோனிடஸ் ஆவர்.

14ஆம் நூற்றாண்டின் அல் கராவியின் நூலகம் (Al Qarawiyyin Library) உருவானது. இது உலகின் பழமையான நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது . இந்நூலகத்தில் இஸ்லாத்தின் மிக முக்கிய கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன.(இமாம் மாலிக் அவர்களின் பதப்படுத்தப்பட்ட தோலில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும், இப்னு இஸ்ஹாக் உடைய சீராவும் சுல்தான் அஹமது அல் மன்சூர் என்பவரால் 1602 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குர்ஆனின் நகலும் உள்ளன)

ஏறத்தாழ 1200 ஆண்டுகள் கழித்த பின்னரும் இந்தப் பல்கலை இன்றும் பல மாணவர்களைப் பட்டதாரிகளாக ஆக்கிக் கொண்டுவருகிறது .

ஃபாத்திமா அலி ஃபிஹ்ரி, தம் சமூகத்திற்காகவும் கல்விக்காகவும் , கால நேரம் பார்க்காமல் தம் வாழ்வின் பெரும்பகுதியையும் செலவிட்டு மிகுந்த அர்பணிப்பு உணர்வுடன் செயல் பட்டதோடு தம் வாழ்நாள் முழுவதையும் இறைவனின் திருப்திக்காகவே வாழ்ந்து மறைந்தவர். ஒரு பெண்ணாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் ? என்ற கேள்விக்கு 1200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்மணியின் வரலாற்றில் பதில் இருக்கிறது. இறைவன் அவரது செயலை பொருந்திக்கொள்வானாக. ஆமீன் .

உங்கள் சகோதரி
நூர் அல் ஹயா

தகவல் உதவி: whyislam.org

source:  http://www.islamiyapenmani.com/2015/09/blog-post_2.html