Home கட்டுரைகள் கதையல்ல நிஜம் விருது மழைக்குள் ஒரு ஏழைத் தாய்!
விருது மழைக்குள் ஒரு ஏழைத் தாய்! PDF Print E-mail
Friday, 13 June 2014 06:21
Share

விருது மழைக்குள் ஒரு ஏழைத் தாய்!   

[ ஒபாமாவின் விருந்தாளியாக அமெரிக்கா சென்றார்.

உலக அளவில் புதிய தொழில் அதிபர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

‘சி.என்.என்– ஐ.பி.என்’ விருது, ‘யூத் ஐகான்’ விருது,

உலகில் தலைசிறந்த மூன்றாவது தொழிலதிபர் விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

“பத்து, இருபது கோழி வளர்க்கிறேன். அதுகளையும் கவனிக்கணும்... எனக்கு ரொம்ப பேசப் பிடிக்காது. ஒரே இடத்திலே உட்காரவும் பிடிக்காது. நாற்பது வருஷமா இப்படி ஓடிஓடியே பழகிட்டேன்” என்றபடி குடிசை வீட்டிற்குள் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.]

   விருது மழைக்குள் ஒரு ஏழைத் தாய்!    

காலையில் இட்லி வியாபாரம். பின்பு சத்துணவு மையத்தில் வேலை. அடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி முதியோர்களுக்கு அறிவொளி கல்வி புகட்ட செல்லுதல்..! –இப்படி ஒரு நாளில் ஓடி.. ஓடி.. நான்கு வேலைகளை செய்து, ஐந்து பிள்ளைகளை தன்னந்தனியாளாய் வளர்த்து உருவாக்கிய தீபரமணியைத் தேடித்தேடி இப்போது விருதுகள் வந்து, குவிந்து அவரது குடிசை வீட்டை நிறைத்துக் கொண்டிருக்கின்றன.

சமூகத்திற்கு வழிகாட்டியாய், தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாய், உண்மையான உழைப்பிற்கு அடையாளமாய் இருந்து ஏழ்மையோடு போராடி வெல்லும் சாதனையாளர்களை கவுரவிக்க விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதற்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலே எடுத்துக்காட்டாய் இருப்பவர் தீபரமணி. இப்போது இவருக்கு 60 வயது.

நாற்பது வருடங்களாக இவர் வறுமையோடு போராடியபோது, இவர் வசித்த குடிசை வீட்டை நான்கு புறமும் ஓலை சூழ்ந்திருந்தது. இப்போது வசதி வாய்ப்பு வந்த பின்பும் அதே குடிசை வீட்டில்தான் வாழ்கிறார். அதனால் தலைகுனிந்துதான் இந்த விருதுத் தாயின் வீட்டிற்குள் நுழைய வேண்டியிருக்கிறது.

இவர் எப்படி தாய்மைக்கு எடுத்துக்காட்டாக மாறினார்?– என்ற கேள்விக்கு விடை தேடும்போது மகன் சரத்பாபுவை சொல்லித்தான் ஆகவேண்டும். ஏன்என்றால் சரத்பாபுவை உலகிற்கு தந்த தாயாக அவர் இருந்தாலும், இன்று விருதுகளை அவர் வாரிக் குவிக்க அந்த மகன் காரணமாக இருக்கிறார்.

அன்றாட உணவுக்கு வழியில்லாமல் தாயோடு சேர்ந்து இட்லி விற்று ஏழ்மையோடு போராடி படிப்பை தொடர்ந்த சரத்பாபு, தனது அபார ஆற்றலால் புகழ் பெற்ற கல்வி நிலையங்களான பிட்ஸ் பிலானி, ஐ.ஐ.எம்.ஏ. போன்றவைகளில் வெற்றிகரமாக தனது படிப்பை முடித்தார். பல லட்ச ரூபாய் சம்பளத்தில் தேடிவந்த வேலையை நிராகரித்துவிட்டு, தனது தாயார் குடிசையில் தொடங்கிய உணவுத் தொழிலில் தனது அறிவையும் ஆற்றலையும் பயன் படுத்தி உலக அளவில் கொடிகட்டி பறக்கிறார்.

ஒபாமாவின் விருந்தாளியாக அமெரிக்கா சென்றார்.

உலக அளவில் புதிய தொழில் அதிபர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

‘சி.என்.என்– ஐ.பி.என்’ விருது, ‘யூத் ஐகான்’ விருது,

உலகில் தலைசிறந்த மூன்றாவது தொழிலதிபர் விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

“பத்து, இருபது கோழி வளர்க்கிறேன். அதுகளையும் கவனிக்கணும்..” என்றபடி குடிசை வீட்டிற்குள் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக்கொண்டிருந்த தீபரமணி, பேட்டி என்றாலே யோசிக்கத்தான் செய்கிறார்.

“எனக்கு ரொம்ப பேசப் பிடிக்காது.

ஒரே இடத்திலே உட்காரவும் பிடிக்காது.

நாற்பது வருஷமா இப்படி ஓடிஓடியே பழகிட்டேன்” என்றபடி, மறைந்த கணவர் ஏழுமலையின் போட்டோ அருகில் அமர்கிறார். அவரோடு பேசுவோம்..

ஐந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு அடுத்த நேர உணவுக்கு வழியில்லாமல் தனி ஆளாக நின்று தவித்திருக்கிறீர்களே, அந்த நாட்களை நினைத்து பார்க்கும்போது இப்போது எப்படி இருக்கிறது?

“இன்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க நேரம் இருக்கிறது. அன்று எதையும் நினைத்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. எல்லா நேரமும் உழைத்துக்கொண்டிருந்தேன். காலை உணவுக்கு இட்லி வியாபாரம் கைகொடுக்கும். அடுத்து பத்து மணிக்குள் நான், மதிய உணவுக்கு சம்பாதிக்கவேண்டும். அது முடிந்ததும், நான்கு மணிக்குள் இரவு உணவுக்கு வழிதேடியாகவேண்டும். நான்கு வேலையை நான் பார்த்தாலும் 1980–ம் ஆண்டுகளில், மாதம் 100 ரூபாய்தான் என்னால் சம்பாதிக்க முடிந்தது. அதனால் இருக்கிற உணவை பிள்ளைகளுக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் நான் தண்ணீரை குடித்துக்கொண்டு படுத்துவிடுவேன்.

இந்த உலகத்தில் எவ்வளவோ பல்கலைக்கழகங்களில் வரலாறு, பூகோளம்ன்னு எத்தனையோ பாடங்களை கற்றுக்கொடுக்கிறாங்க. எந்த பல்கலைக்கழகமும் கற்றுத்தராத சிறந்த பாடம் எது என்றால், ஏழ்மைதான்னு நான் சொல்வேன். ஏழ்மை வரும்போது அழவோ, பயப்படவோ செய்தால் நாம் வாழ்க்கையில் தோற்றுப்போயிடுவோம். பதிலுக்கு எதுவந்தாலும் சமாளிப்போம் என்று எதிர்த்து நின்றால், ஏழ்மை நமக்கு அற்புதமான பல விஷயங்களை கற்றுத்தரும்.

எந்த பாடத்தின் மூலமும் கற்க முடியாத பல விஷயங்களை ஏழ்மை மூலம் நாம் கற்றுக்கொள்ளலாம். நான் இந்த அளவுக்கு பலமாகவும், தைரியமாகவும் நிற்க ஏழ்மைதான் காரணம். ஏழ்மை இல்லாவிட்டால் நான் சராசரி பெண்ணாக அடையாளம் தெரியாமல் போயிருப்பேன். ஏழ்மை என்ற பாடம் உருவாக்கிய வைராக்கியம்தான் என் மகன் சரத்பாபுவையும் இந்த அளவுக்கு உயர்த்தியது..”

ஏழ்மையோடு போராடும் பெண்ணுக்கு ரொம்ப தேவைப்படுவது உடல் தைரியமா? மன தைரியமா?

“மனதைரியம்தான் தேவை. நான் வாழ்க்கைப்பட்டு இந்த மடிப்பாக்கம் ஏரியாவுக்கு வந்தபோது, தெருவிளக்கே கிடையாது. குடிசை வீடு. என் பிள்ளைகளில் இரண்டு பேர் பெண்கள். மனதைரியத்தோடு எப்போதும் தலையணைக்குள் ஒரு கத்தியும் வைச்சிருப்பேன்”

சமீபத்தில் வாங்கிய விருதுகளில் உங்களை கவர்ந்தது எது?

“டாக்டர் ஹேமாசின்னிகிருஷ்ணன் பெயரில் ‘ஷுரோஸ்’ என்ற விருதை தந்தார்கள். ஹீரோஸ் என்று கதாநாயகர்களை சொல்வார்கள். அதுபோல் எங்களை வாழ்க்கையில் உயர்ந்த கதாநாயகிகளாக குறிப்பிட்டு அந்த விருதை தந்தார்கள். என்னைப் போல்தான் அவர்களும் கஷ்டத்தோடு போராடி, இந்தியாவிலே முதன் முதலில் சாஷே ஷாம்பு உருவாக காரணமாக இருந்திருக்கிறார். அதனால் அந்த விருது என் மனதில் நிற்கிறது. நேச்சுரல்ஸ் நிறுவனம் அந்த விருதை வழங்கியது”

உங்களுக்கு விருது வழங்குவதை பலர் பெருமையாக நினைக்கிறார்கள். உங்கள் கையால் யாருக்கு விருது வழங்குவதை நீங்கள் பெருமையாக நினைப்பீர்கள்?

“நிறைய பள்ளிகளில் என்னை அழைத்து படிப்பிலே சாதிக்கிற பிள்ளைங்களுக்கு விருது கொடுக்க சொல்றாங்க. நான் ஒவ்வொருத்தருக்கு கொடுக்கும்போதும் ‘என் பையன் மாதிரி பெரிய ஆளா வரணும்னு வாழ்த்தி கொடுக்கிறேன். நரேந்திரமோடி முதல் மந்திரியாக இருந்தபோது என் மகன் பலமுறை அவரை குஜராத்தில் சந்தித்து பேசியிருக்கிறான். இரண்டு மூணு மாசத்திற்கு முன்னால் இவன் போனதும், ‘உங்க அம்மா எப்படி இருக்காங்க? எப்போ கூட்டிட்டு வரப்போறீங்க?’ என்று கேட்டிருக்கிறார். அவர் தன் தாயை மட்டுமில்லை, எல்லா தாய்மார்களையும் மதிக்கிறவர். அதுக்காகவே நான் அவருக்கு விருதுகொடுக்கலாம்..”

மாதம் 100 ரூபாய் சம்பாதிக்க கஷ்டப்பட்டீர்கள். இப்போது நீங்கள் ஒரு வசதிபடைத்தவரின் மகன். பணம் உங்களுக்குள் என்ன மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது?

“அதே இரண்டு உருண்டைதான் என் சாப்பாடு. அதே குடிசை வீட்லதான் நானும், என் மகனும் வசிக்கிறோம். பணம் வந்துச்சுன்னு ஏ.சி. வாங்கினால் எனக்கு உடம்பு உதறுது. அந்த காலத்துல என் பிள்ளைங்களுக்காக எனக்கு பணம் தேவைப்பட்டுது. ஆனால் அது என்னைப் பார்த்து ஓடியது. இப்போ தேடிவருது. ஆனால் எனக்கு தேவைப்படலையே..!”

பணம் இருந்தால் மகிழ்ச்சி கிடைத்துவிடும் என்பது உண்மையா?

“பணம் பெரிதில்லை. நிம்மதிதான் பெரிசு. நான் தனியாளாக நின்று கஷ்டப்பட்ட நேரத்தில் ஒருவேளை என்னிடம் பணம் இருந்திருந்தால் அதுவே எனக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். தேவைப்படாத பணம் ஆபத்துதான்..”

-தி இந்து

சமூகத்தை ஏமாற்றி வாழும் சோம்பேரிகள் பலருக்கு மத்தியில் நிச்சயம் இவர் உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான ஒரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம்.

கீழ்காணும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது....

(உண்மையாக) உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் (ஏமாற்றி) வாழ்ந்திடாதே...