Home குடும்பம் குழந்தைகள் குழந்தைகளும் கணனியும்

மன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு

குழந்தைகளும் கணனியும் PDF Print E-mail
Monday, 27 May 2013 06:19
Share

குழந்தைகளும் கணனியும்

இது கணனி, இணைய யுகம். கல்வி, பொருளாதாரம், அரசியல் அனைத்துத் துறைகளையும் அது தன்வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்றைய உலகில் கணனி தொழில்நுட்பமானது அனைத்துத் துறைகளையும் பாரிய வளர்ச்சிக்கும் இட்டுச்சென்றுள்ளது. ஒரு காலத்தில் மாணவர்களின் மேற்படிப்புக்காகவே கம்யூட்டர் கல்வி பயன்பட்டது. ஆனால் கையடக்கத் தொலைபேசி, வானொலி, இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்திலிருந்தே கணனிக் கல்வி அவசியமாகப் படுகின்றது. இனியும் நாம் இதிலிருந்து ஒதுங்கியிருப்பதானது நம்மை உலக அரங்கிலிருந்து காட்டுவாசிகள் நிலைக்குத் தள்ளிவிடும்.

இதனால் சிறுவயதில் கணனியைப் பாவிப்பதற்கு குழந்தைக்குப் பெற்றோர் உதவி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எந்தெந்த வயதுகளில் எவ்வகையான பாவனை முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எவ்வகையான நன்மைகளை தங்கள் குழந்தைக்கு பெற்றுத்தரும் என்பன போன்ற விபரங்களை பெற்றோர் அறிந்திருந்பதும் அவசியமாகும்.

தங்களுக்கு தேவையான தகவல்களைச் சேகரித்தல், அவற்றை ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ளுதல், பாட, உப பாடவிதானத்திற்கான விடயங்களைப் பெறுதல், எதிர்கால வேலைவாய்ப்புக்கான கணனி தகைமைகளை பெறுவதற்கான சரியான அடித்தளத்தை இடுதல் போன்ற பல நன்மைகளை கணனி தொழில்நுட்பம் குழந்தைக்கு வழங்குகின்றது. கற்றலில் உதவி செய்கின்ற ஒரு ஊடகமாகவும் இது விளங்குகின்றது.

இந்த இடத்தில் பெற்றோராகிய நாம் ஒன்றை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். கணனி தொழில்நுட்பமானது கல்விக்கு, பூகோலமய வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையுமே தவிர ஒரு சிறந்த மாணவனை, மாணவியை உருவாக்குவதற்கு இதுமட்டும் போதாது. வெளியுக செயற்பாடுகள், நல்ல நண்பர்கள், சிறந்த குடும்பம், முறையான கல்வி போன்ற பல காரணங்கள் ஒரு குழந்தையுடைய ஆரோக்கியமான உளவளர்ச்சியினை தீர்மானிக்கின்றன. சமூகத்தொடர்பற்ற கம்பியூட்டர் பூச்சியாக மாற்றாமல் அளவோடு அதனை பாவிப்பதுடன் சமூகத் தொடர்பாடல்களில் ஈடுபடுவதும் முக்கியமாகும்.

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் முழுக்குடும்ப அங்கத்தவர்களுக்கும் பொறுப்பு இருப்பதை மறுக்க இயலாது. குழந்தைகளின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டு சரியான முறையில் வழிநடாத்தி அவர்களை உற்சாகமூட்டும் போது தான் அவர்கள் தமது அறிவை விரைவாகவும் நல்லமுறையிலும் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு குழந்தையினுடைய கல்விச் செயற்பாடுகளில் பங்குகொள்வதற்கு கணனித் தொழில்நுட்பம் வழிவகுக்கின்றது. அவர்கள் கணனிச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது பெரியவர்களும் பங்கு கொள்வது சுவாரசியமானதாகும்.

குழந்தைக்கு எந்த வயதில் கம்பியூட்டர் பாவனை முறையை அறிமுகப்படுத்துவது? எவ்வாறான கம்பியூட்டர் செயற்பாடுகள் சிறந்தவை? இணையத்தளத்தை ஆரோக்கியமாக கையாள்வது எப்படி? போன்ற பல கேள்விகள் பெற்றோர் மனங்களில் எழுவது இயல்பானது. இது தொடர்பான முறையான ஆய்வுகள் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லையாயினும் இத்துறையில் நிபுனத்துவம் பெற்றவர்கள் நல்ல ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் சிபாரிசு செய்கின்றனர். ஆனால் இவ்வாலோசனைகளை நடைமுறைப்படுத்த முன்னால் சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் அடுத்த குழந்தையிலிருந்து (வளர்ச்சியிலும் முதிர்ச்சியிலும்) வித்தியாசப்படுகின்றது. எனவே பெற்றோர் தமது குழந்தையின் உணர்வையும் ஆற்றலையும் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கணனித் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவசியமாகும்.

குழந்தை கணனி கற்பது ஏனைய இலக்குகளைவிட மிக உன்னதமான இலக்காகக் கருதக்கூடாது. உதாரணமாக ஒரு குழந்தை 15 மாதத்தில் நடக்க ஆரம்பி்க்க வேண்டும். இதைப் போல கணனியும் கற்பதையும் நோக்கக் கூடாது.

கணனி உபயோகிப்பது சமூகங்களிலிருந்து அந்நியமாதல் ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. மனித உறவு, சமூகத்தொடர்பாடல் என்பதைத் துண்டித்த ஒன்றாக கணனிக் கல்வியை குழந்தைகளுக்கு ஊட்டக்கூடாது. அதாவது முழுநேரமும் குழந்தையை கணனியில் மூழ்கவிடக் கூடாது.

இரண்டு வயதுக்குற்பட்ட குழந்தைகளுக்கு அருகில் ரேடியேசன் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என மருத்துவர்கள் கூறுவதை கவனத்தில் எடுக்க வேண்டும்.
இப்போது எந்த வயதில் எந்த வகையான கணனிப் பாவனை முறைகளை அறிமுகப்படுத்தலாம் என்பதை நோக்குவோம்.

  2 வயது தொடக்கம் 3 வயது வரை  

இவ்வயதுகளில் கணனி பாவனை முறையை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை ஆனால் பெற்றோரும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் கணனியை உபயோகிக்கும் போது அதனை அவதானிப்பது குழந்தைக்கு போதுமானதாகும்.

பெற்றோர் செய்யக்கூடியவை :

நீங்கள் கணனியைப் பாவிக்கும் போது உங்கள் குழந்தையை மடியில் வைத்திருக்கலாம்.

குழந்தையின் கையின் மீது உங்கள் கையை வைத்து Mouse ஐ இயக்குவதன் மூலம் அது எவ்வாறு தொழிற்படுகின்றது எனக் காட்டலாம்.

குழந்தைகள் பொருட்களுடன் விளையாடுவதற்கு விருப்பமுடையவர்கள். எனவே Keyboard இல் எவ்வாறு எழுத்துகளை, கட்டளைகளை அழுத்துவது எனச் சொல்லிக்கொடுக்கலாம்.

குழந்தைகள் கணனியைப் பாவிப்பது போன்ற காட்சிகள் உள்ள புத்தகங்கள், வீடியோ காட்சிகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இது அவர்களுக்கு கணனி பாவனையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன் உற்சாகத்தையும் அளிக்கும்.

  4 வயது தொடக்கம் 7 வயதுவரை 

இவ்வயதுகளில் கணனி பாவனையானது தீவிர முக்கியத்துவம் உடையதல்ல. எனினும் கல்வி சம்பந்தப்பட்ட மென்பெருட்கள் மற்றும் கணனி விளையாட்டுக்களை பாவிக்கக் கற்றுக் கொடுக்கலாம். 6 அல்லது 7 வயதுடையவர்கள் இணையத்தை பெற்றோர்களின் உதவியுடன் உபயோகிக்கத் தொடங்கலாம். இவர்கள் குழந்தைகளுக்கான Web பக்கங்களை பயன்படுத்தலாம். இவ்வாறான பாவிப்புக்களின் போது பெற்றோர் இணையத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் கற்றுக் கொடுக்கலாம்.

பெற்றோர் செய்யக் கூடியவை :

உங்களுக்கு இயலுமானவரை குழந்தைகளின் கணனிப் பாவனை நேரங்களில் உடனிருங்கள். உங்கள் அனுபவங்கள் வாயிலாக நல்ல பழக்கவழக்கங்களையும் ஒழுங்கு முறைகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

குழந்தைகளுடைய சின்னச் சின்ன ஆர்வங்களை தட்டிக் கொடுங்கள். உதாரணமாக அவர்கள் கணனியில் வரைந்த படமொன்றை பிரதி எடுத்து அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களை மகிழ்வியுங்கள்.
குழந்தைகள் ஈமெயில் பாவிப்பார்களாயின் அந்த ஈமெயிலை நீங்களும் பாவிப்பதன் மூலம் எவ்வாறு ஈமெயில் எழுதுவது, எவ்வாறு பதிலனுப்புவது போன்ற விடயங்களைச் சொல்லிக் கொடுங்கள்.

பொரும்பாலான பாடசாலைகள் தங்களுக்கான வெப் பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களுடன் ஈமெயில் மூலமாகத் தொடர்பு கொள்ளக்கூடிய சாத்தியங்களும் உண்டு. இவ்வாறான வசதிகளைக் கண்டறிவதன் மூலம் குழந்தையின் பாடசாலைச் செயற்பாட்டில் கூடுதலாகப் பங்கு கொள்ளலாம்.

நூலகர்கள், ஆசிரியர்கள் போன்றோருடன் கலந்துரையாடுவதன் மூலம் பெற்றோர் தொடர்பான சஞ்சிகளைகளை வாசிப்பதன் மூலமும் எவ்வாறு கணனியை குழந்தைகளின் தேவைகளுக்காக ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் எனக் கலந்துரையாடுங்கள்.

  8 வயது தொடக்கம் 11 வயது வரை 

இந்த வயதினர் கணனியையும் இணையத்தையும் அதிக அளவில் உபயோகிக்க அனுமதிக்கலாம். இணையத்தை பாடசாலைத் தேவைகளுக்காக உபயோகிக்கலாம். உதாரணமாக படங்களைப் பெறுவதற்கும் கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் ஈமெயில் தொடர்புகளையும் ஏற்படுத்த ஆரம்பிக்கலாம்.

இந்த வயதுக் குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பிக்கிறார்கள். ஆகவே அவர்களை உன்னிப்பாக அவதானிப்பதுடன் சரியான ஒழுங்கு முறைகளையும் நடத்தைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

பெற்றோர் செய்யக்கூடியவை :

இணைய, கணனிப் பாவனை பற்றிய சரியான விதிமுறைகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றை மீறினால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணனி விளையாட்டு மென்பொருள் உற்பத்தியாளர்கள் இவ்வயது குழந்தைகளையே தமது நுகர்வோராகக் கொண்டுள்ளனர். எனவே எக்கச்சக்கமான கவர்ச்சியான விளம்பரங்களால் குழந்தைகள் ஈர்க்கப்படலாம். இணையம் மூலமாக இவ்வகையான பொருட்களையும் வாங்கவும் வசதிகள் உள்ளன. உங்கள் அனுமதியின்றி இணையம் ஊடாக பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டாம். அத்துடன் உங்களது தொலைபேசி பில்லையும் கிரடிற்காட் பில்லையும் கவனமாக சரிபாருங்கள்.

கணனி பாவைனை நேரம் அதிகரித்தால் குழந்தையின் வெளியுலக / சமூக செயற்பாடுகளைக் குறைக்கும். ஆகவே கணனி பாவிப்பதற்குரிய நேரத்தை வரையறை செய்யுங்கள்.

  12 வயது தொடக்கம் 14 வயதுவரை 

இந்த வயதுக் குழந்தைகள் இணையத்தின் முழுமையான பயனையும் பெறத்தொடங்களாம். பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகள், கட்டுரைகள் என்பற்றை வாசிக்கலாம். இவ்வயது குழந்தைகளில் பெரும்பாலானோர் இன்டநெற் Chat எனப்படுகின்ற மற்றவர்களுடன் உரையாடிக் கொள்ளும் முறையை பாவிக்கின்றனர். இவர்களுக்குரிய நல்ல Chat சோவைகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இதன் மூலமாக தங்களுக்கு ஒத்த விருப்பு வெறுப்புக்களைக் கொண்ட பலருடன் அவர்கள் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

பெற்றோர்கள் செய்யக்கூடியவை

இந்த வயதுப்பிள்ளைகள் தாமாகவே விடயங்களை அறியமுற்படுவர். நல்ல ஆலோசனைகளையும் வரையறைகளையும் அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும்.
அவர்களுடைய இணைய பாவனையின் போது அருகில் இருக்க முயற்சி செய்யுங்கள். இது மிகவும் கடினமான காரியம் எனினும் மிகவும் அவசியமானது. அருகில் இருக்க முடியாவிட்டால் நீங்கள் அடிக்கடி நடக்கக்கூடிய பொதுஅறையில் கணனியை வைக்க வேண்டும்.

இணைய உலகில் பல சட்டதிட்டங்கள் உள்ளன. அவ்வாறான சட்டதிட்டங்களையும் அவற்றை மீறினால் வரும் விளைவுகளையும் அவர்களுக்குக் கூறுங்கள்.

எந்தெந்த Chat கள் பிள்ளைகளுக்கு பொருத்தமானவை எனக்கண்டிறிந்து அவர்களுக்குத் தெரிவியுங்கள். அத்துடன் அதில் எவ்வளவு நேரத்தை செலவளிக்கலாம் என்பதையும் வரையறை செய்யுங்கள்.
கணனியின் இயக்கத்தை சீர்குலைக்கும் வைரஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்குங்கள். வீட்டில் எல்லோரும் உபயோகிக்கும் பொதுவான கணனியாயின் இதனை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது. இணையத்தளங்கள், Flash Drive போன்றவற்றின் மூலம் பரவும் வைரஸ்களின் தீங்கை எழுத்துக்கூறி அவற்றை பாதுகாப்பாக கையாளும் நடைமுறையையும் காண்பிக்க வேண்டும்

இணையத்திலிருந்து நல்ல கணனி விளையாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அநேகமானவை குழந்தைகளுக்குப் பொருத்தமானவையாக இருந்தாலும் சில அளவுக்கு மீறிய வன்முறைத்தன்மை கொணடவை. இது தொடர்பாக குழந்தைகளுக்கு தெளிவாக விளக்குவதுடன் அவர்கள் விளையாடுவதை நீங்களும் பார்க்க வேண்டும்.

  15 வயது தொடக்கம் 18 வயது வரை 

இந்த வயதுப்பிள்ளைகளுக்கு இணையம் ஒரு ஆசிரியரைப் போன்றதாகும். கல்வி சம்பந்தப்பட்ட தேடல்கள், பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்கும் அராய்வதற்கும் இணையம் இவர்களுக்குப் பெரும் துணை புரிகின்றது. தங்களுடைய மேற்படிப்பைத் தொடர்வதற்கு எவ்வகையான துறையை தேர்ந்தெடுப்பது, எந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் சிறந்தவை போன்ற சிக்கலான விடயங்களைத் தீர்ப்பதற்கு இணையத்தின் துணை தேவைப்படுகின்றது. இவ்வயதினர் அதிகநேரத்தை இணையத்தில் செலவளிக்க வேண்டியிருக்கும்.

பெற்றோர் செய்யக்கூடியவை

உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் குடும்பத்தினருக்குத் தேவையான சிலவிடயங்களைக் கொடுத்து அவை பற்றி இணையத்தில் ஆராய்ந்து சொல்லுங்கள். உதாரணமாக விடுமுறைச் சுற்றுலா ஒன்றுக்குச் செல்வதற்கு முன் இடத்தைத் தேர்ந்தெடுத்தல். ஒரு பொருளை வாங்க முதல் அதுபற்றிய ஆய்வுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பின்னர் அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றி ஒன்றாக அமர்ந்து விவாதியுங்கள். இவ்வாறு குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாக அமர்ந்து விவாதிப்பது அவர்களது ஆய்வை மேம்படுத்த உதவும்.
உங்கள் பிள்ளைகள் கணனிப்பாவனையுடன் வெளியுலகச் செயற்பாடுகளையும் சரியான விகிதத்தில் மேற்கொள்கிறார்களாக என அவதானியுங்கள். இவற்றோடு அதான், கிராஅத் போன்றவற்றிற்கு கணனியைப் பயன்படுத்தவைக்கலாம்.

உங்கள் பிள்ளைகள் கணனியை கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்களை ஊக்குவிப்பதுடன் சரியான திசையில் அவர்களை வழிநடாத்துங்கள்.
உங்கள் பிள்ளை கவிதை, கதை, கட்டுரை, ஓவியம் வரையக்கூடிய திறன் இருந்தால் அவற்றை வளர்ப்பதற்கும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்குமான ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டுங்கள்.

ஆரம்பப் பாடசாலைகளில் ஆண், பெண் குழந்தைகளின் கணனிப்பாவனை அதிக வேறுபாடு இல்லை. ஆனால் வயது ஏற ஏற கணனி உலகமானது பெரும்பாலும் ஆண்பிள்ளைகளைச் சார்ந்தே இயங்குகின்றது. உதாரணமாக கணனி விளையாட்டினைக் குறிப்பிடலாம். இதன் காரணமாக பெண் குழந்தைகளின் கணனி ஆர்வம் மெதுமெதுவாகக் குறைகின்றது. பாடசாலைத் தேவைகளுக்கு ஆண்பிள்ளைகளை விட பெண்பிள்ளைகள் அதிகமாக கணனி பாவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய உலகின் வேலைவாய்ப்பானது பெரும்பாலும் கணனியைச் சார்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றன. சர்வதேச மொழிகளில் ஏதாவது ஒன்று குழந்தைக்குத் தெரியுமாக இருந்தால் ஈகொமர்ஸ் என்ற துறையிலிருந்தே உங்கள் குழந்தை வேலைவாய்ப்பைப் பெறமுடியும். கணனித் தொழில்நுட்பத்தில் ஆண் பெண் வேறுபாடின்றி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகின்றது. எனவே பெற்றோர் ஆண் பெண் பாகுபாடு காட்டாது கணனிக் கல்வி வழங்குவது அவசியமாகும்.

source: http://idrees.lk/?p=658