Home இஸ்லாம் கட்டுரைகள் கலாச்சாரங்களை ஒழித்துக்கொண்டிருக்கும் இஸ்லாம்
கலாச்சாரங்களை ஒழித்துக்கொண்டிருக்கும் இஸ்லாம் PDF Print E-mail
Saturday, 16 March 2013 06:47
Share

கலாச்சாரங்களை ஒழித்துக்கொண்டிருக்கும் இஸ்லாம்!

ஆதிமனிதர்களான ஆதம் மற்றும் அவர் மனைவி ஹவ்வா இருவரும் இவ்வுலகிற்கு படைத்தனுப்பப்பட்ட பின்னர், அவ்விருவரும் இப்படி இப்படித்தான் இம்மண்ணில் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு அன்றே இறைவனால் கொடுக்கப்பட்ட கலாச்சாரம்தான் இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி. இதனை, தன் இறைத்தூதர் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், அவர்கள் மூலம் அவரின் மனைவி ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இறைவன் மூலம் பரிசளிக்கப்பட்டது.

இதுவே- இந்த இஸ்லாமே- இவர்களின் வழித்தோன்றல்களும் கடைப்பிடித்தொழுக வேண்டிய வாழ்வியல் நெறி. அப்படி இருக்க, முதன்முதலில் இந்த நெறிக்கு எதிராக ஆதம் நபியின் மகன் தன் சகோதரனை கொலை செய்தார். முதல் மனித மரணம். கொலை. இப்படித்தான் இஸ்லாத்திற்கு எதிரான 'கலாச்சாரங்கள்' உலகில் ஆரம்பித்தன. கலாச்சாரம் என்றாலே.. ஒரு நாலுபேர் ஒரே மாதிரி செயல்படுவதும், அதையே அவர்களின் வழித்தோன்றல்கள் எக்கேள்வியும் இன்றி பின்பற்றுவதும் தானே..?!

இதுபோல் மனித குலத்துக்கு-மனித உரிமைக்கு-இஸ்லாத்திற்கு எதிரான பல கலாச்சாரங்கள் தீய மனிதர்களால் உருவாகின. அப்போது இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி மக்கள் மறந்ததாலோ அல்லது பின்பற்றப்படாது போயிருந்ததாலோ, அந்த தீய கலாச்சாரங்கள் மிகுதியாகின.

அப்போதெல்லாம் இந்த மனித சமுதாயத்துக்கு நன்மையை ஏவி, தீமையை தடுக்க அந்த மனிதர்களிலிருந்தே, ஒருவரோ இருவரோ இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆதிமனிதர் ஆதம் நபிக்கு அளிக்கப்பட்ட அதே... 'இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி'யை அதே அடிப்படையுடன் அக்கால சூழலுக்கு ஏற்ப தேவையேற்படின் சில விஷயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு மனிதகுலத்துக்கு மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த... இஸ்லாம் எனும் வாழ்வியல் கலாச்சாரத்தை- வாழ்க்கை நெறியை மக்கள் மனதில் புணரமைக்கும் வேலையை அவ்வப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இறைத்தூதர்கள் தம் மக்களிடம் செய்து வந்தனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இறைத்தூதர் வந்தார். அப்படி வந்தோரில்... ஒரு 25 இறைத்தூதர்களைப்பற்றியும் அவர்களின் வரலாற்று சம்பவங்களையும் கற்பதன் வாயிலாக இக்கால மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக வேண்டி, திருக்குர்ஆன் மூலம் இறைவனால் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

திருக்குர்ஆன் குறிப்பிடும் அந்த 25 இறைத்தூதர்கள்... ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், துல்கிப்லு, அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் ஸலாம் உண்டாவதாக) ஆகியோர்..!

இவர்கள் அனைவருக்கும் இறைவானால் அருளப்பட்ட வாழ்வியல் நெறி ஒன்றுதான் -ஒரேகலாச்சாரம்தான்- அது இஸ்லாம்..! இதைத்தான், இவர்கள் தம் மக்களுக்கும் போதித்து... தாமும் அதன்படியே வாழ்ந்தும் காட்டும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டு கண்கானிக்கப்பட்டார்கள்.

இறுதியாக... ஒரு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றொருவர் தேவைப்படும் அளவுக்கு அப்போது அப்படியென்ன தீய கலாச்சாரங்கள் அந்த அரபிய மக்களிடம் மிகுந்திருந்தன..? அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

(பண்டையகால அரேபிய கொடிய காட்டுமிராண்டி கலாச்சாரம்)

பெண் குழந்தைகள் பிறந்தால் நம்மைப்போல நெல்மணிகளையோ, எருக்கம்பூவையோ, கள்ளிப்பாலையோ தேடி நேரத்தை விரயம் பண்ணமாட்டார்கள் அந்த காட்டரபிகள். பிறந்தவுடனேயே அந்த 'பச்சை மண்ணை' ஈவிரக்கம் இன்றி சுடும் பாலை மண்ணில் புதைத்து விடுவார்கள் அந்த கொலைபாதக காட்டுமிராண்டி அரபிகள்.

ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஸ்லாமிய புணரமைப்பின் மூலம் புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பிறகு அப்போதிருந்து இப்போது வரை, பெண் குழந்தை என்றால் அப்படியொரு சந்தோசம். இரண்டாவது பெண் குழந்தை என்றால் இரட்டிப்பு சந்தோசம். ஆவலாய் இருந்து நான்காவது ஐந்தாவது மாதமே ஸ்கேன் பண்ணிபார்த்து... மூன்றாவதும் பெண் குழந்தை என்று தெரிய வந்தால்... கேட்கவே வேண்டாம்... மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை அவர்களிடம்..! அன்றே சுவனம் சென்றுவிட்டது போன்ற பெருமகிழ்ச்சி அந்த இஸ்லாமிய கலாச்சார பெற்றோரிடம்..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? ஸ்கேன் பண்ணிய டாக்டரிடம் யாராவது, 'என்ன குழந்தை' என்று கேட்டாலோ அல்லது எவராவது சொன்னாலோ.. போதும்..! போலிஸ் வரும்..! சட்டப்படி கைது செய்ய விலங்கோடு..!? கேவலம் இல்லையா இந்த சட்டமும் அதற்கான பின்னணியும்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?

அன்றைய அரபிகள் பெண்களை அடிமைபோல நடத்தினர். பகலிலும் இரவிலும் வேலை வாங்கினர். அதற்கு பிரதியாக சாப்பாடு போட்டனர். இதுதான் அபோதைய அரபி கலாச்சாரம். ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அம்மக்களிடம்..! இன்று அவர்களிடம், ஒரு பெண் மலையளவு பொற்குவியலையே தன் திருமணத்துக்காக கேட்டாலும், அதை மஹராக தரச்சொல்கிறது இஸ்லாமிய கலாச்சாரம்..! சமீபத்தில் என்னுடன் பணியாற்றும் ஒரு அரபி இரண்டு லட்சம் ரியால் (23 லட்சம் ரூபாய்) மஹர் கொடுத்து திருமணம் புரிந்தார். மேலும்... வாடகைஃபிளாட், ஃபர்னிச்சர், கார், சமையல் சாமான்கள், திருமணவிருந்து என அனைத்திற்குமாக சேர்த்து இன்னொரு இரண்டு லட்சம் ரியால் அவரே செலவு செய்தார். (இதுவே இவர்களிடம் ஒரு சராசரி திருமணமாம்..!) அந்த மஹர் முழுமைக்கும் நகைவாங்கி போட்டுக்கொண்டு அந்த அரபியபுதுமணப்பெண் கையை வீசிக்கொண்டு மஹாராணியாய் இல்வாழ்க்கையில் நுழைந்தார்..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..!

இஸ்லாமிய பெண்ணுரிமை..!?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? பெண்வீட்டாரிடம் வரதட்சிணை, நகை, சீதனம், திருமண விருந்து, மண்டபம், வரவேற்பு... இத்யாதி..இத்யாதி...! இதில், வரதட்சிணை மட்டும் சட்டப்படி குற்றம். எங்காவது போலிஸ் வருகிறதா கைது செய்ய விலங்கோடு..!? போலிஸ் ஐஜி அல்லது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டு திருமணத்திலேயே இவையாவும் இருக்காதா..!? 'அஞ்சு பொட்டையை பெத்தா அரசனும் ஆண்டி' என்றல்லவா நம்முடைய பழமொழி சொல்கிறது..? கேவலம் இல்லையா இந்த நமது இந்த பெண்ணுரிமைக்கு எதிரான இந்திய கலாச்சாரம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய பெண்ணடிமைத்தன காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?

அந்நாளில் அரபியரிடத்தில் விபச்சாரம் கொடிகட்டி பறந்தது. பெண்கள் ஆபாச உடை அணிந்திருந்தனர். ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பெண்கள் கண்ணியமான உடை அணிந்தனர். மதிக்கப்பட்டனர். விபச்சாரத்துக்கே அங்கே வேலையே இல்லை. என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? சென்சார் கட் விழும் என்பதால் நடிகைகள் கூட போடாத ஆபாச ஆடையை இளம்பெண்கள் அணிவதும், சினிமா, டிஸ்கோத்தே, பஃப், நைட் பார்ட்டி, பார், டேட்டிங் என அனுமதி பெற்றும் பெறாமலும் விபச்சார வாசல் தாளாரமாய் இன்றய இளைஞர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இவை ஏதும் அரசாலும் சமூகத்தாலும் கண்டு கொள்ளப்படுவதும் இல்லை. திருமண உறவு இல்லாமல், விபச்சாரம் செய்து இருவர் மாட்டிக்கொண்டால், சட்டப்படி அங்கே பெண்தான் குற்றவாளி..! அப்போது பெரியமனது வைத்து அந்த ஆண், 'விரும்பித்தான் ஈடுபட்டோம்' என்றால் அது சட்டப்படி விபச்சாரமே அல்ல..! இன்னும், இப்போது 'கால்செண்டர் வாசல்களில் காண்டம் மெஷின் வைக்கிறார்கள்' என்கிறது சென்ற மாத செய்தி..! 'இந்திய தேவதாசி கலாச்சாரம்' இன்னும் இருப்பதாய் சென்றவாரம் ஒரு செய்தி..! கேவலம் இல்லையா இதெல்லாம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி விபச்சார கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?

இதேபோன்று, அப்போது மது அரபியரிடத்தில் ஆறாக ஓடியது. மற்ற தீயதை எல்லாம் ஒரேநாளில் சட்டம்போட்டு ஒழித்து வெற்றி நாட்டிய இறைநெறி, இங்கே மட்டும் இஸ்லாமிய கலாச்சார மாற்றம் படிப்படியாக மூன்று சட்டங்கள் மூலம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு மதுவில் மதிஇழந்து போயிருந்தனர் அந்த காட்டுமிராண்டி அரபிகள். ஆனாலும், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பிறகு ஒரு சொட்டுகூட மது இல்லை..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

(மதுவை எதிர்த்து அரசிடம் கோரிக்கை மனுவுடன் செய்வதறியாது திகைக்கும் நாம்..!)

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? அரசாங்கமே கொலை வெறியோடு மதுக்கடை வைத்து வியாபாரம் செய்யும் நிலையில் நாம் இதை யாரிடம் முறையிடுவது..? பள்ளி மாணவர்கள், பெண்கள் உட்பட எல்லாரும் மது குடிக்கிறார்கள். இதனால், நாட்டின் முன்னேற்றத்திற்காக சிந்திக்க வேண்டியவ படித்த பண்டிதர்கள் எல்லாம் சிந்தை மயங்கி செயலற்று வீழ்ந்து கிடக்கின்றனர். மதியிழந்து வாகனம் ஓட்டி அப்பாவி பாதசாரிகளை கொலை செய்கின்றனர். சொத்துக்கள் கொள்ளை இடப்படும்போது சிந்தை இழந்து செயலற்று போய் விடுகின்றனர். தன் குடும்பத்து (தாய்/சகோதரி) பெண்களிடமே பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். பல ஆண்டுகள் வாழ்வேண்டியவர்கள் அல்ப ஆயுசுகளில் நோய் வந்து இறக்கின்றனர். கேவலம் இல்லையா இந்த ஹரப்பா கால பழம்பெரும் சோமபான சுராபான பாரத கலாச்சாரம்..? தேவையா இந்த தமிழக டாஸ்மாக் கலாச்சாரம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி குடிகார கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?

அப்போது அறியாமைக்கால அரபியரிடத்தில், கணவனை இழந்த கைம்பெண்கள் என்றாலே விபச்சாரத்தில் தள்ளப்பட்டனர். வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! புணரமைக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சாரம் மூலம் கணவனை இழந்த கைம்பெண்கள் உடனடியாக மறுமணம் செய்விக்கப்பட்டனர், ஏகப்பட்ட மஹரும் பெற்றுக்கொண்டு..! மேலும் இவர்கள் மிகைக்கும் பட்சத்தில், ஒருதார மணமே சிறப்பு எனினும், பொருளாதாரமும் உடல்வலிமையும் அதிகம் இருக்கும் ஆண்கள் அதிபட்சம் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டு விதவைகள் மறுவாழ்வு நிகழ்த்திக்காட்டப்பட்டது. என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? இதோ சென்ற நூற்றாண்டில்தான் கைம்பெண்களை உடன்கட்டை ஏற்றும் நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரம் பல போராட்டங்களின் விளைவால் நீக்கப்பட்டு அதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த ஆகம விதி சமய அடிப்படையில் நடக்கின்றனவே..? பூ, மஞ்சள், குங்குமம், தாலி, நகை, வண்ணப்புடைவை என்று திருமணம் மூலம் சுமங்கலி வேஷம் கொடுத்து, கணவன் இறந்துவிட்டால் அவை ஏதுமற்ற மொட்டைத்தலை அமங்கலி வேஷம் கட்டுதல் போன்ற நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரம் எல்லாம் கேவலம் இல்லையா..? இதனை கலாச்சாரம் எனக்கூறி கட்டிக்காக்க நமக்கு வெட்கமாக இல்லையா..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?

கருப்பாக பிறந்தவன் என்றால் அடிமை என்ற நிலை. அரபி பேசாமல் வேறு எந்த மொழி பேசினாலும் அவர்கள் 'கால்நடைகள்' என்று புரிந்துணர்வில் வாழ்ந்துகொண்டிருந்த காட்டுமிராண்டி காலத்தில், இந்த நிறவெறியை மொழிவெறியை ஒழித்து 'எந்த நிறம், இனம், மொழி எனினும் அனைவரும் ஆதிமனிதர் ஆதம்-ஹவ்வா தம்பதிகளுக்கு பிறந்த ஒரு தந்தை-தாய் வயிற்று பிள்ளைகள் ஆகிய நாம் சகோதரர்களே' என்ற சமத்துவத்தை நிலைநாட்டியதே..! வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..!
ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? இன்னும் பாப்பாபட்டி கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த வக்கில்லை நமக்கு. தீண்டாமை சுவரை கட்டுகிறான். பலத்த காவலுடன் இடித்தால், மீண்டும் கட்டுகிறான். இரட்டை குவளை. ஒரே மதம் என்றாலும் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாட்டில் அனுமதி இல்லை. கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பேசினால் தமிழ் பேசுகின்றவனுக்கு தண்ணீர் விடுவது இல்லை. கேவலம் இல்லையா இது..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டிகால மொழிவெறி, இனவெறி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?

இதேபோலத்தான்... நாமே செய்த சிலைகளை வணங்குதல், கல், மண், மரம், காற்று, நெருப்பு, மழை, சூரியன் என கண்டதையெல்லாம் காக்கும் இறைவன் என கருதி வணங்குவது, வட்டி, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை, பில்லி, சூனியம், மந்திரம், ஜோசியம், அதிர்ஷ்டக்கல், சகுனம், ஜாதகம், தோஷம், மூடநம்பிக்கைகள், தானாக செத்ததையும், கண்டதையும் உண்ணுதல், முறைதவறி திருமணம் செய்தல், பெண்களுக்கு சடங்கு சம்பிரதாயம் என்று அலப்பறை, மரம் வளர்ப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிராக இறந்தோரை எரித்தல், யாரோ எவரோ தன் சுயநலனுக்காக எப்போதோ ஏற்படுத்திய மணுதர்மம் எனும் சாதிய சதியை இன்னும் நாம் பிடித்துக்கொண்டு நமக்குள் அடித்துக்கொண்டு இருப்பது போன்ற இத்தனை பாரம்பரிய கலாச்சாரத்தையும் கட்டிக்காக்க வேண்டுமா அல்லது மனித குலத்துக்கு ஏற்ற சிறந்த கலாச்சாரத்தை - இவ்வுலகுக்கு ஏற்ற வாழ்வியல் நெறியை - இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றுவதா என்று 20 கோடி இந்தியர்கள் இன்று யோசிப்பது போலவே உலகில் இருக்கும் மூன்றில் ஒருபங்கு மக்களும் யோசிக்கின்றனர்.

சகல கலாச்சாரத்தையும் சீர்தூக்கி நன்மை தீமைகளை தீர ஆலோசித்ததன் முடிவு, இறுதியில் இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர். இது தம் 'உயர்ந்த இருப்பை' பாதிக்கும் என்போர் மட்டும் 'கலாச்சாரகாவலர்(?)' வேஷம் போட்டு இஸ்லாத்தையும் அதனை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வோரை(முஸ்லிம்களை)யும் வீம்புக்காக எதிர்க்கின்றனர். ஆனால், உண்மையில் இப்படி எதிர்ப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் மட்டும் அறிந்தோ அறியாமலோ 'இதுதான் சரி' என்று ஒன்றை விரும்புகின்றனர். 'அதுதான் இஸ்லாம்' என்று பின்னாளில் அறிய வரும்போது அவர்களும் தங்கள் போலி வேஷத்தை கலைத்துவிட்டு முஸ்லிம் ஆகின்றனர். இறைவனுக்கே எல்லாப்புகழும்.

ஆக, இப்படித்தான்... உலகில் மனித குலத்துக்கு எதிராக நாம் உருவாக்கி வைத்துள்ள நமது பல தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து மக்களின் வாழ்வியல் நெறியை செம்மை படுத்திக்கொண்டிருக்கிறது இஸ்லாம். பிற மனிதர்க்கு நன்மை பயக்கும் நல்ல கலாச்சாரங்களை இஸ்லாம் என்றுமே எதிர்த்ததுமில்லை; அழித்ததுமில்லை. எனவே, நல்ல கலாச்சாரங்களை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்வோம். நம்மிடம் இருக்கும் தீய கலாச்சாரங்களை விட்டொழிப்போம். அதை இஸ்லாமும் எதிர்க்கிறது என்பதற்காக கட்டிக்காப்பாற்ற முனைவது சமுதாயக்குற்றம்.

இதை நான் சொல்வதற்கு காரணம், நான் பின்பற்றும் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"...என்ற நல்ல தமிழ் கலாச்சாரம்..! இதுவேதான்... நான் பின்பற்றும் "உனக்கு எதை நாடுகிறாயோ அதையே உன் சகோதரருக்கும் நாடு" என்ற இஸ்லாமிய கலாச்சாரம்..!

'தீய கலாச்சாரம்'
"இஸ்லாம்தான் நம் நாட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்திருக்கிறது" என்ற நச்சுக்கருத்தை சிலர் பரப்புகிறார்கள். இஸ்லாம் பற்றிய இன்றைய 'கலாச்சார காவலர்(?)களுடையது' முற்றிலும் தவறான புரிதல் ஆகும். இதை இவர்கள் உணரவேண்டும். எவ்வளவு விரைவாக உணர்கிறார்களோ அது அவர்களுக்கும் மற்றோருக்கும் மகத்தான நன்மை. ஆதலால், தீய கலாச்சாரங்களை தூக்கி தூர வீசி எறிந்து விட்டு நல்ல கலாச்சாரத்தை நம் வாழ்வினில் கைக்கொள்வோம் சகோ..!
மனித சமுதாயத்திடம் உள்ள தீய கலாச்சாரங்களைத்தான் இஸ்லாம் ஒழித்துக்கொண்டிருக்கிறது..!

source: http://pinnoottavaathi.blogspot.com/2011/06/blog-post_17.html