Home கட்டுரைகள் சமூக அக்கரை அரசியல் ஆதாயம் தேட முயலும் கருணாநிதியின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்கள் பலியாக வேண்டாம்!
அரசியல் ஆதாயம் தேட முயலும் கருணாநிதியின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்கள் பலியாக வேண்டாம்! PDF Print E-mail
Thursday, 31 January 2013 06:33
Share

அரசியல் ஆதாயம் தேட முயலும் கருணாநிதியின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்கள் பலியாக வேண்டாம்!

ஒரு சமுதாயத்தின் இருப்பையே சந்தேகப்படுத்தும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்வதற்கு போராடும் ஒரு சமுதாயத்திற்கு எதிராக வார்த்தைஜாலம் மூலம் ஏமாற்ற முயல்வது அநீதம்.

கடந்த இரு வாரங்களாக கமலஹாஸனின் விஷ்வரூப படத்தை தடைசெய்ய வேண்டும் எனும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் வலுவான சக்தியை நீர்த்துப்போகச்செய்ய கடைசியாக களத்தில் குதித்திருக்கிறார், முஸ்லிம்களை முதுகில் குத்துவதே வழக்கமாகக் கொண்ட கருணாநிதி.

முஸ்லிம்களின் ஒற்றுமையை வலுவிழக்கச்செய்யும் அவரது எந்த முயற்சிக்கும் முஸ்லிம்கள் இனி பலியாக மாட்டார்கள் என்பதை அவருக்கு உணர்த்தவேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கும் அவரது சூழ்ச்சிக்கு பலியாகாமல் இப்பிரச்சனையில், முஸ்லிம்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து முழு வீச்சுடன் விஷ்வரூப படத்தை தடை செய்ய இன்றைய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது நம்முடைய பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான பிரச்சனை. அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் நிலவும் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து தனது சுய இலாபத்துக்காகவே களத்தில் குதித்திருக்கிறார் கருணாநிதி. அதுவும் எப்பொழுது என்பதை கவனித்தால் அவரது சுயரூபத்தை புரிந்து கொள்ளலாம்.

ஒன்றுபட்ட முஸ்லிம்களின் ஆக்ரோஷமான எழுச்சியின்போது அதைப்பற்றி எவ்வித கருத்தையும் (ஆதரவோ எதிர்ப்போ எதுவும் காட்டாமல்) கூறாமல் திடீரென்று முஸ்லிம்களின் பக்கம் காற்று வீச ஆரம்பித்தவுடன் தனது நண்பர் கமலஹாஸனின் கஷ்டத்திற்கு(!!!) கைகொடுக்க வந்துவிட்டார் இந்த சாணக்கியன்.

இப்பொழுதுமட்டும் அவரது ஆட்சி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்...? ஆயிரக்கணக்கான் முஸ்லிம்களை சிறையிலடைத்து தனது சந்தர்ப்பவாதத்தை நிலைநாடியிருப்பார். ஏற்கனவே கோயம்புத்தூரில் இதைத்தானே செய்தார்.

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின்போது என்ன நடந்தது சற்று பின்னோக்கிப்பாருங்கள். குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் சற்று நேரத்துக்குப்பின் ரஜனிகாந்த் ஒரு அறிக்கை விடுகிறார்... "முஸ்லிம்கள் குண்டு வைப்பதற்கு சான்ஸே இல்லை... இது முஸ்லிம்கள் வைத்த குண்டு அல்ல..." என்று. ஆனால் ஆட்சியில் இருந்த கருணாநிதி என்ன செய்தார். தனது பி.ஜே.பி. விசுவாசத்தைக்காண்பித்து ஆதாயம் தேட முயன்று ஏராளமான முஸ்லிம்களின் வாழ்க்கையை சீரழித்தார். பல ஆண்டுகளுக்குப்பின் குற்றமற்றவர்களாக முஸ்லிம்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளியானார்களே... அப்படியெனில் நிரபராதிகளை கொஞ்சமும் ஈவு இறக்கமின்றி கைது செய்த கருணாநிதி மிகப்பெரும் குற்றவாளியல்லவா? இதுகூட விளங்கிக்கொள்ளாமல் கருணாநிதியை இப்போதும்கூட தலையில் வைத்துக்கூத்தாடும் முஸ்லிம்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் அவரது உண்மை சொரூபத்தை.

இப்போது இந்த பட விஷயத்தை எடுத்துக்கொள்வோமே.... அரசாங்கம் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதிமன்றத்தில் வலுவான ஆதார்ங்களைக்காண்பித்து படத்தை தடை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போதுதான் இவர் சீனுக்கே வருகிறார். அதுவும் தனது சுயநலத்துக்காக அன்றி வேறில்லை. உண்மையில் அவர் கமலுக்கு ஆதரவாக களம் இறங்க எண்ணியிருந்தால் முதலிலேயே இறங்கியிருக்க வேண்டும். முஸ்லிம்களின் ஓட்டு தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ எனும் அச்சமோ என்னவோ! தற்போதைய அரசு எடுத்துவரும் நரவடிக்கைகள் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பாராட்டும் விதத்தில் அமைந்துவிட்டால் இதுவரை தான் சொல்லி வந்த "நான்தான் முஸ்லிம்களின் தோழன்'' எனும் வார்த்தை ஜாலம் என்னாவது?! சும்மா இருக்கமுடியுமா அவரால்... வந்துவிட்டார் சீனுக்கு கொடியைத் தூக்கிக்கொண்டு... அரசியல் பண்ண!

இந்த நேரத்தில் கருணாநிதிக்கு ஒன்று சொல்லிக்கொள்வோம். முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக நீங்கள் பயன்படுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது. வாய்ச்சவடால்கள் இனி பளிக்காது. உண்மையில் கமலஹாஸனைவிட நன்றாகவே நடிக்கக்கூடியவர்தான் கருணாநிதி. முஸ்லிம்களை நட்பு பாராட்டியே ''முஸ்லிம்களும் திருமணங்களை பதிவு செய்யவேண்டும்'' எனும் சட்டத்தைக் கொண்டு வந்து ''முஸ்லிம் ஜமாஅத்''தை வலுவிழக்க அவர் செய்த சூழ்ச்சியை ஒவ்வொரு முஸ்லிமும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் இருப்பையே சந்தேகப்படுத்தும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்வதற்கு போராடும் ஒரு சமுதாயத்திற்கு எதிராக வார்த்தைஜாலம் மூலம் ஏமாற்ற முயல்வது அநீதம்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய புளுகு :

கமலஹாஸன் திரைப்படத்தில்தான் இதுவரை நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்பதை அவரது பேட்டிக்களே இனங்காட்டுகின்றன... எவ்வளவு பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் பாருங்கள்...

தமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. மதச்சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன்.

எனது படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை. எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான். இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும்.

எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றார் கமல்ஹாசன்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய புளுகு இதுவாகத்தான் இருக்க முடியும்.

 விஷ்வரூபம் படத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டுமென்பதே ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் விருப்பமாக இருக்க வேண்டும்.

அரசியல் ஆதாயத்துக்காக விட்டுக்கொடுத்தோமென்றால் மறுமையில் அல்லாஹ்விடம் குற்றமுள்ளவர்களாக நிற்க நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்.

 "... அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்... அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் மிகைத்தவன். (அல்குர்ஆன்)

 - M.A. Mohamed Ali. B.A.