Home கட்டுரைகள் எச்சரிக்கை! வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு!
வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு! PDF Print E-mail
Wednesday, 26 December 2012 21:27
Share

      வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு!       

\மச்சான் உறவு முறை என்பது இரண்டு வகைப்படும். ஒன்று மாமியின் மகன் மச்சான் என்ற உறவின் அடிப்படையில் அமைந்தது. இரண்டாவது கணவனின் சகோதரன் அல்லது சகோதரியின் கணவன் என்ற முறையில் ஏற்படும் உறவு. இவர்களுடன் பேசுவதற்கு மார்க்தக்தில் தடையில்லை. ஆனால் இந்த அனுமதியை பயன்படுத்தி வரம்பு மீறக் கூடாது.

ஆனால் நமது சமுதாயப் பெண்கள் இந்த உறவு விஷயத்திலும் கவணமற்றவர்களாகவே இருக்கின்றார்கள். மாமி மகனுடன் கொஞ்சி விளையாடும் மதினிமார்கள் நமது சமுதாயத்தில் நிறையவே உண்டு. அதே போல் கணவனின் சகோதரர்களுடன் கொஞ்சிப் பேசும், கிள்ளிப் பழகும் மைத்துனிமார்களும் நமது சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்றார்கள். இப்படியானவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5232)

தனது மச்சான் என்ற உரிமையுடன் ஆரம்பத்தில் இருந்தே அளவு கடந்து பேசுவதினால் அல்லது பழகுவதினால் தன்னை அறியாமல் தன் சகோதரியின் கணவனுடன் தவறிழைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கணவனின் சகோதர உறவுகளை இந்தளவுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள்.

இங்கு நாம் இன்னொரு தீமையையும் குறிப்பிட வேண்டும். மனைவி எப்படி கணவனின் உறவினர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டுமோ அதே போல் தான் கணவனும் மனைவியின் அக்கா தங்கைகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தனது சகோதரியின் கணவரிடம், மச்சான் என்று கிண்டல் செய்வது, அதுபோல் அவரும் மதினி, என்று கிண்டல் செய்வது போன்ற செயல்கள் சமூகத்தில் தீமையாகக் காணப்படவில்லை.

கணவன் சம்பந்தப்பட்ட உறவினர் மூலம் ஒரு மனைவிக்கு ஏற்படும் விளைவுகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு மச்சான் மைத்துனி விவகாரத்தில் ஏற்படவே செய்யும்.

எனவே கணவன் மதினி விஷயத்திலும், மதினி தன் சகோதரியின் கணவன் விஷயத்திலும் கவனமாக நடக்க வேண்டும். காரணம் இதுவெல்லாம் ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய வாசல்களாகும்.

இந்தக் கலாச்சாரம் கைமீறிப் போய் சில இடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் கூட அக்காவையும் தங்கையையும் ஒரே நபர் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்க்கை நடத்துவதைக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் வரைமுறை வரம்பற்ற பழக்கம் தான். எனவே தான் மனிதர்களின் மனநிலைகளை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

''தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.

தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.

நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.'' (அல்குர்ஆன் 24:31)

இந்த வசனத்தில் கூறப்படும் உறவினர்கள் தவிர மற்றவர்களிடம் ஒரு பெண் ஆடை சட்டத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அல்லாஹ் சொல்கின்ற இந்த உறவுமுறைக்கு அப்பாற்பட்டவர்களிடம் ஓர் ஆண் மிக மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மதினி போன்றவர்கள் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறும் அனுமதிக்கு அப்பாற்பட்டவர்களே! எனவே மற்ற அந்நியப் பெண்களிடம் காட்டும் பேணுதலை விட இந்த உறவுகளிடம் அதிக பேணுதலைக் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தத் தொடர்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணத்திற்குச் சமம் என்று சொல்கின்றார்கள். எனவே இந்தப் பெண்கள் அந்நியப் பெண்கள் என்ற வட்டத்தையும் தாண்டியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே வீட்டுக்குள் தானே இருக்கிறோம், இது ஒரு பெரிய பிரச்சினையா? என்றெல்லாம் சமாதானம் பேசாமல் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பேணி வாழக் கூடிய பெண்களாக அல்லாஹ் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

ஆக்கம் : சகோதரி ஷப்னா கலீல்