Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ இஸ்லாமைப் புரிந்துகொள்ளாத ஆலிம்கள்! (1)
இஸ்லாமைப் புரிந்துகொள்ளாத ஆலிம்கள்! (1) PDF Print E-mail
Tuesday, 25 December 2012 11:52
Share

இஸ்லாமைப் புரிந்துகொள்ளாத ஆலிம்கள்! (1)

    எம்.ஏ.முஹம்மது அலீ      

[ "மக்களுக்கு மார்க்கம் தெரியாதவரை ஆலிம்களின் காட்டில் அடை மழைதான்!"]

தலைப்பைப்பார்த்தவுடன் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம்.

இன்ஷா அல்லாஹ் இந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் இந்த கட்டுரையை படித்து முடித்த பின் காணாமல் போகலாம் - குறையலாம் அல்லது சிலரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்லலாம்.

அல்ஹம்துலில்லாஹ்!

இந்த தலைப்பை தேர்ந்தெடுத்து எழுத எண்ணிய காரணம் இஸ்லாத்தைப்பற்றிய இன்றைய உலமாக்களின் தவறான கண்ணோட்டமே!

பொதுவாக மற்றவர்களுக்கு மத்தியில் "இஸ்லாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்" - "Islam, The Misunderstood religion!" என்று சொல்வதுதான் நமது வழக்கம். ஆனால் உன்மையாக யோசித்துப்பார்த்தால் ஆலிம்களே இஸ்லாத்தை தவறுதலாகப் புரிந்து வைத்துள்ளார்கள். அதாவது இஸ்லாத்தை சரிவர விளங்கவில்லை.

அதன் காரணத்தாலேயே அவர்களால் ஏராளமான ''பித்அத்''துகள் எனும் நூதன சடங்குகளும் சம்பிரதாயங்களும் வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணிக்கப்பட்டு கட்டிக்காக்கப்பட்டு வருகின்றன. ஒருவிதத்தில் சொல்ல வேண்டுமானால் "மக்களுக்கு மார்க்கம் தெரியாதவரை ஆலிம்களின் காட்டில் அடை மழைதான்!"

எனவேதான் தங்களின் அந்தஸ்தை தாங்களே உயர்த்திக்கொண்டு மக்களை மூலை சலவை செய்யும் காரியத்தை கணக்கச்சிதமாக தொடர்ந்து செய்து வருகிறார்கள். போலித்தனமான முகஸ்துதி செய்வதில் அரசியல்வாதிகளுக்கு நாங்களும் சளைத்தவர்களல்ல என்று காட்டிக்கொள்வதில்கூட போட்டியிட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படிச் சொன்னவுடன் அவர்கள் உடனே போர்க்கொடி தூக்கக்கூடும்... "அல்லாஹ்வே ஆலிம்களைப்பற்றி உயர்வாக தனது வேதத்தில் குறிப்பிட்டுள்ளானே" என்று!

“நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவர்களே ஆலிம்கள்”. (அல்குர்ஆன் 35:28)

உண்மைதான் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களில் முதன்மையானவர்கள் ஆலிம்கள் தான் என்று திருமறை குர்ஆன் கூறுவது உண்மைதான்; அதை எவரும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. ஆனால் அல்லாஹ் கூறும் ஆலிம்களுக்கான அந்த இலக்கணம் இன்றைய ஆலிம்களில் எத்தனைப்பேருக்கு பொருந்தி வருகிறது என்று கொஞ்சம் அசைபோட்டுப்பாருங்கள், உடனே விடை கிடைத்துவிடும்.

ஏழு வருடமோ எட்டு வருடமோ மதரஸாவில் ஓதிவிட்டு வந்தால் அவர்களை சமுதாயம் மவ்லவீ - ஆலிம் (அறிஞர்) என்று ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கண்ணியம் அளிப்பதோடு மட்டுமின்றி மார்க்க விஷயத்தில் அவர்கள் கரைகண்டவர்கள், எனவே அவர்கள் சொல்லும் அத்தனையும் உண்மையிலும் உண்மை என்று நம்புகிறது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு கிடைக்கும் பரிசு என்னவோ நம்பிக்கை துரோகம். ஆம்! சொர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் என்று வார்த்தை ஜாலம் பேசி மக்களை நரகத்தின் படு குழிக்குள் தள்ளுவதில் மற்றெல்லோரையும்விட அவர்கள்தான் முன்னணியில் இருக்கின்றனர்.

ஆலிம்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அவர்களில் பெரும்பாலானோர் தகுதியானவர்களா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். உலக நடப்பில் அறிஞர் என்று மிகச்சிறந்த அறிவாளியை மட்டுமே குறிப்பிடுவார்கள். ஆனால் இங்கோ ஏழு வருடம் மதரஸாவில் ஓதி முடித்தவுடன் அதுவும் பல மதரஸாக்களில் பாஸ் ஃபெயில் எல்லாம் கிடையாது, சேர்ந்துவிட்டாலே டைரக்ட் பாஸ்தான். அதுவும் மவ்லவீ (ஆலிம்-அறிஞர்) பட்டத்துடன்!

வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களை அறியுமுன்னரே அவர்களுக்கு அறிஞர் (ஆலிம்) எனும் பட்டம்! இது சமுதாயத்தை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல அல்லாஹ்வையும் ஏமாற்றும் செயல். உண்மைக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் மகத்தானது. ஆனால் இங்கோ ஆலிமுக்குள்ள உண்மையான தகுதியை பெறுவதற்கு முன்னரே அந்த தகுதியை ஒருவருக்கு வழங்குவது என்பது இஸ்லாமிய மார்க்க கண்ணோட்டத்தில் அப்பட்டமான வரம்பு மீறுதலே! அதனால் தான் என்னவோ உண்மையுடன் பொய்யை கலப்பதில் கொஞ்சமும் தயக்கமில்லை அவர்களிடம்! காரணம் இஸ்லாமை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்ட எண்ணம்!

ஆலிம் எனும் பட்டத்தின் பளு(wait)வை புரிந்துகொள்ளாமலேயே பல ஆலிம்கள் உள்ளனர். (இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.... நாம் முதலில் குறிப்பிட்டதுபோல ஆலிம் - அறிஞர் எனும் பட்டத்துக்கு அவர்கள் தகுதையானவர்களாக இருந்தாலல்லவா...!) அதன் காரணத்தாலேயே மஸாயில்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து திசைமாறிப் போய்க்கொண்டிருக்கின்றனர். மக்களின் உள்ளங்களில் ஈமானை, இறையச்சத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டிய அவர்களது ஈமானே கேள்விக்குறியாக இருக்கும்போது நேர்வழியை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது பேராசைதான்!

முதலில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.. "மக்களுக்கு மார்க்கம் தெரியாதவரை ஆலிம்களின் காட்டில் அடை மழைதான்!"

பின் குறிப்பு: இறையச்சத்துடன் வாழும் உண்மையான ஆலிம்களுக்கும் இக்கட்டுரைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை - கட்டுரையாசிரியர்.

இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்...