Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் ஸுன்னாவுக்கும் அல்குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு (2)
ஸுன்னாவுக்கும் அல்குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு (2) PDF Print E-mail
Monday, 22 October 2012 05:47
Share

ஸுன்னாவுக்கும் அல்குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு (2)

  மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)  

இன்று அரபு நாட்டிலும், தமிழ் நாட்டிலும் அல்குர்ஆன் மட்டும் போதும் என்று கோஷமிடுகின்ற ஒரு சிந்தனைப்பிரிவினர் அல்குர்ஆனின் ஒரு சில வசனங்களை மாத்திரம் மேலோட்டமாக விளங்கிக் கொண்டு (உதாரணமாக: இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர் வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம். -அல்குர்ஆன் 16:89) ஸுன்னா தேவையற்றது என்று கூறுகின்றனர். ஆனால் ஸுன்னாவில் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை அவர்களது வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, செத்த பிராணிகள், இரத்தம் போன்றவற்றை உண்பதை அல்குர்ஆன் முற்றாக தடைசெய்கின்றது.

'தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அழ்ழாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.' (அல்குர்ஆன் 05:03)

ஆனால், இப்பொதுத் தடையிலிருந்து செத்த மீன்களும், கல்லீரல், மண்ணீரல் என்பனவும் விலக்களிக்கப்பட்டுள்ளன என ஸுன்னா பறைசாற்றுகின்றது. இந்தக் குர்ஆனிய்யீன்கள் தங்களது குற்றில் உண்மையாளர்களாக இருந்தால் உயிருள்ள மீனையே சாப்பிட வேண்டும். ஈரல் வகைகளை உண்ணக் கூடாது. இத்தகைய வழிகெட்ட சிந்தனையிலிருந்து அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக!

இவ்விடத்தில் வாசகர்கள் மற்றுமொரு விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது அல்குர்ஆன், ஹதீஸில் இல்லாத அம்சங்களை இஜ்மா, கியாஸ் மற்றுமுள்ள சட்ட மூலாதாரங்களால்தான் புரிந்து கொள்ள முடியும் எனக்கூறுகின்றவர்கள் பெரும்பாலும் ஸுன்னாவை இரண்டாம் நிலை வஹியாகவே கருதுகின்றார்கள்.ஆனால்,

'அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.' (அல்குர்ஆன் 53:3,4) எனும் வசனமானது ஸுன்னாவும் அல்குர்ஆனுக்கு நிகரான வஹியே என்பதை உணர்த்துகின்றது.

ஸுன்னாவின் பணி பற்றிக்கருத்துக் கூறுகையில் அறிஞர் அவ்சாயி அவர்கள் 'ஸுன்னா அல்குர்ஆனின் பால் தேவையாவதை விட அல்குர்ஆன் ஸுன்னாவின் பால் அதிகம் தேவையுடையது' என்றும், யஹ்யா பின் கதீர் அவர்கள் 'அல்குர்ஆன் தொடர்பாக தீர்ப்புக் கூறக்கூடியது ஸுன்னாவே' எனக் கூறுகின்றார்கள்.

அந்த வகையில் ஸுன்னாவால் மாத்திரம் சட்டமாக்கப்பட்ட சில அம்சங்களை பின்வருமாறு நோக்கலாம்.

01. ஒரு பெண்ணையும் அவளது தாயின் சகோதரியையும், ஒரு பெண்ணோடு அவளது தந்தையின் சகோதரியையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

'(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு அழ்;ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதித்தார்கள்.' (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஸஹீஹுல் புகாரி 5108)

02. பறவைகளில் கோரைப் நகங்களால்; கிழித்தும், மிருகங்களில் கோரைப் பற்களால் குதறியும் சாப்பிடும் பிராணிகளை உண்ணுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

'விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடானெத்) அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்.' (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 3914)

03. நாட்டுக் கழுதைகள் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

'அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரி 5522)

04. திருமணம் முடித்த விபச்சாரியை கல்லெறிந்து கொல்ல வேண்டும்.

'(விபசாரம் புரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு மக்கள் கூடும்) வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) அன்று கல்லெறி தண்டனையை நிறைவேற்றியபோது அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைப்படியே நான் இவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினேன் என்று சொன்னார்கள்' (அறிவிப்பவர்: ஆமிர் அஷ்ஷஅபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: ஸஹீஹுல் புகாரி 6812)

05. காலுறை அணிந்துள்ளவர் வுழுச் செய்யும் போது இறுதியாகக் காலைக் கழுவாமல் காலுறை மேல் தண்ணீரைத் தடவுதல்.

'முஃகீரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது, நான் ஒரு பயணத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ளுடன் இருந்தேன்.

அவர்கள் (உழூ செய்ய முற்பட்டபோது) அவர்களது இரு காலுறைகளையும் கழற்றுவதற்காக நான் என் கையை நீட்டினேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவற்றை விட்டுவிடுங்கள். கால்கள் சுத்தமாக இருக்கும்போதுதான் காலுறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு, (ஈரக்கையால்) அவ்விரு காலுறைகள் தடவி (மஸஹ் செய்யலா)னார்கள்.' (அறிவிப்பவர்: முகீரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரி 206)

06. சூரிய, சந்திர கிரகணத் தொழுகைகள் அறிமுகம் செய்யப்படல்

'நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்துகொண்டிருந்தோம். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக்கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங்களும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும் வரை எஙகளுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு சூரியனும் சந்திரனும் அழ்ழாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணஙகள் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீஙகள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட (கிரகணமான)து அகற்றப்படும் வரை நீஙகள் தொழுங்கள், பிரார்த்தியுஙகள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரி 1040)

07. பொருளாதார நடைமுறைகள், பங்குடமை, கூட்டு முறை மற்றும் பங்கிடலில் முன்னுரிமை பற்றிய ஹதீஸ்கள்

'பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டுவிட்டால் பஙகாளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலையில்லை, என்று அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விதித்தார்கள்.' (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புஹாரி 2257)

08. தவறிப் போன பொருட்கள், உயிரினங்கள் என்பவைகள் தொடர்பான சட்டங்கள்

'நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன். அவர்கள், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள்.

நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்போதும், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு.

அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள் என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன். அறிவிப்பாளர் ஷுஅபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) சலமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், (நான் அறிவித்த ஹதீஸில்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா, அல்லது ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன் (அதாவது எனக்கு நினைவில்லை) என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புஹாரி 2426)

இவ்வாறாக, மேலுள்ள நபிமொழிகள் மூலம் ஸுன்னாவினது அளப்பரிய முக்கியத்துவத்தினை அறிந்த பின்பும் வஹியில் ஒன்றினை விட்டு ஒன்றினை எடுக்க கூடிய வழிகேட்டை என்னவென்று சொல்வது?

sourcee: www.dharulathar.com