Home குடும்பம் பெற்றோர்-உறவினர் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....?
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....? PDF Print E-mail
Tuesday, 02 October 2012 20:50
Share

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....?                 

உன் வம்சம் நீட்டிக்க உனக்கு மகன் பிறந்திருக்கிறான். சொல்கேட்டு பிரசவத்திருக்கும் மகனையும் மனைவியையும் காண ஓடோடி வருகிறான். கட்டிலில் துயில் கொண்டிருக்கும் மகனைக் காண்கிறான். பால் போதாமல் வீறிட்டழுது உறங்குகிறான். உரைக்கிறாள் மனைவி.

நடு இரவு. மகன் அழும் சத்தம் கேட்டு எழுகிறான். மனைவி கைகளில் வைத்து அழுகையை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். ''ஏங்க! பால் ஜீரணமாகலை மருந்து கடை திறந்திருந்தால் கிரேப் வாட்டர் வாங்கி வாங்க.''

24 மணி நேரம் மருந்தகம் தேடி ஓடுகிறான். ''எனக்கு தூக்கமே இல்லை. தொட்டில் கொஞ்சம் ஆட்டுங்க'', மனைவி சொல் ஏற்கிறான். பணியகத்திற்கு போன் வருகிறது. ''பிள்ளைக்கு பேதியாகிறது. ஆஸ்பத்திரி வந்தேன் பெட்டில் சேர்க்கச் சொல்கின்றனர். உடனே வாங்க.''

மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் 10 நாள் அலைகிறான். தொழில் கெடுகிறது. சம்பளம் பிடிக்கப்படுகிறது. சில, பல ஆயிரங்கள் செலவுடன் வீடு திரும்புகின்றனர். ''ஏங்க! போன மாதம் அப்பாயின்மெண்ட் வாங்கின மாதிரி இந்த மாதமும் அப்பாயின்மெண்ட் வாங்கணும். சளி ரொம்ப இருக்கு சாயந்தரம் வாங்கிடுங்க''. வேலைக்கு பெர்மிஷன் போட்டு வாங்கி வருகிறான். மருத்துவமனை எழுத்தர், ''சார் ரிப்போர்ட் கார்டு புல் ஆயிடுச்சு 10 ரூபாய் கொடுங்க'' கேட்கிறார்.

கொடுத்தவன் பழைய அட்டையை பார்க்கிறான். இத்தனை முறையா மருத்துவரிடம் வந்திருக்கிறோம்! அவனுக்கே மலைப்பு ஏற்படுகிறது.

3 வயது முடிந்தது. சிறந்த கல்விக்கூட தேடல் நடத்துகிறான். விருப்பமான நிறுவனங்களில் ஏறி இறங்குகிறான். சமுதாயத்தின் வீழ்ச்சி அவன் சட்டையை பிடித்து கீழே தள்ளுகிறது. முயற்சி திருவினையாக்க, நன்கொடை தந்து ஒரு கல்விச்சாலையில் சேர்ப்பித்து மகிழ்ச்சியுடன் திரும்புகிறான்.

''என்னால தினமும் ரெண்டுவேளை ஸ்கூல் போய் வரமுடியலை'' மனைவி மறுக்க ஆட்டோ அமர்த்துகிறான். காலம் சுழல்கிறது. காலாண்டு தேர்வில் ஒரு பாடத்தில் பெயிலானதால் ஆசிரியர் அழைக்கிறார். திரும்பிய பிறகு மகன் மீது தொடர் கவனம் செலுத்துகிறான். தனி கோச்சிங் ஏற்பாடு செய்கிறான்.

மனைவிக்கு தினமும் பணியகத்திலிருந்து போன் செய்து மதரஸா சென்றானா? டீயூசன் போனானா விசாரிக்கிறான். மகன் கேட்கும் செருப்பு, சூ, உடை, சைக்கிள் எல்லாம் வாங்கித் தருகிறான். விடுமுறை நாட்களை வீணாக்காமல் எதிர்காலத்துக்குப் பயனளிக்கக்கூடிய கணினி, இன்ன பிற வகை பயிற்சிகளுக்கு பணம் கட்டி தினமும் கொண்டு போய்விட்டு அழைத்து வருகிறான்.

எஸ்.எஸ்.எல்சி, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ தனி கோச்சிங் கொடுத்து அதிக மதிப்பெண் பெற வழி செய்கிறான். முன் முயற்சியாக, கல்லூரிகளை விசாரிக்கிறான். பரீட்சையில் மகன் மதிப்பெண் கூடுதலாக எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. சிறந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்கிறான். விடா முயற்சிக்குப் பிறகு விரும்பிய கல்லூரி அமைகிறது.

பட்டப்படிப்பை மகன் நிறைவு செய்கிறான். பணியில் அமர்கிறான். நாட்கள் நகர்கின்றன. பெண் பார்க்கும் படலம். தந்தையும், தாயும் நுணுகி ஆராய்ந்து பெண் தேர்வு செய்து திருமணம் நடத்தி வைக்கின்றனர். பெயரன், பேர்த்தி பிறக்கின்றனர். கொஞ்சி மகிழ்கிறான்.

மொத்தக் குடும்பத்துக்கும் காபந்தாளனாக திகழ்கிறான் தந்தை. ஒரு மகனுக்கு செய்யவேண்டிய அனைத்தையும் செய்து உலகில் வாழ நிலை நிறுத்தும் தந்தைக்கு மகன் செய்யும் உதவி என்ன?

தந்தை, தாய் மனம் நோக விடாது செயலாற்றுதல்.

இயலாமை காலத்தில் ஊன்றுகோலாக உதவுதல்.

உடன் பிறந்தோரை அரவணைத்தல்,

அன்போடு பேசுதல்,

தாய், தந்தை குறிப்பறிந்து நடத்தல்.

இறை பயம் உள்ளவனாக, அறிவைத் தேடுபவனாக, அடக்கவானாக, கருணையாளனாக, கண்ணியமிழக்காதவனாக வாழ்ந்து, அவன் வாழ்க்கையை பார்க்கும் ஊர் மக்கள் இந்த மகனைப் பெற்றெடுக்க, இவன் தந்தை என்ன புண்ணியம், இறை துதித்தல் செய்தானோ! புகழத்தக்க வகையில் வாழ்பவனே சிறந்த மகன்.

வள்ளுவம் கூறுகிறது,

''மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என் நோற்றான் கொல் எனும் சொல்''.

-சோதுகுடியான்

முஸ்லிம் முரசு ஜூலை 2012