Home குடும்பம் இல்லறம் படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை - மனித வளத்தின் உற்பத்திக்கூடம்!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை - மனித வளத்தின் உற்பத்திக்கூடம்! PDF Print E-mail
Monday, 01 October 2012 22:21
Share

படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை - மனித வளத்தின் உற்பத்திக்கூடம்!  

இல்லத்திலே இனிமையான சூழலுள்ள படுக்கையறை அமைந்து விடுமேயானால் இல்லறத்திற்கு அதுவே மிகப்பெரும் ப்ளஸ் பாயின்ட். இல்லறத்திற்கு எதிரான எந்தப் பிரச்சனையானாலும் சரி, அதைப் படுக்கையறையில் வைத்தே தீர்த்துக்கொள்ளலாம்.

டிஸ்சார்ஜ் ஆன பேட்டரிகளை சார்ஜிங் ஸ்டேஷனில் ரீ சார்ஜ் செய்வதுபோல், அன்றாட வாழ்க்கையில் அடிபட்டு அலைந்து களைந்து, களைத்து வரும் தம்பதியர் தம்மைத் தாமே ரீ சார்ஜ் செய்து கொள்ள வேண்டிய இடம் படுக்கையறைதான்.

இங்குதான் அவர்கள் பகல் பொழுதில் தாம் தொலைத்த உடல் சக்தியையும், உள்ள பலத்தையும் மீண்டும் உற்பத்தி செய்துகொண்டு அடுத்த நாளுக்காகத் தயார் செய்து கொள்ள வேண்டும். எனவே, படுக்கையறை என்பது வெறும் உறங்குமிடமட்டுமல்ல. அது ஓர் உயர்நிலை ஸ்தானம். மனித சக்தியின் பொக்கிஷ அறை - மனித வளத்தின் உற்பத்திக்கூடம்.

மகிழ்சிகரமான படுக்கையறை எப்படி இருக்க வேண்டும் என்றால், எவ்விதமான இடைஞ்சலுமின்றி, எவ்விதமான பயமுமின்றி எவ்வகையான தயக்கமுமின்றி, சுதந்திரமாக - பரிபூரணமாக தம்பதியர் இளைப்பாறக் கூடியதாக படுக்கையறை இருக்க வேண்டும்.

  இறையில்லத்தில் இருப்பதுபோன்ற மன அமைதி : 

இறையில்லத்தில் இருப்பதுபோன்ற மன அமைதியும், பாதுகாப்பு உணர்வும், தம்பதியர்க்கு அங்கே ஏற்பட வேண்டும். தூய்மையும், ஆரோக்கியமும், ஒழுங்கும் அங்கே நிலவ வேண்டும். அப்போதுதான் அது உண்மையான் படுக்கையறையாக பரிமளிக்க முடியும். இனிய இல்லறம் உருவாக முடியும். முதலில், படுக்கையறையில் ரம்மியமான சூழ்நிலை நிலவுமாறு செய்யுங்கள்.

நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் படுக்கையறைக்கு கட்டாயம் தேவை. மேலும், கன்னா பின்னா சாமான்களை அடைத்து வைக்கும் இடமாக, மட்டி வாசனை வீசும் இடமாக படுக்கையறை இருக்கவே கூடாது. உங்கள் படுக்கையறையிலேயே கரப்பான் பூச்சியும், எலியும், கொசுவும் சல்லாபித்து பல்கிப்பெருக அனுமதிக்காதீர்கள்.

  சுத்தமாக இருக்க வேண்டும் : 

அழுக்கும், வியாதிக்கிருமிகளும் நிறைந்த படுக்கை என்பது நம்மில் பலரது அடையாளமாக இருக்கிறது. ஆனால், இது எந்த அளவுக்கு ஆரோக்கியக் கேடு என்பதைப்பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.. கல்யாணத்துக்குத் தந்த தலையணையோடேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடியவர்களும் உண்டு.

படுக்கையறையில் சுத்தமும், சுகாதாரமும் கடைபிடிக்கவேண்டியது அவசியம், சிகரெட் வாசமோ மூடை மாற்றிவிடும். அனைத்து பெண்களுமே சுத்தமான சுகந்தமான வாசனையையே படுக்கையறையில் எதிர்பார்க்கின்றனர். எனவே ஆண்களே உங்களின் சுத்தமும், சுகந்தமும்தான் பெண்களை கவரும்.

நல்ல வேலையில் இருப்பான். நன்கு சம்பாதிப்பான். அவன் மனைவி ஆயிரம் ரூபாய்க்கு சேலை உடுத்தியிருப்பாள். அவன் குழந்தை நானூறு ரூபாய்க்கு கவுன் போட்டிருக்கும். ஆனால், அவன் வீட்டுத்தலையணையோ நாற்பது ரூபாய் உறையின்றி அழுக்கேறி நாறிக் கொண்டிருக்கும்.. இதுதான் பலரின் யதார்த்தமான வாழ்க்கை. வெட்கக்கேடு என்றே சொல்ல வேண்டும்.

  தேவையற்ற படங்களை மாட்டாதீர்கள் : 

படுக்கையறை சுவரிலே கன்னாபின்னாவென்று படங்களை மாட்டாதீர்கள். அற்புதமானதோர் இயற்கைக்காட்சிகள் நிறைந்த மனதை வருடிச்செல்லும் படம் ஒன்றே போதும். வேறு எந்த அலங்காரமும் தேவையில்லை. ஏனெனில் படுக்கையறையில் நீங்கள்தான் உங்கள் மனைவிக்கு அலங்காரம்; உங்களுக்கு உங்கள் மனைவிதான் அலங்காரம். மொத்தத்தில் படுக்கையில் படுத்தபடி நீங்கள் பார்வையை சுற்றி ஓட விட்டீர்களெனில் அங்கே இதமான, சுகமான, சுதந்திரமான சூழ்நிலை தெரிய வேண்டும்.

  குறிப்பாக ஆண்களுக்கான படுக்கையறை ரகசியங்கள்! 

இல்லற வாழ்க்கையில் தம்பதியர் இருவரும் தனியாக சந்திக்கும் ஒரே இடம் படுக்கையறைதான். அங்கேயும் அவசர கதியில் இயங்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதனால் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் மனைவி ஏமாற்றமடைய நேரிடுகிறது. எனவே மனைவியை கவரும் வகையில் நடந்துகொள்ள ஆண்களுக்கு சில சங்கதிகளை தெரிவித்துள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.

  ரொமான்ஸ் அவசியம் 

தாம்பத்ய உறவு என்பது இயந்திரத்தனமானது அல்ல. அது உணர்வுப் பூர்வமானது. ஏதோ கடமைக்கு செயல்படும் கணவர்களை பெண்கள் விரும்புவதில்லை. கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம் கலந்த கணவர்களையே மனைவிகள் விரும்புகின்றனர். படுக்கையறையில் உடல் ரீதியான தொடுகைகளை விட உள்ளரீதியான தொடுகை முதலில் அவசியம். அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர்.

  துணையை அலட்சியப்படுத்தக்கூடாத இடம் 

வேலை யாருக்குதான் இல்லை. படுக்கையறையில் ஆசையாய் உங்கள் துணை உங்களின் அருகில் வரும்போது வேலை பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். அப்புறம் அலுவலகத்திற்கும், படுக்கையறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அப்புறம் அன்றைய அப்செட் ஒருமாதம் வரையும் நீடிக்கலாம்.

  படுக்கையறையில் மென்மையான அணுகுமுறை 

படுக்கையறையில் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுவதை எந்த பெண்ணுமே விரும்புவதில்லை. அநேகம் பெண்கள் புகார் தெரிவிப்பது இதைத்தான். நீங்கள் வேட்டைக்காரர் போல செயல்பட படுக்கையறை ஒன்றும் கானகம் அல்ல. அங்கே மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தால் இனிய கனவுகள் உற்பத்தியாகும். இல்லையெனில் வேட்டைகாரன் கையில் அகப்பட்ட மானைப் போலத்தான் பெண்கள் உணர்வார்கள். இறுதியாக

  அப்பாடா முடிஞ்சது... 

உறவு முடிந்த உடனே எதோ கடமை முடிந்தது என்ற கணக்காக தம் அடிக்கவோ, தூங்கவோ போய்விடும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லையாம். அழகாய் ஒத்துழைத்த துணைவியின் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தம். மார்பில் சாய்ந்து செல்லமாய் ஒரு உறக்கம். தலைகோதுவது போன்ற சின்ன சின்ன ஐட்டங்களை ரொமான்ஸ் நடவடிக்கைகளை கணவர் செய்யவேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். இதெல்லாம் படுக்கையறையில் நிகழ்ந்தால் உங்கள் மனைவி உங்களின் மகுடிக்கு மயங்கிய துணைவியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

www.nidur.info