Home கட்டுரைகள் சட்டங்கள் மரணத்திற்கு முன் பங்கீடு செய்வது அன்பளிப்பே!
மரணத்திற்கு முன் பங்கீடு செய்வது அன்பளிப்பே! PDF Print E-mail
Wednesday, 09 May 2012 22:10
Share

மரணத்திற்கு முன் பங்கீடு செய்வது அன்பளிப்பே!

 காஜா நிஜாமுத்தீன் யூஸுஃபி

சொத்துக்குச் சொந்தக்காரர் உயிரோடிருக்கும்போது சொத்து பங்கீடு பற்றிய பேச்சுக்கே இடமில்லை. யாரிடமிருந்து சொத்து கிடைக்கிறதோ அவருக்கு முவ்ரிஃத் என்று சொல்லப்படும். முவ்ரிஃத் இறந்த பின்னர் தான் சொத்துக்களை பங்கீடு செய்வது பற்றிய பிரச்சனை எழும்.

ஒருவர் உயிரோடிருக்கும்போது வாரிசுரிமை சட்டப்படி அவருடைய சொத்துக்களை வாரிசுகளுக்கு மத்தியில் பங்கு வைக்க முடியாது. ஏனெனில் குர்ஆன் ஷரீஃபில் சொந்த பந்தங்களுக்கு மத்தியில் பாகப்பிரிவினை பற்றி கூறும்போது "அவர் விட்டுச் சென்ற (தரிகா) சொத்திலிருந்து இவ்வளவு பங்கு" என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. "ஒருவர் மரணித்த பின் இருக்கும் அவருடைய சொத்துக்கள் தான் அவர் விட்டுச்சென்ற சொத்தாகும்" என்பது சொல்லாமலே விளங்கும்.

 அன்பளிப்பு :

ஒருவர் தன்னுடைய ஜீவிய காலத்தில் சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்க விரும்பினால் அது அன்பளிப்பாகவே கருதப்படும். வாரிசுரிமைச் சட்டங்களில் கூறப்பட்டுள்ள அளவுப்படி கொடுக்க வேண்டிய தேவையில்லை. தன்னுடைய விருப்பப்படி யாருக்கு எவ்வளவு கொடுத்தாலும் அது அவருக்குச் சொந்தமாகிவிடும். (நூல்: அஹ்ஸனுல் ஃப்த்வா 9/311). எனினும் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்கும் விஷயத்தில் மார்க்கம் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. அதை மீறும்போது அவர் பாவியாகிறார்.

பிள்ளைகளுக்கு அன்பளிப்பு கொடுக்கும்போது அவர்களுக்கு மத்த்கியில் ஆண், பெண் என்றோ மூத்தவர், இளையவர் என்றோ பாகுபாடு காட்டக்கூடாது. எல்லோருக்கும் சமமாக பங்கு வைக்க வேண்டும். (எனினும் வேறு சில காரணங்களுக்காக ஏற்றத்தாழ்வு இருக்கலாம்).

நுஃமானுப்னு பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை தன்னுடைய மகனுக்கு அன்பளிப்பு வழங்கிய தகவலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறியபோது "உம்முடைய எல்லா பிள்ளைகளுக்கும் இப்படி கொடுத்தீரா?" என்று கேட்டார்கள். அதற்கு, "இல்லை!" என்று பதி வந்ததும், "அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். (நூல்: புகாரி 2447), முஸ்லிம் 1623)

வாரிசுரிமை சட்டத்தில் உள்ளபடி ஆணுக்கு இரண்டு பங்கு, பெண்ணுக்கு ஒரு பங்கு என்ற அளவீடு அன்பளிப்புக்கு கிடையாது. ஹதீஸில் உள்ளபடி இருவருக்கும் சமமாகவே கொடுக்க வேண்டும். (நூல்: அல்ஃபிக்ஹுல் மன்ஹஜ் 3/118)

 அன்பளிப்பில் ஏற்றத்தாழ்வு :

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்கள் இருக்கும்போது பிள்ளைகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வுடன் அன்பளிப்பு வழங்குவது தவறில்லை. அந்த காரணங்கள் பின்வருமாறு:

1. குறிப்பிட்ட ஒரு மகன் மார்க்கத்தில் பேணுதல் உள்ளவராக இருத்தல்.

2. பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதில் அதிக கவனம் செலுத்துபவர்.

3. மார்க்க சேவையில் ஈடுபடுவதால் போதுமான வருமானம் இல்லாதவர்.

4. வறுமையில் வாடுபவர்.

அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்கள் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு கொடுப்பதில் (இது போன்ற காரணங்களுக்காக) ஏற்றத்தாழ்வு காட்டியதாக கூறப்பட்டுள்ளது. (நூல்: இஆனதுத் தாலிபீன் 3/153)

அன்பளிப்பு கொடுத்த பிறகு திரும்பப் பெறுவது நல்லதல்ல. எனினும் தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுத்தவற்றை (அது அப்படியே அதே நிலையில் இருக்கும்பட்சத்தில்) தந்தை அதை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

"ஒருவர் அன்பளிப்பு கொடுத்தால் அதைத் திரும்பப் பெறுவது ஹலாலாகாது. எனினும் தந்தை மகனுக்கு கொடுத்த அன்பளிப்பைத் தவிர.. (அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்)" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ 2133)

 ஒருவருடைய பெயரில் நிலம் வாங்குதல் :

ஒருவர் தன்னுடைய மகனுக்காக ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ அவருக்கு உரிமையாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே வாங்கி ரிஜிஸ்டர் செய்து அவரிடம் ஒப்படைத்து விட்டால் அந்த நிலம் அல்லது வீடு அவருடைய மகனுக்கு சொந்தமாகி விடும். தனது மரணத்திற்குப் பின் மற்ற வாரிசுகள் அதில் பங்கு கோர முடியாது. ஆனால், தன்னுடைய மகனுக்கு உரிமையாக்கும் எண்ணம் எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு சட்ட சிக்கலுக்காக மகனுடைய பெயரில் நிலத்தை ரிஜிஸ்டர் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் அந்த சொத்தை வைத்துக் கொண்டால் இது மகனுக்கு சொந்தமாக கருதப்படாது. அதுமட்டுமின்றி இதே நிலையில் மரணித்துவிட்டால் அந்த நிலமும் மொத்த சொத்தில் சேர்க்கப்பட்டு எல்லா வாரிசுகளுக்கும் முறையாக பங்கீடு செய்யப்படும். (நூல்: கிதாபுல் ஃபத்வா 6/343)

ஏனெனில், அன்பளிப்பு யாருக்கு கொடுக்கப்படுகிரதோ அவருக்கு அந்தப் பொருளை முழு உரிமையுடன் சொந்தமாக்கிக்கொடுக்காதவரை அந்த பொருளில் அவர் சொந்தம் கொண்டாட முடியாது. நான் உனக்கு இன்ன பொருளை அன்பளிப்பாக கொடுக்கிறேன் என்று கூறி வாய் வழி ஒப்பந்தம் செய்தால் மட்டும் போதாது. அதை அவருடைய கையில் ஒப்படைக்கவும் வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஜ்ஜாஷி மன்னருக்கு அன்பளிப்பு கொடுத்தனுப்பினார்கள். மன்னர் இறந்து விட்டார். அச்சமயம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், "அவர் இறந்து, அனுப்பப்பட்ட ஹதியா நம்மிடம் திரும்பிவிட்டால் அது உனக்குத்தான். அல்லது உங்களுக்கு (எல்லா மனைவிமார்களுக்கும்) சொந்தமாகிவிடும்" என்று கூறினார்கள். (நூல்: முஸ்தத்ரக் ஹாகிம் 2716; 2/188)

அன்பளிப்பு நஜ்ஜாஷி மன்னருடைய கைக்குப் போய்ச் சேர்வதற்கு முன்னால் அது அவருக்கு சொந்தமாகிவிடுமென்றிருந்தால் அதை திரும்பப் பெற்றிருக்க மாட்டார்கள். எனவே, அன்பளிப்பு கைப்பற்றப்படும் வரை உரிமை கோர முடியாது.

 கூட்டுக்குடும்பம் :

பெற்றோரும் பிள்ளைகளுமாக பல குடும்பம் தந்தையின் தலைமையில் கூட்டாக சேர்ந்து வாழ்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து வியாபாரம் செய்கிறார்கள். இந்நிலையில் ஒரே ஒரு மகன் மட்டும் தந்தையிடம் ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு மற்றவர்களை விட்டும் பிரிந்து தனியாக வியாபாரம் செய்கிறார். இதே நிலையில் தந்தை மரணித்து விட்டால் பிரிந்து சென்ற மகனுக்கு இறந்தவருடைய சொத்திலிருந்து பங்கு கிடைக்காது என்று சொல்ல முடியாது. மற்ற வாரிசுகளுக்கு கிடைப்பது போல் இவருக்கும் சொத்து கிடைக்கும்.

ஏனெனில், வாரிசுரிமை என்பது இறந்த பின் இருக்கும் சொத்துக்களுடன் தொடர்புடையது என்றே மார்க்க சட்டம் கூறுகிறது.

தந்தை உயிரோடிருக்கும்போது ஒரு மகனுக்கு மட்டும் கொடுத்தது அன்பளிப்பாகவே கருதப்படும். தந்தை மற்ற மகன்களுக்கும் அவருக்கும் ஏற்றத்தாழ்வு காட்டுவதற்கு மேற்கூறப்பட்ட எந்த நியாயமான காரணங்களும் இல்லையானால் மற்ற எல்லா மகன்களுக்கும் சமமாக அன்பளிப்பு வழங்கியிருக்க வேண்டும்.

 கூட்டு வணிகம் :

தந்தையுடன் சேர்ந்து பிள்ளைகளும் வியாபாரம் செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் பிள்ளைகளுக்கு ஒரு தொகையை தந்தை கொடுத்து விடுகிறார் அல்லது தந்தையுடன் சேர்ந்து கூட்டாக வாழ்கிறார்களென்றால் தந்தை இறந்த பின் இருக்கும் அனைத்துச் சொத்துக்களும் அவர் விட்டுச் சென்ற சொத்தாகவே கருதப்படும். தந்தையின் ஆண், பெண் உட்பட எல்லா வாரிசுகளுக்கும் அதில் பங்குண்டு. வியாபாரம் செய்யும் ஆண் மக்கள் மட்டுமே வியாபார சரக்குகளையோ பணத்தையோ சொந்தமாக்கிக்கொள்ளக் கூடாது. (நூல்: வஸிய்யதோ வராசத் அவ்ர் தக்ஸீமெ மீராஸ் - மு ஹம்மது மன்ஸூருஸ்ஸமான் ஸித்தீகி)

தந்தையின் தலைமையில் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வாழும்போது ஒவ்வொரு மகனும் அல்லது அவர்களில் சிலர் மாதாமாதம் வருமானத்தில் ஒரு பகுதியை வீட்டுச்செலவுக்காக கொடுக்கிறார்கள். இந்நிலையில் வீட்டுச்செலவுக்குப் போக மீதமுள்ள பணம் தந்தைக்குச் சொந்தமானதாகவே கருதப்படும். எனவே, அவருடைய எல்லா வாரிசுகளுக்கும் அதில் பங்கு இருக்கிறது.

 பங்கீட்டுக்கு முன் :

ஒருவர் இறந்த பின் இருக்கும் எல்லாச் சொத்துக்களையும் உடனடியாக தங்களுக்கு மத்தியில் பங்கீடு கொள்ளக்கூடாது. இறந்தவருக்காக செய்ய வேண்டிய கடமைகளை (கஃபன், தஃபன், கடன், வஸிய்யத் போன்றவை) நிறைவேற்றிய பின்னர் தான் சொத்துப்பங்கீடு பற்றி யோசிக்க வேண்டும். பங்கீடு செய்வதற்கு முன் சொத்திலிருந்து நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் செய்யாமல் இருப்பதும் தவ்று. தேவையில்லாத - மார்க்கம் அனுமதிக்காதவற்றில் செலவு செய்வதும் தவறு.

 கஃபன், தஃபன் :

அரஃபாவில் ஒரு மனிதர் வாகனத்திலிருந்து கீழே விழுந்து மரணித்து விட்டார். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவருடைய இரண்டு ஆடைகளில் கஃபனிடுங்கள்" என்று கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

எனவே, முதன் முதலில் வீன்விரயமோ கஞ்சத்தனமோ இல்லாமல் நடுநிலையாக, (கஃபன்) துணி மற்றும் (தஃபன்) அடக்கம் செய்வதற்குத் தேவையான செலவுகளை இறந்தவரின் சொத்திலிருந்து செலவிட வேண்டும். எனினும், மனைவியுடைய கஃபன், தஃபனுடைய செலவு கணவருடைய பொருப்பாகும். மனைவியுடைய பணத்திலிருந்து செலவு செய்யக்க்கூடாது.

ஒருவர் இறந்ததிலிருந்து கப்ரில் அடக்கப்படும் வரைக்கும் தேவையான மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லாச் செலவினங்களும், கஃபன் செலவில் அடங்கும். வாரிசுகளில் யாராவது ஒருவர் கஃபன், தஃபனுக்காக தன் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்தால் பின்னர் இறந்தவரின் சொத்திலிருந்து (சொத்துப் பங்கீட்டுக்கு முன்) அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

 கஃபன் செலவுக்கு முன் :

இறந்தவரின் சொத்துக்களுடன் நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கும் கடமைகளை கஃபன், தஃபனுடைய செலவுகளுக்கு முன்னாலேயே நிறைவேற்றிட வேண்டும். உதாரணமாக இறந்தவரின் பொருள் அடமானமாக வைக்கப்பட்டிருந்தால் (அதாவது, அவருக்குச் சொந்தமான ஒரு வீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கியுள்ளார் எனில் முதலில் அவருடைய சொத்திலிருந்து அந்தக் கடனை நிறைவேற்றி அந்த(வீட்டை) அடமானப் பொருளை மீட்க வேண்டும். அந்த வீட்டைத் தவிர வேறு எந்த செல்வமும் இல்லையானால் அந்தக் கடனை அடைப்பதற்கு அந்த அடமானப்பொருளை (வீட்டை) விற்பதைத் தவிர வேறு வழியில்லை எனும் பட்சத்தில் முதலில் அந்தப் பொருளை(வீட்டை) விற்று (அடமானமாக வைத்திருந்த அந்தக்) கடன்காரர்களுக்கு கடனை அடைக்க வேண்டும். அதன் பிறகு மீதியிருக்கும் பணத்தில் தான் கஃபன் செலவு செய்ய வேண்டும்.

இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்துப்படி, ஜகாத் கடமையாகி (அந்த வருடம்) கொடுக்கப்படாமல் இருந்து விட்டால் மேலும் ஜகாத்துடைய நிஸாபும் (ஜகாத் கடமையாகும் அளவுக்குரிய தொகை) அப்படியே இருந்தால் கொடுக்க வேண்டிய ஜகாத்தை கஃபன் செலவுக்கு முன்னரே கொடுத்துவிட வேண்டும்.

-மறைச்சுடர் செப்டம்பர் 2011

www.nidur.info