Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ இணைவைப்பில் மாட்டிக்கொண்டு நரக நெருப்பில் வீழ்ந்துவிடாதீர்கள்!
இணைவைப்பில் மாட்டிக்கொண்டு நரக நெருப்பில் வீழ்ந்துவிடாதீர்கள்! PDF Print E-mail
Monday, 01 August 2011 08:04
Share

இணைவைப்பில் மாட்டிக்கொண்டு நரக நெருப்பில் வீழ்ந்துவிடாதீர்கள்! 

      எம்.ஏ.முஹம்மது அலீ      

ஒரே ஒரு முறைதான் இப்பிறவி.   எதற்காக ஷிர்க்கில் - இணைவைப்பில் மாட்டிக்கொண்டு வீணாக ரிஸ்க் (risk) எடுக்க வேண்டும்.

இணை(ஷிர்க்) வைப்பாளர்கள் செய்யும் அத்தனை வழிபாடுகளும் - அது தொழுகையாக இருந்தாலும், நோன்பாக இருந்தாலும் நிச்சயமாக அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஆகவே  இணைவைப்பின் துளிநிழல் கூட நம் மீதும், நம் குடும்பத்தார்கள் மீதும் விழாமல் (நாம்) எச்சரிக்கையாக இருப்பது மிக மிக அவசியம். இல்லையெனில் விடிய விடிய தொழுதாலும், பகலெல்லாம் நோன்பு நோற்றாலும் அத்தனையும் பாழ்.

... إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ - (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.(அல்குர்ஆன் 1;:5) ) எனும் திரும்பத்திரும்ப ஓதப்படுகின்ற திருக்குர்ஆனின் சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனத்தில் முழுமையான நம்பிக்கையில்லாமல் தொழுகின்ற தொழுகையினால் என்ன பயன்?
 
அல்லாஹ்விடமே கேட்கச்சொல்லி திருமறை வலியுறுத்தும்போது அந்த திருவசனத்தின் மீது பரிபூரணமான நம்பிக்கை வைக்காமல் இருப்பது இறைவன் மீது அவநம்பிக்கை கொள்வதாகத்தானே அர்த்தம்!
 
அல்லாஹ்விடம் முழுமையான நம்பிக்கையில்லாமல் தொழுகின்ற தொழுகை எதைச்சார்ந்தது...? சிந்தியுங்கள், அல்லாஹ் நமது ரூஹை எடுப்பதற்குள்ளாக!. எப்பொழுது மலக்குல் மவுத் வருவார் என்று எவருக்கும் தெரியாது. ஆகவே ஈமானைப் புதுப்பித்துக்கொண்டே இருப்போம். "லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்".

மறுமையில் இறைவன் நம்மை கேள்விகணக்குக் கேட்கும் அந்த நாளில் ''இறைவா! தவறு செய்து விட்டேன்... இன்னும் ஒரே ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடு நான் உனக்கே முழுமையாக அடிபணிந்து வாழ்ந்து காட்டுகிறேன்'' என்று கெஞ்சக்கூடிய அவலநிலை ஏற்படாமல்  இப்பொழுதே தப்பித்துக்கொள்ளுவோம்.

ஒரே ஒரு முறைதான் இப்பிறவி. எதற்காக ஷிர்க்கில் - இணைவைப்பில் மாட்டிக்கொண்டு வீணாக ரிஸ்க் (risk) எடுக்க வேண்டும்.

தெள்ளத்தெளிவான மார்க்கத்தை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு அற்புதமாக தந்துவிட்டு சென்றபிறகும், நடுப்பகல் சூரியனைப்போல் பளிச்சென்ற வெளிச்சத்துடன் இந்த மார்க்கத்தை விட்டுச்செல்வதாக நமது உயிரினும் மேலான உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு தெள்ளத்தெளிவான அறிவுறுத்திச்சொன்ன பிறகும்கூட நாம் வழிதவறிப்போவோமானால் - செவிடர்களாகவும், குருடர்களாகவும் இருப்போமானால் இதைவிட கைசேதம் வேறு என்ன இருக்கமுடியும்?!

''வறுமை முஃமினை குஃப்ரில் விழச்செய்துவிடும்'' எனும் நபிமொழிக்கொப்ப இன்று ''ஷிர்க்''கில் மக்கள் வீழ்ந்து கிடப்பதற்கு ஆலிம்களின் வறுமையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஒருபுறம் மஸ்ஜிதுகளில் மக்களை நேர்வழிப்படுத்துவதற்காக ''பயான்'' செய்யும் அதே ஆலிம்களே ஷிர்க்கின் வாசலை திறந்துவிடும் கொடுமையை எவரேனும் மறுக்க முடியுமா? இந்த விஷயத்தில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக அவர்கள் தென்படுவது கண்கூடாகத்தெரிகிறதே! இதைவிட சமுதாயக்கேடு வேறு என்னவாக இருக்க முடியும்? 'வேலியே பயிரை மேய்கிறது' என்பார்களே அது இந்த விஷயத்தில் சரியாகவே இருக்கிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

நேரான பாதையில் இருக்கும் நன்மக்களைக்கூட இதுபோன்ற தவறான ஆலிம்கள் வழிகெடுத்து விடுகின்றார்கள் என்பதே எதார்த்தமான உண்மை. இன்னமும் சமுதாயம் ஆலிம்களுக்கு மதிப்பளித்தே வருவதற்குக்காரணம்; அவர்கள் சமுதாய சேவைக்காக தங்களை அற்பணித்துக்கொண்டவர்கள் எனும் உயரிய காரணம் மட்டுமே. பாமர மக்களின் அந்த நல்லென்னத்திற்கு நன்றிக்கடனாகத்தான் என்னவோ ஷிர்க்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அத்தனை ''பித் அத்து''களையும் இந்த ஆலிம் பெருமக்கள் பரிசாக அள்ளிக் கொடுக்கிறார்கள்!!!! என்ன கொடுமை!

நாளை மறுமையில் ''இந்த ஆலிம் என்னை வழிதவறச்செய்து விட்டார், அந்த ஆலிம் என்னை வழிதவறச்செதுவிட்டார் என்று எவரையும் குற்றம் சுமத்தி எவரும் தப்பிக்க முடியாது. கல்வி கற்பதை இஸ்லாம் கட்டாயக் கடமைகளில் ஒன்றாக ஆக்கியிருப்பதை நினைவில் கொள்ளுவது மிகவும் அவசியம். எளிதாக விளங்கக்கூடிய இறைவேதத்தை இறைவன் தனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் வழங்கியிருப்பது நாம் அதனை படித்து சிந்தித்து தெளிவு பெற்று ஏகத்துவ கொள்கையில் நிலைத்து நிற்பதற்காகத்தான்.

வான் முட்டுமளவுக்கு பவங்களைச் செய்தாலும்கூட அவையனைத்தையும் மன்னிக்க இறைவன் தயாராகவே இருக்கின்றான், ஆனால் அவனுக்கு இணைவைப்பதை மட்டும் மன்னிக்கவே மாட்டான் என்பது இறைவனின் எச்சரிக்கையாக இருக்கும்பொழுது எதற்காக ஷிர்க்கில் வீழ்ந்து மறுமையில் கொடுமையான நரகத்தில் கிடந்து மாள வேண்டும்?!. சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே! மறந்துவிட வேண்டாம். ''நரக நெருப்பில் கிடக்கும் மனிதனை இந்த உலகிலுள்ள நெருப்பில் போட்டால் அதில் அவன் நிம்மதியாகத் தூங்குவான்'' என்பது நபிமொழி. இந்த உலகிலுள்ள நெருப்புக்குள் ஒரு மனிதன் நிம்மதியாகத்தூங்க முடியும் என்றால் நரக நெருப்பு எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தெரிய வேண்டுமா என்ன!

புனிதமிக்க இந்த ரமளானில் ஏக வல்ல இறைவனாம் அல்லாஹ்வை மட்டுமே முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே உதவிகளைக் கேட்போம். அனைத்து வகையான ''பித் அத்து''களை விட்டும் முற்றிலுமாக விலகியிருப்போம். அதன் மூலமாக ஏக இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவோம்.

மறந்துவிட வேண்டாம் إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ - (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.(அல்குர்ஆன் 1;:5) எனும் இறைவசனத்தில் நூற்றுக்கு நுறு சதவீதம் முழுமையாக நம்பிக்கை வைப்போம். அதில் ஒரு துளியளவு அவநம்பிக்கை கொண்டாலும் நமது இறைநம்பிக்கையில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதே பொருளாகும். அந்த ஓட்டையை பெரிதாக்குவதில் ஷைத்தான் கைதேர்ந்தவன். ஆகவே அந்த ஷைத்தானை வெல்லவேண்டுமானால் إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (

இய்யாக ந(அ)புது வ இய்யாக நஸ்த ஈன்) எனும் இறை வசனத்தில் முழுமையாக நம்பிக்கை வைப்போம். அதுவும் ஒவ்வொரு அமலுக்கும் பன்மடங்கு நன்மைகள் வாரி வழங்கப்படும் இந்த புனித ரமளானில் இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற அவன்மீது மட்டுமே முழுமையான நம்பிக்கை வைப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரியும் நேரான பாதையில் செலுத்துவானக, ஆமீன்.

www.nidur.info

மறக்காமல் கீழுள்ள கட்டுரையை படித்து தெளிவுபெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

''மன்னிப்பே இல்லாத பெரும் பாவம்''

     அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா     

ஷிர்க் என்னும் அரபி வார்த்தை, திருமறை குர்ஆனிலும், திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளாம் ஹதீஸ்களிலும், பல்வேறு இடங்களில் பயன் படுத்தப்பட்டிருப்பதும், அது மிகப் பெரும் பாவம் என்பதும், அதற்கு மன்னிப்பே இல்லை என்பதும், கொடிய நரகத்திற்குக் கொண்டு போய் சேர்க்கும் என்பதும், எல்லோருக்கும் தெரியும். இது குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் தானே அந்த ஷிர்க் என்னும் மாபெரும் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

ஷிர்க் அதாவது இணை வைத்தல் என்றால், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை - அவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், ஏன் நபியாகவே இருந்தாலும், - அல்லாஹ்வுக்கு இணையாக அதாவது சமமாகக் கருதுவதும்- அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள் சிறப்புத் தன்மைகள் மற்றவர்களுக்கும் உண்டு என எண்ணுவதும்- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் தனி ஆற்றல், மற்றவர்களுக்கும் இருப்பதாக நம்புவதும்- அல்லாஹ்வினால் மட்டுமே ஆகக் கூடிய காரியங்கள், மற்றவர்களாலும் ஆகும் என நம்புவதும்- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, நேர்ச்சைகளை, அறுத்துப் பலியிடுவதை மற்றவர்களுக்கும் செய்வதும்- அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திப்பது போல் மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும்- ஆகிய இவை யாவும் ஷிர்க் என்று அல்லாஹ்வின் திருமறையும், அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன.

மக்கத்துக் காஃபிர்களை 'இணை கற்பித்தோர்' என்று அல்லாஹ் கூறுவதன் காரணம் என்ன? என்பதை சிந்தித்தால் பல்வேறு உண்மைகள் புரியவரும். மக்கத்துக் காஃபிர்கள் அனைவரும் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்கள் என்று தான் நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. மக்காவில் வாழ்ந்தவர்களில் சிலர், இறை மறுப்பாளர்களாக இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இறைவனை மறுத்தவர்கள் அல்ல, அல்லாஹ்வையே இறைவனாக ஏற்றுக்கொண்டவர்கள் என்பது ஆச்சரியமான உண்மை. இது நமது சொந்தக் கருத்தல்ல.

இதோ இறைவனின் திரு மறை சான்று பகர்கிறது. ''வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்குஉணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும்தன் கைவசம் வைத்த்திருப்பவன் யார்?உயிரற்ற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்றும்கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்சமாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக''. (அல்குர்ஆன் 10:31)

வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன்,செவிப் புலனையும் பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன், காரியங்களை நிர்வகிப்பவன், ஆகிய அனைத்துமே அல்லாஹ்தான் என்று அந்த மக்கத்துக் காஃபிர்கள் தெளிவான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்

''வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்றுநீர் அவர்களிடம் கேட்டால், அல்லாஹ்' என்று அவர்கள்கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள். (திருக் குர்ஆன் 3:35) வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்று தான் அம்மக்கள் நம்பினார்கள். இருந்தும் அவர்களைத்தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்

''பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்) என்று (முஹம்மதே) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள்.'சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக! ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள்.'அஞ்சமாட்டீர்களா?' என்று கேட்பீராக! 'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தைவைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்)என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்' என்று;று கேட்பீராக! (23:84-89...) .....இவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவை யாவும் அல்லாஹ்வின் திருமறையே எடுத்து வைக்கும் ஆதாரங்களாகும். என்றாலும் அந்த மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை, எல்லோருக்கும் தெரிந்த மிகவும் எளிமையான ஆதாரத்துடன் புரிந்துக் கொள்ள இதோ!

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் இருந்த போதே- அவர்களின் தந்தை அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து வளர்ந்து, தமது 40 ஆம் வயதில்தான் இறைச் செய்தியைப் பெற்று ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை வெளி உலகத்துக்கு கூறத் தொடங்கினார்கள். ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்ட அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தமது மகனுக்கு அப்துல்லாஹ் அதாவது அல்லாஹ்வின் அடியார் என்று பெயர் சூட்டியிருப்பதிலிருந்தே அந்த மக்கள் அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா? இருப்பினும் அந்த மக்களை முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனென்றால் அந்த மக்கள், அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டிய விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சிறப்புத் தன்மைகளை தங்கள் முன்னோர்களில், நல்லோர் பலருக்கும் பங்கு வைத்தனர்.

o அவர்கள் அல்லாஹ்வை வணங்கினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்கள் வழிபட்ட சிலைகளையும் வணங்கினர்.

o அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்தனர்.அல்லாஹ்வுக்கு இணையாக தங்கள் முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களையும் அழைத்துப் பிரார்த்தித்தனர். .

o அல்லாஹ்வுக்கு ஆற்றல் உண்டு என்று நம்பினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்களில் இறந்துபோய்விட்ட நல்லோர்களுக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பினர்.

o அல்லாஹ்வுக்கு அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு இணையாக நல்லடியார்களின் உருவச் சிலைகளுக்கும் அறுத்துபலியிட்டனர்.

o அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தம் இஷ்ட தெய்வங்களுக்கும் நேர்ச்சை செய்தனர்.

o அல்லாஹ்வைத் தான் வணங்கினர். தமது முன்னோர்களில் நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த பெரியார்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பினர். அல்லாஹ்விடம் தங்களை சமீபமாக்கி வைப்பார்கள் எனக் கருதினர்.

இவற்றைத்தான் ஷிர்க் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் எவரையும் கருதக் கூடாது என்பதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக நம்புவது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் மனிதர்கள் எவருக்கும் பங்கிருப்பதாக நினைப்பது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய தனித் தன்மைகள் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக எண்ணுவது கூடாது என்பதும், மார்க்கம் அறியாத பாமர முஸ்லிமுக்கும் தெரியும்.

இப்படியெல்லாம் முஸ்லிம்கள் எவரும் கருதுவதில்லையே என்று தான் அனைவருமே கூறுவர். ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் எள்ளளவும் இப்படி ஒரு எண்ணம் இருக்க முடியாது என்பது உண்மை தான். இது தானே தவ்ஹீத் என்னும் ஏகத்துவக் கொள்கை! இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தானே முஸ்லிமாக இருக்க முடியும். இதற்கு மாற்றமான எந்த ஒரு கொள்கையையும் எந்த ஒரு முஸ்லிமும் கொண்டிருக்க முடியாதே! ஆனால் நம்மில் பலர், தம்மையும் அறியாமல் தங்களுக்கே தெரியாமல் அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்தும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பதும், தர்ஹா கலாச்சார அனாச்சார சீரழிவு அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.

நன்றி: அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா அவர்களின் ''மன்னிப்பே இல்லாத பெரும் பாவம்'' என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.