Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ மனைவியின் அருமை அறிய முதுமை வரை தாமதிக்கணுமா?!
மனைவியின் அருமை அறிய முதுமை வரை தாமதிக்கணுமா?! PDF Print E-mail
Sunday, 20 March 2011 09:23
Share

  எம்.ஏ.முஹம்மது அலீ B.A. 

[ 70 வயதிருக்கும் அவருக்கு! அவரது மனைவிக்கு அவரைவிட வயது சற்று குறைவாக இருக்கலாம். வாழுகின்ற காலங்களில் மனைவியை எடுத்ததெற்கெல்லாம் வசைபாடிய அவர்;  கடைசீ காலம் நெருங்கியபோது மனைவியின் அருமை அப்போதுதான் புரிந்துகொண்டவர்போல் புலம்பாத குறையாக கொட்டித்தீர்த்தார்.../

இவர்கள் இருவருமே மறுவுலகப்பயணம் மேற்கொண்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் அந்த வயதான தம்பதிகள் இருவரும் என்னிடம் சொன்ன வார்த்தைகள் அழுத்தமாக பசுமையாக மனதில் தங்கிவிட்டது.

பெரும்பாலான ஆண்களுக்கு மனைவியின் அருமை என்னவென்பதை புரிந்துகொள்வதற்குள் அவர்களின் வாழ்க்கையே முடிந்து போய்விடுகிறது.

வாழுகிற காலத்தில் மனைவியின் அருமை புரியாமல் மடிவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இறைவன் வழங்கிய மேன்மையான இன்னும் சொல்லப்போனால் ஒரு மகத்தான அருட்கொடையின் மதிப்பை விளங்காதவர்களாக வாழுகிற வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?

இவ்வுலகில் வாழும்போது அல்லாஹ் வழங்கிய மனைவி என்னும் பொக்கிஷத்தின் அருமையையும் பெருமையையும் உதாசீனப்படுத்தியவர்கள் மறுமையில் ஹூருல் ஈன்கள் எனும் சுவனத்து பேரழகிகளை கற்பனையில்கூட நினைத்துப்பார்க்க அறுகதையுடையவர்களா? சொல்லுங்கள்! 

'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' எனும் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கு உங்கள் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். 

மனைவியின் அருமை அறிய முதுமை வரை தாமதிக்கணுமா?!

ஒரு முதியவர் முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றி, உள்ளம் சோர்வு அடைய சோஃபாவில் ஓய்வாக சாய்ந்திருக்கிறார். பல கற்பனைகள், கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டோமோ!

முதுமை நம்மை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே... இப்படி பல எண்ணங்கள் எல்லாம் அவர் மனதில் இழையோடிக்கொண்டே இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள் லேசாக மூடிய நிலையில் இருந்தார்.

அவரின் குளிர்ந்த கை மீது மற்றவரின் உள்ளங்கை வைக்கப்படுவதனை உணர்கின்றார். அது அவரது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒத்தடம் கொடுப்பதுபோல் இருக்க உள்ளத்தில் தடவுவது போல் உணர்வு.

அந்த நிலை நீடிக்க விரும்பினார்.

அவர் கண்களிலிருந்து சூடான நீர் வழிய ஆரம்பித்தது, முதியவரின் கை மேல் வைத்த கை அப்படியே இருக்க அவரின் மற்றொரு கை முதியவரின் கன்னம்வழி வளர்ந்த கண்ணீரை துடைத்து விட்டது. அந்த அவர் வேறு யாராக இருக்க முடியும். அவரது மனைவியைத்தவிர!

காலமெல்லாம் உடன் இருந்து ஓயாத உழைத்து பணிவிடை செய்த இப்பெண்ணின் அருமைதனை இப்பொழுது அதிகமாகவே உணர்கின்றார் முதியவர்.

"நீ இருக்கும்பொழுதே இறைவன் என்னை முதலில் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன்" என அவரது வாய் புலம்ப அந்த மூதாட்டி அவரது வாயினை பொத்தி ''எல்லாம் இறைவன் அறிவான் அவன் நாட்டமின்றி ஒன்றும் நடக்காது'' என்று அவரை அமைதி படுத்துகிறாள்.

அந்த முதியவர் எண்ணிப்பார்க்கிறார்... ''காலமெல்லாம் நான் அவளுக்கு கொடுத்த ஆறுதல்... !''

தூய்மையான எண்ணமும், கடுமையான உழைப்பும். ஆழமான இறை பக்தியும் கொண்ட அந்த மூதாட்டி தந்த ஆறுதல் வார்த்தை... மிக்க சக்தி வாய்ந்ததாக அவருக்குத் தெரிந்தது. அவர் மனதில் முதுமை என்ற எண்ணம் போய் மன அமைதியை அடைந்தது.

இதுபோன்ற நிகழ்வுகள் ஒன்றா இரண்டா....

இதோ ஒரு உண்மைச் சம்பவம்:

70 வயதிருக்கும் அவருக்கு! அவரது மனைவிக்கு அவரைவிட வயது சற்று குறைவாக இருக்கலாம். வாழுகின்ற காலங்களில் மனைவியை எடுத்ததெற்கெல்லாம் வசைபாடிய அவருக்கு கடைசீ காலம் நெருங்கியபோது மனைவியின் அருமை அப்போதுதான் புரிந்துகொண்டவர்போல் புலம்பாத குறையாக கொட்டித்தீர்த்தார். 'என் மனைவி மிகவும் நல்லவள் அவளை நான் எவ்வளவு திட்டியிருக்கின்றேன். ஆனால் என் சுடுசொல்லைத் தாங்கிக்கொண்டு அவள் எப்படி என்னுடன் வாழ்க்கை நடத்தினாள் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது... அவள் ரொம்ப ரொம்ப நல்லவள். நான் தான் எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட்டு என் மனைவியை கண்டபடி மோசமாக திட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்.' என்றார், அவரைக் காணச்சென்ற என்னிடம்.

அவரது மனைவியோ ''அவரை சமாதானப்படுத்துங்கள், வருவோர் போவோரிடத்தில் எல்லாம் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். பலமுறை என்னிடம் மன்னிப்பு கேட்டவண்ணமாகவே இருக்கிறார்... அவரை எப்படியாவது சமாடானப்படுத்துங்கள்!'' என்று என்னிடம் கேட்டுக்கொண்டது இன்றும் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இவர்கள் இருவருமே மறுவுலகப்பயணம் மேற்கொண்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் அந்த வயதான தம்பதிகள் இருவரும் என்னிடம் சொன்ன வார்த்தைகள் அழுத்தமாக இன்றும் இன்னும் பசுமையாக மனதில் தங்கிவிட்டது.

பெரும்பாலான ஆண்களுக்கு மனைவியின் அருமை என்னவென்பதை புரிந்துகொள்வதற்குள் அவர்களின் வாழ்க்கையே முடிந்து போய்விடுகிறது.

ஏனெனில் திருமணம் முடித்தவுடனேயே மனைவியை சம்பளமில்லாத வேலைக்கரியாக என்று சொல்வதைவிட அடிமையாகக் கருதி வாழ்க்கையை.../ இல்லறம் என்றால் என்னவென்பதையே புரிந்துகொள்ளாமல் வாழ்கின்ற ஆண்களே அதிகம்! அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கிய பொருள்களிலேயே மிகச்சிறந்த பொருள் நல்ல மனைவிதான் என்பதை இறைவன் தனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் எடுத்துச்சொன்னதை நம்மில் எத்தனைப்பேர் விளங்கி அதன்படி வாழ்க்கை நடத்துகிறோம்.

வாழுகிற காலத்தில் மனைவியின் அருமை புரியாமல் மடிவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இறைவன் வழங்கிய மேன்மையான இன்னும் சொல்லப்போனால் ஒரு மகத்தான அருட்கொடையின் மதிப்பை விளங்காதவர்களாக வாழுகிற வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? சிந்தித்துப்பாருங்கள்.

இவ்வுலகில் வாழும்போது அல்லாஹ் வழங்கிய மனைவி என்னும் பொக்கிஷத்தின் அருமையையும் பெருமையையும் உதாசீனப்படுத்தியவர்கள் மறுமையில் ''ஹூருல் ஈன்கள்'' எனும் சுவனத்து அழகுக் கன்னிகளை கற்பனையில்கூட நினைக்க முடியுமா? அதற்கான தகுதிகள்தான் அவர்களுக்கு உண்டா?சொல்லுங்கள்! ''உலகில் நீ வாழும்போது நான் உனக்குத்துணையாக கொடுத்த ஒரு அற்புதமான அருட்கொடையான மனைவியின் மதிப்பை விளங்காத உனக்கு இங்கு சுவனத்தில் மட்டும் ஹூருல் ஈன்கள் கேட்குதோ?!'' என்று இறைவன் நம்மிடம் கேட்டால் எவ்வளவு கைசேதம்... எண்ணிப்பாருங்கள்.

இனியாவது வாழ்கையை சீர்படுத்திக்கொள்ளுங்கள். முதுமைக்கு முன்பாகவே மனைவியின் அருமையை அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.

'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' எனும் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கு உங்கள் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

உங்களுக்கு உதவுவதற்காகவே இவ்விணையதளத்தில் இல்லறத்தைப்பற்றிய கட்டுரைகளை ''இல்லறம்'' எனும் பகுதியில் தொடர்ந்தார்ப்போல் வெளியிட்டு வருகிறோம். (இதுவரை இல்லறம் பற்றிய -மீள்பதிவு செய்யப்பட்டவை உட்பட- 135 கட்டுரைகள்.../ இன்ஷா அல்லாஹ், இன்னும் தொடரும்) படித்து அறிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக நம்மைப்படைத்த அந்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்விடன் ''எல்லோருடைய இல்லறமும் நல்லறமாக, துஆச் செய்யுங்கள்.'' ஏனெனில் மறைவானவற்றின் சாவிகள் அனைத்தும் அவனிடமே உள்ளன. ''துஆ'' நமது ''தக்தீரை''(விதியை)க்கூட மாற்றும் வல்லமை படைத்தது. என்பதை மறந்துவிடாதீர்கள். 

அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

- எம்.ஏ.முஹம்மது அலீ

www.nidur.info