Home இஸ்லாம் கட்டுரைகள் தற்பெருமை கொண்ட காரூனின் குற்றச்சாட்டு!
தற்பெருமை கொண்ட காரூனின் குற்றச்சாட்டு! PDF Print E-mail
Friday, 31 December 2010 09:23
Share

தற்பெருமை கொண்ட காரூனின் குற்றச்சாட்டு!

  மவ்லவி, ஓ.கே. அஹமது முஹ்யித்தீன்  

‘தற்பெருமை கொண்ட மனிதன் உண்மையை மறைத்து மற்றவர்களிடம் உரையாடுவான். எனவே, தற்பெருமையானது ‘இறை நிராகரிப்பில்’ கொண்டு போய் விடும்.

‘எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ, அவன் சுவனம் புகமாட்டான்’ என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு.

‘பெருமை’ இறைவனைச் சார்ந்தது. அதில் பங்குபெற எவர் எண்ணினாலும், இறைவன் மன்னிக்கவே மாட்டான். ஒருவன் ‘உஹது மலை’ அளவு தங்கத்தை தர்மம் செய்ததாக எண்ணி பெருமையடிப்பானேயானால், அல்லாஹ் அவனது தர்மத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். ‘தனது மனோ இச்சைப்படி நடப்பது, கஞ்சத்தனம் செய்வது, தற்பெருமையடித்துக் கொண்டு வாழ்வது ஆகிய மூன்று குணங்களைக் கொண்டு செயலாற்றுபவனை இறைவன் விரும்புவதில்லை.

‘காரூன்’ என்ற கொடியவன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறிய தந்தை மகனாவான். ஆரம்ப நாட்களில் இவன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைத்தூதராக ஏற்று ‘தவ்ராத்’ வேதத்தை நன்கு பயின்று தேர்ச்சி பெற்றான். இவனின் ஏழ்மை நிலை கண்டு, ‘இரும்பை பொன்னாக்கும் சித்தை’ நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதன் பயனாக காரூன் பெரும் பெரும் செல்வந்தனாக உயர்ந்தான்.

‘இவனுடைய கருவூலங்களின் திறவுகோல்களை மட்டும் வலுமிகுந்த பலபேர் சிரமத்துடன் சுமக்க வேண்டியிருந்தது’ என அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகின்றான். காரூன் தனது செல்வ வளத்தை ஊர் மக்களுக்கு எடுத்துக்காட்டும் பொருட்டு செல்லுமிடமெல்லாம் கருவூல திறவுகோல்களை எடுத்துச்சென்று பெருமையடிப்பதைக் கண்டவர்கள், ‘காரூனுக்கு அல்லாஹ் வழங்கியது போன்று நமக்கும் வழங்க மாட்டானா?’ எனக்கூறி பொறாமைக் கொள்வர்.

இதுபோன்ற சொற்களை இக்காலத்திலும் மக்கள் பேராசைக்கொண்டு பேசித்திரிவதை நாம் காணத்தான் செய்கிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேரான பாதையில் நடத்திச் செல்வானாக!

காரூனின் செல்வ வளத்தைக் கண்ட நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘நீ ஜகாத் (ஏழை வரி) வழங்கக்கூடிய தகுதியை அடைந்துள்ளதால், இவ்வாண்டு முதல் ‘ஜகாத்’ கொடுத்தே ஆக வேண்டும்’ எனக் கட்டளையிட்டார்கள். ஆனால். அவனோ அவர்கள் சொல்வதை மறுத்து எதிராக செயல்படத் துவங்கினான்.

‘ஒரு பெண்ணுக்கும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் தொடர்பு உள்ளது. அப்பெண்ணை விபச்சாரம் செய்துவிட்டார்கள்’ என்ற பொய்யான ஒரு அவதூறை மக்கள் மத்தியில் கிளப்பி, அந்த வதந்தியை ஊர் மக்கள் நம்பம்படி செய்தான்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அப்பெண்ணிடம் நேருக்கு நேர் மக்கள் கூடியிருக்கும் அவையில் விசாரணை செய்கிறார்கள்.

‘காரூன் எனக்கு லஞ்சம் (கையூட்டு) கொடுத்து அவ்வாறு பொய் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். எனவே தகாத வார்த்தையைக் கூறிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்!’ என்று ஊரறிய அவள் கேட்டுக்கொண்டாள்.

இக்கூற்றைக் கேட்ட நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிர்ச்சியுற்று, ‘பூமியே! காரூனைப்பிடி!’ எனக்கூற அவ்வாறே காரூனின் காலைப் பிடித்தது பூமி. (அதாவது அவனது காலை பூமி உள்ளிழுத்துக் கொண்டது). இதைக்கண்டு அலறினான் காரூன். ‘என்னை மன்னித்துவிடுங்கள்!’ என்று கதறினான். ஒருமுறை இருமுறையல்ல! எழுபது முறை கெஞ்சினான். எனினும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனம் இரங்கவில்லை. இறுதியாக பூமி காரூனை முழுவதுமாக விழுங்கிவிட்டது.

எனவே, யார் ஒருவர் மனோ இச்சைப்படி நடப்பது, தர்மம் செய்யாது கஞ்சத்தனம் கொண்டு உலகில் வாழ்வதுமாகிய மூன்று விதமாகிய செயல்கள் செய்பவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.  (நன்றி: முஸ்லிம் முரசில் வெளியான கட்டுரை)

www.nidur.info