Home கட்டுரைகள் குண நலம் எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன!
எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! PDF Print E-mail
Saturday, 25 September 2010 08:21
Share

எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன!

இனிமையான உறவுகள் அமைவது, மற்றவர்களை நாம் சரியாகப் புரிந்து கொள்கிறோமா என்பதில் இல்லை; தவறாகப் புரிந்து கொள்வதை எப்படித் தவிர்க்கிறோம் என்பதில் இருக்கிறது.

உண்மையில், அத்தனை மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள உருவானவையே மதங்கள்.

பள்ளி என்கிற சொல் முஸ்லீம்கள் தொழுகை நடத்துகிற இடத்தை மட்டும் குறிப்பதல்ல; நமக்குக் கல்வி அறிவை போதிக்கிற இடமும்கூட!

பள்ளிக்கூடத்தில் சேர்ந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். அதை விடுத்து, நான் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தேன்; நீ அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தாய்; என் பள்ளிதான் உயர்ந்தது; உன் பள்ளி மோசமானது என்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? நிச்சயமாக எந்த மதமும் இந்தத் துன்மார்க்க போதனையைக் கற்றுத் தரவில்லை.

பள்ளி வயதிலிருந்து இன்று வரை, என்னுடைய நண்பர்களில் பலர் முஸ்லீம்கள். நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் வீடு முஹம்மது இஸ்மாயீல் என்கிற ஓர் முஸ்லீம்களுடையது. ஹஜ் யாத்திரை சென்று வந்த பெரியவர் அவர். எங்கள் மீது பெரிதும் அன்பு கொண்டவர். அவர் மட்டுமல்ல; அவரின் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள் என அவரது குடும்பமே எங்களிடம் பிரியமாக உள்ளது.

சமீபத்தில், என் மனைவியின் அறுவைச் சிகிச்சையை முன்னிட்டு, இடம் சற்றுப் பெரியதாகவும், கூடவே வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டும் இருக்கிற மாதிரியான வீடு வாடகைக்குத் தேடினேன். வெஸ்டர்ன் டைப் டாய்லெட், மனைவிக்கு மட்டுமின்றி, வயதான என் பெற்றோர்களுக்கும் வசதியாக இருக்கும் என்பதாலேயே மும்முரமாக இடம் தேடினேன்.

பெரியவர் முஹம்மது இஸ்மாயீலுக்கு நான் வீடு தேடும் விஷயம் தெரியும். அவரிடம் மாத வாடகையைக் கொடுக்கச் சென்றபோது, அவர் மிகவும் ஆதங்கத்தோடு என்னிடம், "நீங்க வேற வீடு பார்த்துக் குடி போகப் போறீங்கன்றதை நினைக்கிறப்போ வருத்தமா இருக்கு தம்பி! வெஸ்டர்ன் டைப் டாய்லெட் மட்டும்தான் பிரச்னைன்னா, கவலைப்படாதீங்க... நானே இப்ப இருக்கிற டாய்லெட்டை மாத்தி வெஸ்டர்ன் டைப் வெச்சுத் தரேன். இடம் போறலைன்னாலும் சொல்லுங்க. என் வீட்டுலேயே மாடியில ஒரு போர்ஷன் கட்டிக்கிட்டிருக்கேன். அது முடிஞ்சதும் உங்களுக்கே தரேன். அப்புறம் உங்க சௌகரியம்!" என்றார். என் நெஞ்சம் அவரின் அன்புப் பேச்சால் நெகிழ்ந்துவிட்டது.

"ஐயா! உங்க கிட்ட வாடகைக்கு இடம் கேட்டு இந்த வீட்டுக்குக் குடி வரும்போது நான் சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்; என் பசங்க வளர்ந்து பெரிசாகி காலேஜ் போகிற வரைக்கும் உங்க வீட்டுலதான் குடியிருப்பேன்னேன். எனக்கு இங்கே ஒரு கஷ்டமும் இல்லே. இடம்கூட பிரச்னை இல்லீங்க ஐயா! வெஸ்டர்ன் டைப் டாய்லெட் மட்டும்தான். ஆனா, உங்களுக்கே ஏகப்பட்ட செலவுகள் இருக்கு. இதுல நான் எப்படித் தொல்லை பண்றதுன்னுதான் உங்களைக் கேக்கலை" என்றேன்.

என் மனைவி அறுவைச் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு அவரது மருமகள்கள் உடனே வந்து பார்த்து, விசாரித்துவிட்டுப் போனார்கள். பிறகு, பெரியவரும் வந்து விசாரித்தார். அதற்குப் பதினைந்தாவது நாள், பெரியவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். எனக்குத் தகவல் தெரியவில்லை. பின்னர், அவரது கடைக்குப் போனபோதுதான் விஷயம் தெரிந்தது. "அப்பாவுக்குக் கிட்னி பிராப்ளம். ஆபரேஷன் முடிஞ்சிருச்சு. நாளன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகி விட்டுக்கு வந்துடுவாரு!" என்று அவரது பெரிய மகன் சொன்னார்.

பெரியவர் வீட்டுக்கு வந்ததும், அவரைப் போய்ப் பார்த்து உடல்நிலை பற்றி விசாரித்தேன். "தம்பி! வெஸ்டர்ன் டாய்லெட் வெச்சுத் தரேன்னு சொன்னேன். அதுக்குள்ளே திடீர்னு நான் ஆஸ்பத்திரியில சேரும்படி ஆயிருச்சு. ஒண்ணரை லட்ச ரூபா செலவழிஞ்சிருச்சு. கவலைப்படாதீங்க. சீக்கிரம் உங்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் வெச்சுக் கொடுக்க ஏற்பாடு பண்றேன்" என்றார்.

"ஐயா! முதல்ல உங்க உடம்பைப் பார்த்துக்குங்க. வெஸ்டர்ன் டாய்லெட் பிரச்னையை அப்புறம் பார்த்துக்கலாம்" என்றேன். "அதுக்கென்னங்க தம்பி பெரிசா செலவழிஞ்சுடப் போகுது! ஏழாயிரமோ எட்டாயிரமோ ஆகும். பரவாயில்லை. இங்கே மாடிப் போர்ஷன்லகூட அதான் வைக்கலாம்னு இருக்கேன்" என்றார்.

அப்போது என் மனசில் ஓர் எண்ணம் தோன்றியது. "ஐயா! பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னே இங்கே குடி வந்தேன். அப்போ ரூ.3,000 மாத வாடகை. ஆனா, ரூ.25,000-ம்தான் அட்வான்ஸ் கொடுத்தேன். இத்தனை வருஷத்துல, இப்போ நான் ரூ.5,000 மாத வாடகை தரேன். (இந்தப் பகுதியில் நான் இருக்கும் இடத்துக்கு அது நிச்சயம் குறைவான வாடகைதான்!). நியாயமா பத்து மாச அட்வான்ஸ் தரணும் நான். நீங்களும் கேட்கலை; நானும் தரலை. இப்போ வெஸ்டர்ன் டாய்லெட் வேற வெச்சுத் தரேன்றீங்க. உங்களுக்கும் ஏகப்பட்ட செலவு இருக்கு. அதனால, நான் இன்னொரு 25,000 ரூபாய் புரட்டிக் கொடுக்கறேன். அட்வான்ஸ் ரூ.50,000-மா கணக்கு இருக்கட்டும்" என்றேன்.

"அட, என்னங்க தம்பி! பணம் கிடக்கட்டும். உங்களுக்கும் எவ்வளவு செலவு இருக்குதுன்னு எனக்குத் தெரியும். அதனால, அட்வான்ஸுக்காகச் சிரமப்படாதீங்க. கொடுக்கலேன்னாலும் பரவாயில்லே. நானே என் செலவுல வெஸ்டர்ன் டாய்லெட் வெச்சுத் தரேன். உங்களால முடிஞ்சுதுன்னா கொடுங்க. அதுக்காக கடன்கிடன் வாங்கியாவது எனக்குத் தரணும்னு இல்லே. கையில கிடைக்கிறப்போ கொடுங்க. சிரமப்படாதீங்க!" என்றார்.

"என்னங்க ஐயா, ஒரு வீட்டு ஓனர் மாதிரியே பேச மாட்டேங்கிறீங்களே?" என்றேன் குரல் நெகிழ. "நீங்க மட்டும் குடியிருக்கிறவர் மாதிரியா நடந்துக்கிறீங்க?" என்று சொல்லிச் சிரித்தார். "புரியலீங்களே!" என்றேன். "நீங்க அந்த இடத்துக்குக் குடி வர்றதுக்கு முன்னாடி ஐந்தாறு குடும்பங்கள் குடியிருந்துட்டு காலி பண்ணிட்டுப் போனாங்க. அவங்கள்ல யாரும் உங்களை மாதிரி டாண்ணு ஒண்ணாந்தேதியன்னிக்கு வாடகையைக் கொடுத்தது இல்லே. நாங்க பல தடவை கேட்டுக் கேட்டு, பத்தாம் தேதி, பதினொண்ணாம் தேதின்னு தருவாங்க. சில பேர் ரெண்டு மாசம், மூணு மாசம் சேர்த்து வெச்சுக்கூட கொடுத்திருக்காங்க. வாடகை என்னாச்சுன்னு அதிகாரமா கேட்க எனக்கு நீங்க வாய்ப்பே கொடுக்கலீங்களே? அப்புறம் நான் எப்படி வீட்டு ஓனர் மாதிரி பேசுறது?" என்று சொல்லி மறுபடி சிரித்தார். "நீங்க ஒவ்வொரு தடவை வாடகை கொடுக்க வரும்போதுதான் எனக்கே ஞாபகம் வரும், ஆஹா, ஒண்ணாந் தேதி ஆயிருச்சா, மாசம் பிறந்திருச்சான்னு!" என்றும் சொன்னார்.

அடுத்த ஒரு வாரத்தில் பணம் புரட்டி, அவரிடம் ரூ.10,000 கொடுத்தேன். "இப்போதைக்குக் கிடைச்சது இவ்ளோதாங்க. நான் சொன்னபடி இன்னும் ரூ.15,000 தரவேண்டியிருக்கு. மாசா மாசம் 5,000 வீதம் மூணு மாசத்துல கொடுத்து, அட்வான்ஸை 50,000-மா ரவுண்ட் பண்ணிடறேன்" என்றேன். "அட என்னங்க தம்பி நீங்க! என்னை கந்து வட்டிக்காரன் மாதிரி ஆக்கிட்டீங்களே! நான்தான் அட்வான்ஸே வேணாம்னு சொல்றேனில்லே. சரி, ரூ.35,000 அட்வான்ஸ்னே இருந்துட்டுப் போகட்டும். சிரமப்படாதீங்க" என்றார்.

அவர் சொன்னபடி, வெஸ்டர்ன் டாய்லெட் வைத்துக் கொடுத்துவிட்டார். நான்தான் அவருக்கு இன்னும் ரூ.15,000 தரவேண்டியுள்ளது. இந்த மாதம் வாடகை தரும்போது, "ஐயா! என் மகளைக் கல்லூரியில் சேர்க்க எப்படியும் நான் இந்த மாசம் லோன் போடப்போறேன். அதுல மிச்சம் 15,000 ரூபாயை உங்களுக்குக் கொடுத்துடறேன்" என்றேன், சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்கிற குறுகுறுப்பில் உண்டான குரல் கம்மலோடு.

"அட, அதை இன்னும் நீங்க மறக்கலீங்களா தம்பி? உங்க சௌகரியப்படி கொடுங்க. முடியலேன்னாலும் வருத்தப்படாதீங்க" என்றார் பெரியவர் முஹம்மது இஸ்மாயீல்.

ஒவ்வொரு முஸ்லிம் பண்டிகைக்கும் அவர்கள் வீட்டிலிருந்து கேக் வந்துவிடும். ஒவ்வொரு தீபாவளிக்கும் நாங்கள் செய்கிற ஸ்வீட்டை அவர்களுக்குத் தருவோம். ஒருமுறை, மாடியில் குடியிருக்கும் அவரது மகன் வீட்டிலிருந்து சமையல் வாசனை ‘கமகம’வென்று அடித்தது. என் மனைவி விளையாட்டாக அந்த மருமகளிடம், "என்னங்க, வாசனை தூக்குதே! நாக்குல எச்சில் ஊறுது" என்று சிரித்துக்கொண்டே சொல்லப் போக, கொஞ்ச நேரத்தில் சமையல் முடிந்து, ஒரு கிண்ணம் நிறைய கமகம சாம்பார், பொரியல் என வந்துவிட்டது. "அடடா! விளையாட்டுக்குச் சொன்னா, ஏங்க சிரமப்படறீங்க?" என்று சொன்னாலும், அவர்கள் அன்போடு கொடுத்ததை மகிழ்ச்சியோடு உண்டோம். ஆனால், இது மட்டுமல்ல இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம்! பண்ட மாற்றம் ஒரு குறியீடு மட்டுமே! மனசுகளைப் பரிமாறிக் கொள்வதுதான் உண்மையான ஒற்றுமை.

நன்றி: ரவிபிரகாஷ்