Home கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்
உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் PDF Print E-mail
Monday, 03 May 2010 06:44
Share

Image result for உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்

உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்

     ஏ.பீ. முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)      

[ பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையில் காலம் காலமாக திருமணம் செய்வதால் குட்டையான உருவம், கோரமான முகஅமைப்பு போன்ற உடற் கோளாறுகள், மனக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

நகரத்திலுள்ள மக்கள் குழந்தை பிறக்குமுன்னரும் அதற்குப் பின்னரும் இளம்பிள்ளை வாதம், மற்றும் உடல் கோளாறு வராமல் நோய் தடுப்பு ஊசி, மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வசதி கிராமங்களில் இல்லாததால் பிறக்கும் குழந்தைகள் இளம்பிள்ளை வாதம் மற்றும் உடல் ஊனம் போன்றவற்றவைகளுடன் பிறக்கின்றன.]

தமிழகத்தில் மாற்றுத் திறனுடையோருக்கு தனித் துறை ஏற்படுத்தி அதனை தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. மாற்றுத்திறன் என்பது உடல் ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் வளர்ச்சி குன்றியோர் போன்றோர் அடங்குவர்.

சாதாணமாக மேற்கண்ட உடல் பாதிப்புள்ளோர் பிறவியிலோ, உடல் நோவினாலோ, விபத்துக்காரணமாகவோ, பரம்பரை(ஜெனி) கேளாறு காரணமாகவோ ஏற்படலாம். அதனால் வாழ்வில் மனிதர்கள் முடங்கி விடக்கூடாது என்பதினை வலியுறுத்தவே இந்த கட்டுரையினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நான் புதுக்கல்லூரி மாணவனாக 1967ஆம் ஆண்டு இருந்தபோது விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது ஒருநாள் மாலை நேரம் நண்பர்களுடன் பேச்சு வாக்கில் ஒரு போட்டி எழுந்தது. அதாவது மேல்மாடியிலிருந்து கால் செருப்புடன் கீழே குதித்தால் அரை ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். நான் அந்த சவாலை எடுத்துக்கொண்டு தோல் செருப்புடன் கீழே குதித்தேன். குதித்த பின்பு என்னால் நடக்க முடியவில்லை. உடனே நண்பர்கள் என்னை சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்துச் சென்றார்கள்.

டாக்டர் அரை ரூபாய் பந்தயத்தினைக் கேட்டு பயித்தியக்காரத்தனமான செயல் என்று சொல்லி இரண்டு கால் முட்டிக்குக் கீழே கிரண்டைக்கால் வரை கணமான ''பிளாஸ்டர் ஆப் பேரிஸ்'' பேண்டேஜ் போட்டு அனுப்பினார்கள். ஆனால் அதன் பின்பு தான் சோதனை ஆரம்பித்தது. அப்போது வெஸ்டர்ன் கிளாசட் டாய்லட் என்பதெல்லாமில்லை. என் நண்பர்கள் அஜ்மல் கான், அபுதாகிர் போன்றோர் என்னை சுமந்து கொண்டு டாய்லட்டிற்குச் கூட்டிச் சென்று பின்பு அழைத்து வரும் சிரமம் சொல்லமுடியாது. ஆகவே கால் ஊனம் என்றால் எப்படியிருக்கும் என்று அப்போது உணர்ந்தேன்.

அதன் பின்பு என் கல்லூரி தோழன் நாமக்கல் மாவட்டம் சின்னக்கரிசல் பாளையம் முத்துசாமி கால் ஊனமுற்றவரை என் அறை நண்பராக எடுத்துக் கொண்டு இரண்டாண்டுகள் அவருக்கு சில சேவைகள் செய்தேன். அந்த நண்பர் இன்றும் சென்னை வந்தால் என்னைப் பார்க்காமல் செல்லமாட்டார்.

இது போன்று மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு நல்ல நண்பர்கள் அமைவதினைக் காணலாம். அது போன்ற ஒரு செய்தியினை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். அந்தப்படம் ஆங்கிலச் செய்தி கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை குளத்தூர் பகுதியினைச் சார்ந்த 33 வயதான ஹுஸைனுக்கு 22 வயது வரை வாழ்க்கை இருட்டறையாக இருந்தது. ஏன்? அவருக்கு பிறவியிலே இரண்டு கைகளும் இல்லை. ஆகவே தன் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளே முடங்கிக் கிடந்தார். அவருக்கு விடிவுகாலம் அவருடைய நண்பர் சந்தோஷ் வடிவில் வந்தது. சந்தோஷ் தன் நண்பனான ஹ_சைனைக் கூட்டிக் கொண்டு ஊனமுற்றோர் எப்படி வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பல பேரைக் காட்டினார். உடனே அவர்கள் போல தானும் முன்னேற வேண்டுமென்று அவருக்கு ஆவல் உந்தியது.. இருக்கிறதே தன் அண்ணன் ஷாகுல் ஹமீது செல் ஃபோன் ரிப்பேர் ஷாப். ரிப்பேர் செய்வதிற்கு இரண்டு கைகள் வேண்டுமே என்று அவர் நினைக்கவில்லை.

இறைவன் கொடுத்த இரண்டு கால்களில் உள்ள பத்து விரல்களைக் கொண்டு செல்ஃபோன் ரிப்பேர் செய்யும் கலையினைக் கற்றுக் கொண்டு பதினொன்று ஆண்டுகளாக தன் சிரித்த முகத்துடன் தன் பெயரிலே, ''ஹுஸைன் லட்சியப்படை'' என்பதினையும் உருவாக்கியுள்ளார் என்று நினைக்கும் போது உங்களுக்கு ''வாழ்க்கை வாழ்வதற்கே'' என்று புரிகிறதல்லவா?

சீன பழமொழி ஒன்று சொல்கிறது, ''ஒருவன் மரணத்திற்கு முன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்தருக்க வேண்டும் மற்றும் பத்தாயிரம் மைல்கள் நடந்திருக்க வேண்டும்''. அது முடியுமா என்று நீங்கள் கேட்கலாம்? முடியும் என்பதினை சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் தனது எட்டு வருட வாழ்க்கையில் 15000 கிலோ மீட்டர் பயணம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி சரித்திரம் படைத்திருக்கிறார்.

பிரிட்டிஷ் எழுத்தாளர்-நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், ''கடவுள் உடல் என்ற ஒரு முகத்தினை உனக்குக் கொடுத்திருக்கிறார், இன்னொரு முகத்தினை உன்னுடைய விடா முயற்சி மூலம் தான் உருவாக்க முடியும்'' என்று சொல்கிறார். மயிலுக்கு இறைவன் மிகவும் அசிங்கமான கால்களையும், அழகான தோகையையும் கொடுத்துள்ளான். ஆனால் மயில் தோகையினை எப்போது விரித்து மகிழ்ச்சியில் ஆடுகின்றதோ அப்போது தான் அதன் அழகு வெளியுலகத்திற்குத் தெரியும்.

இன்னொரு குட்டிக்கதையும் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு காட்டில் கலைமான் ஒன்று நீர் சுனையில் தண்ணீர் அருந்தச் சென்று தன் தலையினைக் கவிழ்த்தது. அப்போது அதன் அழகான பல கிளைகள் உள்ள கொம்பு தெரிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தது. பின்பு கால்களைப் பார்த்தது. அவை ஒல்லியாக இருந்தது. மானுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. அப்போது ஒரு புலி மானை வேட்டையாட அதன் மீது பாய்ந்தது. உடனே மான் அரண்டு ஓட்டம் பிடித்தது. மானின் மெலிந்த கால்கள் அதற்கு வேகமாக தப்பித்து ஓட உதவி செய்தது. ஆனால் பல கிளைகள் உள்ள கொம்பு செடி, கொடிகளிடம் மாட்டி அது வேகமாக ஓடுவதிற்கு தடங்களாக இருந்தது. அப்போது தான் மானுக்குப் புரிந்தது புலியிடமிருந்து தன் மெலிந்த அழகில்லாத கால்கள் தான் தன்னைக் காப்பாற்ற உதவியது என்று. ஆகவே தனது கிடைக்கும் அல்லது படைத்த படைப்பினை பயன்படுத்தி முன்னேறுவது தான் வாழ்க்கையினுக்கு பாது காப்பளிக்கும்.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் கேரளாவில் உள்ள வர்கலாவிற்கு சுற்றுலா வந்து போட் ஹவுஸில் தங்கியிருந்தார். இரவில் அவர் பவுர்ணமி நிலவின் அழகினை ரசிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் போட்ஹவுஸ_க்கு உள்ளேயிருந்ததால் நிலா தெரியவில்லை. கொஞ்சம் மேகமாக இருந்ததால் நிலா வர தாமதமாகிறதோ என எண்ணினார்.தூக்கம் வேறு கண்ணைச் சொருகியது. உடனே மின் விளக்கினை அணைத்தார். என்ன ஆச்சரியம் நிலாவின் வெளிச்சம் அவருடைய போட் ஹவுஸ் ஜன்னல் வழியாக நுழைந்தது. உடனே வெளியே வந்தார் மனதிற்கு இதமான காற்று, ஓடும் நீருடைய சலங்கை சலசலப்பு, நீருக்கு வெளி துள்ளிக் குதிக்கும் மீன்கள், ஆற்றில் நீர் அருந்தும் மான் கூட்டங்கள் அனைத்தினையும் பார்த்து அவருடைய சுற்றுலா பயண பலனை அடைந்தார். ஆகவே மனிதன் தன்னம்பிக்கையிழந்த சூழலிலிருந்து வெளியே வந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியுமென்று உங்களுக்கு உணர்த்துமென்று நினைக்கிறேன்.

பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையில் காலம் காலமாக திருமணம் செய்வதால் குட்டையான உருவம், கோரமான முகஅமைப்பு போன்ற உடற் கோளாறுகள், மனக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

நகரத்திலுள்ள மக்கள் குழந்தை பிறக்குமுன்னரும் அதற்குப் பின்னரும் இளம்பிள்ளை வாதம், மற்றும் உடல் கோளாறு வராமல் நோய் தடுப்பு ஊசி, மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வசதி கிராமங்களில் இல்லாததால் பிறக்கும் குழந்தைகள் இளம்பிள்ளை வாதம் மற்றும் உடல் ஊனம் போன்றவற்றவைகளுடன் பிறக்கின்றன. அவர்களை கவனிக்காததால் நாணமுற்று, உடல் கூனி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சிலருக்கு வயதானால் கூட திருமணம் செய்யா நிலை ஏற்படுகிறது.

காது கேளாதோர், வாய் பேசாதோர், கண் பார்வையற்றோர் போன்றோர்கள் அவர்களுக்கு செயற்கை முறையில் அந்தத்திறனைக் கொடுக்கக்கூடிய கருவிகள் வாங்கத் திறனில்லாததால் பல கேலிப் பேச்சுக்களுக்கும் ஆளாகி ஒன்றும் செய்ய முடியாமல் பலர் இருக்கின்றனர்.

இன்றைய நவீன உலகில் சிகிச்கை செய்ய முடியா நோயே இல்லலையெனலாம். ஆகவே மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த உதவிகளை முஸ்லிம் அமைப்புகள் செய்யலாம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒருவன் ஊனத்தினைக் காரணம் காட்டிக் கேளி பேசுவதினை முற்றிலும் வெறுத்தார்கள். இன்றும் பல ஊர்களில் ஒருவனுடைய ஊனத்தினைச் சொல்லி (ஆந்தக்கண்ணன், கோலிகாலி, கோனக்கழுத்தன், பனங்கா முகரி, நொண்டிப்பைய, ஊமைப்பைய, ஒட்ட வாயன், பூச்சிக்கண்ணன் போன்ற பெயர்கள்) அழைப்பதினைக் காணலாம். அதனை முதலில் நிறுத்த மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் நிலையில் நாம் இருந்தால் நம் மனம் எப்படி புண்படும் என்று நினைக்க வேண்டும். அதற்கான பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் இயக்கங்கள் மாற்றுத்திரனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு போதிய உதவிகளைச் செய்யவேண்டும். அரசு உதவிகள் மற்றும்; தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.

மக்களுக்குத் தொண்டு செய்வதே அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயலானது என்று அறிந்து செயலாற்ற வேண்டும்.

www.nidur.info

''jazaakallaahu khairan'' posted by: MUDUVAI HIDAYATH

www.nidur.info