Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ இஸ்லாமியர்களா, முஸ்லிம்களா?
இஸ்லாமியர்களா, முஸ்லிம்களா? PDF Print E-mail
Friday, 22 January 2010 08:28
Share

இஸ்லாமியர்களா, முஸ்லிம்களா?

  M.A.முஹம்மது அலீ.B.A.  

தமிழ் பேசும் எழுத்தாளர்களாகட்டும் பேச்சாளர்களாகட்டும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை செய்து கொண்டே இருக்கிறார்கள். 

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் சென்னை புதுக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது; இஸ்லாமிய சரித்திர பேராசிரியர், ஸயீத் அப்பாஸ், ''தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது முஸ்லிம்கள் என்று குறிப்பிடாமல் இஸ்லாமியர்கள் என்று பெரும்பாலும் குறிப்பிடுகிறார்கள்; இது தவறாகும் என்றார். அவர் குறிப்பிட்டது முற்றிலும் சரியே.  

இஸ்லாம் என்பது நமது மார்க்கம்; அதைப் பின்பற்றக்கூடிய நாம் முஸ்லிம்கள்; இதுதான் சரியான சொல்லாடல். அதை விடுத்து நாம் நம்மை இஸ்லாமியர்கள் என்று எழுதுவதோ பேசுவதோ குர் ஆனின் சொல்லுக்கு மாற்றமாகும்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்பற்றி அல்லாஹ், திருமறையில், ''அவர் யஹூதியாகவோ நஸாராவாகவோ இருக்கவில்லை: மாறாக முஸ்லிமாகத்தான் இருந்தார்'' என்று கூறுவதை எப்படி தமிழ் முஸ்லிம்கள் உதாசீனப்படுத்துகின்றனர் என்பதை நினைக்கும்போது உண்மையில் ஆச்சர்யமாகாத்தான் இருக்கிறது! 

இது எந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது என்று சொன்னால்; இன்று தமிழக அரசு, முஸ்லிம்கள் சம்மந்தமாக ஏதேனும் செய்தியோ அறிக்கையோ வெளியிடும்போதுகூட 'முஸ்லிம்' என்ற சொல்லை பயன்படுத்தாமல் 'இஸ்லாமியர்' என்ற சொல்லை வழமையாக பயன் படுத்தக்கூடிய அளவுக்கு ஆகிவிட்டது.

இன்று வந்த ஒரு ஈ மெயிலில் ''இணையதில் இஸ்லாமியர்களின் பங்கு" என்று இருந்தது. அடுக்கு மொழி அழகுதான். ஆனால் அடுக்கு மொழியின் அழகைவிட அல்லாஹ் எப்படி குறிப்பிடுகிறானோ அவ்வாறு குறிப்பிடுவதுதான் அதைவிட அழகு. ''இணையத்தில் முஸ்லிம்களின் பங்கு'' என்று குறிப்பிடுவதுதான் சரி.

பழங்கால; ஏன் நிகழ்கால இலக்கியங்களில்கூட இஸ்லாமியர்கள் என்ற சொல்லாடல் மலிந்து காணப்படுகிறது. இலக்கியவாதிகள் அதனை பயன்படுத்துவதால் அவை சரியானதாக ஆகிவிடாது.

ஹிந்து மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் ஹிந்துக்கள்; கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் கிறிஸ்தவர்கள்; இஸ்லாத்தை பின்பற்றக் கூடியவர்கள் முஹம்மதியர்கள் என்று வேண்டுமென்றே ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டு வந்ததை இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சில சரித்திர ஆசிரியர்கள் பின்பற்றியது பலத்த எதிர்ப்புக்குள்ளாகி அந்த ''முஹம்மதியர்கள்'' என்ற சொல்லாடல் மறைந்தது. ஆனால் அதற்குப்பதிலாக இந்த ''இஸ்லாமியர்கள்'' என்ற சொல்லாடல் எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது.

''இஸ்லாமியர்'' என்பது வட்டார வழக்குச்சொல் ''முஸ்லிம்'' என்பது உலகலாவிய சொல்.

இஸ்லாமியர், முஸ்லிம்   இரண்டுமே ஒரே சொல்லிலிருந்து வந்தது தானே என்று சிலர் வாதிடுகின்றனர். (அதாவது இஸ்லாம் முஸ்லிம்) .  உணவு என்பதும் உணவு உண்பவர் என்பதும் உணவு எனும் ஒரே சொல்லிலிருந்து வந்ததுதான் என்றாலும் இரண்டும் ஒன்றாகிவிடுமா? நம்மைப்படைத்த அல்லாஹ்வே நம்மை முஸ்லிம் என்றழைக்கும்போது இதுபோன்ற வாதங்களையெல்லம் தேவையா?

அல்-குர்ஆன் தன்னைப்பற்றிக் கூறும்போது "பயபக்தியுள்ளவர்களுக்கு இது நேர்வழி காட்டும்" என்கிறது.   நம்மைப் படைத்தவனின்  சொல்லுக்கு மாற்றம் செய்யாமல் இருப்பதே பயபக்தி உள்ளவர்க்கு அழகு.  தடுக்கி விழுந்தால் பித்அத்.. பித்அத்.. என்று முழங்கக்கூடியவர்கூட இதனை சரிகாணாமல் இருப்பது ஆச்சரியமே!

இஸ்லாமியர்கள் என்று குறிப்பிடுவது மொழிக்கழகு என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் மொழியைவிட ஒரு முஸ்லிமுக்கு அவரது மார்க்கம் உயர்வானது என்பதை மறந்துவிட வேண்டாம். ஆகவே அகிலத்தின் அதிபதி அல்லாஹ் நம்மை எப்படி அழைக்கின்றானோ அப்படியே நாமும் ''முஸ்லிம்'' என்றே   அழைப்போம்,  குறிப்பிடுவோம்; எழுதுவோம்.

இதைக்குறிப்பிடும் இவ்வேளையில் இன்னொரு விஷயத்தையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.. சில ஆன்டுகளுக்கு முன்னால் சென்னையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் ஒருவரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தாளை பூர்த்தி செய்யும்போது 'மதம்' எது?'' என்று கேட்கப்பட்டிருந்த இடத்தில் 'இஸ்லாம்' என்று பூர்த்தி செய்தேன்.

அதைப்பார்த்துவிட்டு அங்கிருந்த ஒரு மாற்றுமத சகோதர பேராசிரியர் '''மதம் எது?'' என்ற கேள்விக்கு ''முஸ்லிம்'' என்று எழுதாமல் ''இஸ்லாம்'' என்று எழுதியிருக்கிறீர்களே!'' என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்.

உண்மையில் ஒரு பேராசிரியரே அப்படி கேட்டதில் எனக்கும் ஆச்சர்யம். பிறகு அவரிடம் ''இஸ்லாம் என்பது மார்க்கம்; அதை பின்பற்றக்கூடியவர்கள் முஸ்லிம்கள்'' என்று விளக்கமளித்தேன். புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.

மறந்துவிட்டதீர்கள்; இஸ்லாம் நமது மார்க்கம், அதை பின்பற்றக்கூடிய நாம் முஸ்லிம்கள்.

அல்லாஹ், நமது சொல்லையும் செயலையும் அழகானதாக ஆக்கி வைப்பானாக.

-adm. www.nidur.info